ஒரு பக்கத்தில்
பல இரசம்.
(தமிழகத்தில்
வளர்ந்து வரும் எழுத்தாளர்களில் வல்லமை மிக்க எழுத்தாளராக வலம் வருபவர் ஐரேனிபுரம்
பால்ராசய்யா அவர்கள். அவர் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ஒருபக்கக் கதைகள் என்னும்
நூலுக்கு அடியேன் எழுதியுள்ள அணிந்துரை இது.)
பேசுவது சுலபம். ஆனால் இரத்தினச் சுருக்கமாகப் பேசுவது சிரமம்.
கதை எழுதுவது எளிது. ஆனால் ஒருபக்கத்தில் கதை எழுதுவது கடிது.
அந்தக் கடிதையும் கரும்புச்சாறாக்கி சாதித்துக் காட்டி சாகாப்தம்
படைத்திருப்பவர் எழுத்தாளர் ஐரேனிபுரம் பால் ராசையா அவர்கள்.
கவிஞர்களை நிமிடக் கவிஞர்கள் என்பது போல் இவரை நிமிடக் கதையாசிரியர்
என்றால் அது மிகையாகாது.
பட்டென்று எழுதுகோலை எடுத்துச் சட்டென்று கதை எழுதச் சொன்னால்,
இவர் விட்டென்று எழுதி விடுவார் ஒரு பக்கக் கதைகள் பல.
கதைக்குக் கரு ஒன்றே போதும். ஆனால் இவரது ஒருபக்கக் கதைக்குள்ளே
ஒழிந்திருக்கும் கருக்கள் பல.
பலப் பக்கக் கதைகளைப் படித்து முடித்தவுடன், எதற்கு இந்தக்
கதைக்காக இத்தனை மணி நேரத்தைச் செலவழித்தோம் என்று தோன்றும்.
இவரது ஒருபக்கக் கதையைப் படித்து முடித்தவுடன், ஏன் இவர்
பல பக்கக் கதைகளை எழுதவில்லையென்று. அத்தனைப் பரவசத்தைத் தரவல்லது இவரது கதைகள்.
அதற்குச் சான்று பகர்வதுதான், குழந்தை, மனைவி, மருமகள், பெத்த
மனசு, நாணயம், பசி, மனசு, தேர்வு, அவள் போன்ற அற்புதமானக் கதைகள்.
சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கும் நன்மை, தின்மை, பாசம், மோசம், அன்பு, வம்பு, நீதி, அநீதி, நேசம்,
தோசம் என அத்தனை சமாச்சாரங்களையும் சகலகலாவல்லவன் போல் ஒரு பக்கத்திற்குள் பல ரசமாக்கித்
தந்துள்ளார் பால் ராசையா அவர்கள்.
கதைகள் ஒரு பக்கத்தில் இருக்கும் போது, கருத்துரையும் ஒரு
பக்கத்தில் இருப்பதுதானே நியாயமானது? அதனால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். கோபித்துக்
கொள்ளாதீர்கள்!
பால்ராசையா கோபுரம் போல் உயர்வார். அப்போது பல பக்கங்களை
அவருக்காகப் பயன்படுத்துவோம்.
நூலாசிரியர் தொடர்புக்கு: 9791820195, 9746486845
No comments:
Post a Comment