Friday, 22 June 2012

ஒரு மகத்தான மனிதரை மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும்


         ஒரு மகத்தான மனிதரை மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும்   
  
     இந்தியா பல்துறை வளர்ச்சி பெற்று வல்லரசு அந்தஸ்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய நாடு.
     சமதர்ம்ம சோசலிசத்தையும் சகிப்புத் தன்மையும் தாரக மந்திரமாகக் கொண்டு அன்னிய நாட்டினரையும் வசீகரிக்கும் சக்தியோடு வல்லரசு அந்தஸ்தை நோக்கி அடியெடுத்து முன்நோக்கிச் சென்று கொண்டே இருக்கின்றது.
     கல்வி, அறிவியல், ஆன்மீகம் தொழில் நுட்பம், பொருளாதாரம் ஆகியத்துறைகளில் தன்னிறைவு பெற்றுவிட்டோம் என நெஞ்சை நிமிர்த்தி எக்காளமிடலாம்;  அந்த அளவிற்கு இந்தியாவின் மேன்மை உயர்ந்துள்ளது.
     இருப்பினும் நம் நாட்டின் ஆட்சியாளர்கள் மட்டும் ஏனோ அன்னிய நாடுகளுக்கு இந்தியா மீது இருக்கும் நம்பிக்கைக்கும் மரியாதைக்கும் அளவுக்குக்கூட இவர்களுக்கு இல்லாமல் போகிறது.  அதற்குக் காரணம் அரசியல்  கட்சிகளிடையே வலுவான தலைமை இல்லாததும் தவறு செய்பவர்களைத் தட்டிக் கேட்கும் சக்தி இல்லாமல் போனதுமே ஆகும்.
     இதனால்தான் நம் நாடு இன்று லஞ்சத்திலும் ஊழலிலும் தீவிரவாதத்திலும் பிரிவினைவாதத்திலும் சிக்குண்டு சிதறிக்கிடக்கிறது.  இது சர்வ சக்தி வாய்ந்த இந்திய தேசத்திற்குப் பொருத்தமானதன்று.
     எனவே, இந்திய சேதம் இன்னும் வலுப்பெற்று மிக விரைவில் வல்லரசாக வேண்டும் என்றால் நம் நாட்டிற்கு வலுவான, நேர்மையான, உறுதியான, பிரச்னைகளை இரும்பு காரம் கொண்டு அடக்கும் நெஞ்சுரம் மிக்க திடமான தலைமை வேண்டும்.  அத்தலைமையை மக்கள் நேரடியாகத் தேர்வு செய்ய வேண்டும்.  அந்த அதிகாரம் மக்களுக்கு நேரடியாக வழங்கப்பட வேண்டும்.
     இந்நிலையில், தற்போது இந்தியாவிற்கு புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் சூழல் உருவாகியுள்ளது.  இந்தியாவின் ஜனாதிபதி என்பவர் இத்தேசத்தின் முதல் குடிமகன்.  அவர் அப்பழுக்கற்றவராக வேறு எதிலும் நாட்டமின்றி தேச நலன் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, நாட்டு மக்களை மிக உன்னத நிலைக்கு வழிநடத்திச் செல்பவராக இருக்க வேண்டும்.
     இதற்கு, அரசியலுக்கு அப்பாற்பட்டு பொது நலத்தில் நாட்டம் கொண்டிருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களை முன்னிறுத்தி பொதுமக்களே அவர்களை ஓட்டுப்போட்டு தேர்வு செய்ய வேண்டும்.  இந்த நடைமுறையை மிக விரைவில் இந்திய தேசத்தில் கொண்டுவர வேண்டும்.
     இம்முறையைத் தவிர்த்து தற்போது உள்ளது போன்று மக்கள் பிரதிநிதிகள் அதாவது சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் ஜனாதிபதியை தேர்வு செய்வது என்றால் மீண்டும் மீண்டும் நம்நாடு வலுவிழந்து, வளர்ச்சியின்றி தாழ்ச்சியுற்றுப் போகும்.
     ஏனென்றால், தற்போது இந்தியாவில் ஜனாதிபதியாக முன்னொழியப் பட்டிருப்பவர்களும் தேர்வு செய்யப்படுபவர்களும் யாராக இருக்கிறார்கள் என்றால் ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து அதன் பின் வயதாகி, வலுவிழந்து, சுயநினைவுகளற்று எழும்பி நடப்பதற்கும் இருப்பதற்கும்கூட சக்தியற்றவர்களை ஜனாதிபதி வேட்பாளர்களாக அரசியல் கட்சிகள் முன்மொழிகின்றன.
     அவர்களுக்கு, அவர்கள் சார்ந்திருக்கின்ற சட்டமன்ற, நாடாளுமன்ற பிரதிநிதிகள் ஓட்டுப் போடுகின்றனர்.  அதனால் மட்டும் வெற்றி வெற முடியாது என்ற நிலை வந்தால் மாற்று அரசியல் கட்சியில் இருப்பவர்களுக்கு லட்சோப லட்சம் அல்லது கோடானுகோடி பணத்தைக் கொட்டி ஓட்டை விலைக்கு வாங்கி தங்களுக்குச் சாதகமானவரை ஜனாதிபதியாக்குகின்றனர்
     அப்படி, ஜனாதிபதியாகும் அருகதையற்றவர்கள் ஐந்து ஆண்டு காலம் சொர்க்க பூமியாக விளங்கும் ஜனாதிபதி மாளிகையில் தங்களின் சொந்த, பந்த பரிவாரங்களுடன் சுகபோக வாழ்க்கையை அனுபவித்து மக்களின் வரிபணத்தை கோடிகோடியாகச் செலவு செய்து அந்நிய நாடுகளில் அநாவசியமாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு நாட்டிற்கு நஷ்டத்தையும் மக்களுக்கு இழுக்கையும் சம்பாதித்துக் கொடுத்துவிட்டு ஓய்வு பெற்று, மீண்டும் மரண காலம் வரை மக்களின் பணத்தில் ராஜ மரியாதையுடன் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்.
     இப்படிப்பட்டவர்கள் ஜனாதிபதி ஆவதினால் நாட்டில் மக்களுக்குத் தேவையான, காலத்திற்கு ஏற்ற ஒரு சட்டத்தை இயற்றவோ அல்லது பாராளுமன்றத்தில் ஆளும் அரசியல் கட்சிகளால் கொண்டுவரப்படும் மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கோ இயலாது.  அவர்களை ஜனாதிபதியாக முன்மொழிந்து, ஜனாதிபதியாக்கிய அரசியல் கட்சி என்ன செய்வதற்குச் சொல்கிறதோ அதற்கு மட்டும் தலையசைத்து வெறும் ஒரு பொம்மை போலிருந்து பாவனைச் செய்து ஐந்தாண்டுக் காலத்தைக் கடத்தி விடுவார்கள்.
     இதனால்தான், இந்தியாவின் ஜனாதிபதிகளுக்கு தலையாட்டிப் பொம்மைகள் என்றும் கண்ட கண்ட இடங்களில் கையெழுத்திடும் ரப்பர் ஸ்டாம்புகள் என்றும் பட்டப் பெயர்கள் வந்தன.
     இந்தியாவில் அரசியல் அமைப்புச் சட்டத்தில் எழுதப்படாத ஒரு சட்டம் உள்ளது.  அது, இந்தியாவில் மிக உயர்ந்தப் பதவி வகிக்கும் நீதிபதிகள், ஜனாதிபதி, மாநில ஆளுநர்கள் ஆகியோரை எக்காரணம் கொண்டும் எந்தச் சூழ்நிலையிலும் தனிநபரோ அல்லது தகவல் தொடர்புச் சாதனங்களோ விமர்சிக்கக் கூடாதென்று.
     ஆனால், இன்று நிலைமை நேர்மாறாக மாறிவிட்டது.  தற்போது மிக அதிக அளவில் மக்களாலும் மீடியாக்களாலும் விமர்சிக்கப்படுபவர்கள் நீதிபதிகளும் ஜனாதிபதிகளும் ஆளுநர்களாகவும்தான் இருக்கின்றனர்.  ஏனென்றால், அந்த அளவுக்குத்தான் அவர்களின் தராதரமும் செயல்பாடுகளும் இருக்கின்றன.
     எனவே, இந்த இழிநிலைகளை இந்திய தேசத்திலிருந்து துடைத்தெறிந்து விட்டு மீண்டும் இந்தியாவை தலைநிமிர வைத்து, அத்தனை நாடுகளும் தலைவணங்கும் ஒரு வல்லரசு நாடாக இந்திய நாட்டை மாற்றியெடுக்க வேண்டும்.  அதற்கு இந்தியாவின் முதல் குடிமகனை நிர்ணையம் செய்யும் தகுதியை மக்களிடம் வழங்க வேண்டும்.  அவர்கள் நேரடியாக ஓட்டுப்போட்டு ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
     அப்போதுதான் நேர்மையான, திறமையான, திடமான, ஒரு மகத்தான மனிதரை இந்தியாவின் முதல் குடிமகனாக தேர்ந்தெடுத்து, இந்தியாவின் மகத்துவத்தை மெருகேற்ற இயலும்.
                      சிறுமலர் – ஜூன் 2012 இதழில் பிரசுரமானது.    
                          

No comments:

Post a Comment