Tuesday, 26 April 2011

கல்விக்குப் பாதகம் செய்வோருக்குப் பாடம் புகட்டுவோம்.


   ஒரு ஜனநாயக நாட்டின் மிகவும் பலம் எனக் கருதப்படுவது அந்நாட்டின்
கல்வி வளர்ச்சியே ஆகும். எவ்வளவுதான் செல்வம் ஒரு நாட்டில் இருந்தாலும் அந்தச் செல்வத்தை நேர்மையான முறையில் திட்டமிட்டு செயல்படுத்தி நாட்டை மேலும் மேலும் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்றால் அந்நாட்டில் இருக்கும் மக்கள் அத்தனை பேரும் கல்வியறிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
      அப்படி, ஒரு நாட்டின் மக்கள் அனைவரும் மிகுந்த கல்வி வளம்  பெற்றவர்களாக வேண்டுமென்றால் அதன் மொத்தப்பொறுப்பும் அந்நாட்டை ஆட்சி செய்யும் அரசின் கையில்தான் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையில் அல்லது பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது அதில் அதிக பட்சமான நிதி கல்வித்துறைக்காக ஒதுக்க வேண்டும். அந்நிதி முழுவதும் அந்நாட்டு சிறுவர்களின் அல்லது கல்வி நிறுவனங்களின் திட்டமிட்ட வளர்சிக்காக ஒதுக்க வேண்டும். என்றால் மட்டுமே அந்நாடு நாளுக்கு நாள்,  ஆண்டுக்கு ஆண்டு அறிவு வளர்ச்சிப் பெற்றுத் தொழில்துறை, வணிகத்துறை, பொருளாதாரத்துறை என நாட்டின் முதுகெலும்பான அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சிப் பெற்று உன்னத நிலையை அடையும்.
     ஆனால், துரதிஷ்டவசமாக நம் நாட்டைப் பொறுத்தவரை அது நேர் எதிராகவே அமைந்து விட்டது. நம் நாட்டை ஆட்சி செய்பவர்கள் நாட்டின் வளர்ச்சி பற்றியோ, கல்வியின் முக்கியத்துவம் பற்றியோ, சிறிதும் சிந்திக்காமல், தங்களை அதிகார சிம்மாசனத்தில் அமரவைக்கும் ஓட்டைப் பற்றி மட்டுமே சிந்திக்கின்றனர். அதற்காகப் பாமர மக்களைக் கவரும் விதத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வகையிலும் துணை நில்லாத இலவசப் பொருள்கள் வாரி வழங்குவதாக வாக்குறுதி அளிக்கின்றனர்.
அப்பாவி மக்களும், தங்களின் எதிர்கால சந்ததியினர் பற்றியோ, நாட்டின்
 உயர்ச்சி பற்றியோ இம்மியளவும் சிந்திக்காமல் தற்பொழுது  அல்ப       ஆசைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் கிடைக்கும் ஒன்றிற்கும் உதவாத இலவச சாமான்களுக்காக ஓட்டுகளைக் கொடுத்து விடுகின்றனர்.அப்படிப்பட்ட ஒரு நிலைதான் இன்று தமிழகத்தில் உருவாகியுள்ளது.
     தமிழகத்தில் இரண்டு வலுவான மாநில அரசியல் கட்சிகள் உள்ளன. இவ்விரு கட்சிகளும் கடந்த சில ஆண்டுகளாக மாறிமாறி ஆட்சிக்கு வருகின்றன.
     இவ்விரு கட்சிகளும் அட்சிக்கு வரத் தொடங்கியக் காலம் முதல் தமிழகத்தில் கல்வி வளர்ச்சி என்பது கேள்விக் குறியாகவும் கல்வித்துறை கேலிக்கூத்தாகவும் மாறி விட்டன. வீடுகள் தோறும் அடுக்களைச் சாமான்கள் இலவசமாகக் கொடுக்கின்றனர். பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப் இலவசமாகக் கொடுப்போம் என வாக்குறுதிக் கொடுக்கின்றனர்.
     அரசுப் பள்ளிகளில் படிக்கும் +2 மணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்குவோம் என வாக்குறுதி கொடுத்திருக்கும் இந்த அரசியல் கட்சிகள் சிறிதளவேனும் இன்றைய அரசுப் பள்ளிகளின் அவல நிலையைப் பற்றி சிந்தித்திருக்கின்றார்களா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
     அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் வகுப்பறைகளில் அமர்ந்து படிப்பதற்கு போதிய கட்டட வசதிகள் இல்லை. இதனால், தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் மர நிழலிலும் வெட்ட வெளிகளிலும் இருந்து கல்வி கற்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க இன்னொருபுறம் அரசாங்கப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை என்பது இன்றும் நீடித்துக் கொண்டே இருக்கின்றது.
     இதனால், மாணவர்களுக்கு போதிய, தரமான கல்வி கிடைப்பதில்லை. எனவேதான், இன்று அரசுப் பள்ளிகளில் படிப்படியாக மாணவர் எண்ணிக்கைக் குறைந்து நாளுக்கு நாள் அரசுப் பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இப்படி, மெல்ல மெல்ல அரசுப் பள்ளிகள் நசிந்து மூடுவிழா காண்பதினால் தனியார் பள்ளிகளும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளும் அளவுக்கு அதிகமான கட்டணத்தை வசூலித்துக் கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர்.
     இப்படி, அரசுப் பள்ளிகள் நலிந்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் பெருகும் போது இந்த நாட்டிலுள்ள ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களிலுள்ள
குழந்தைகள் எப்படி தனியார் அல்லது மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் அதிக கட்டணம் செலுத்தி கல்வி கற்பதற்கு இயலும்? எவ்வளவுக்கு எவ்வளவு அரசுப் பள்ளிகள் நலிவடைகின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு இந்நாட்டிலுள்ள ஏழை,
 எளிய மாணவர்களுக்கு கல்வி பயிலும் வாய்ப்பும் குறைந்துக் கொண்டே வரும். நாளடைவில் கல்வி என்பது பண்டை காலத்தில் இருந்தது போல் சமூக அந்தஸ்தில் இருப்பவர்களுக்கும் பணபலம் படைத்தவர்களுக்கும் மட்டுமே என்றாகி விடும். சாதாரண மக்களுக்குக் கல்வி எட்டாக் கனியாகிவிடும்.
     அப்படியொரு நிலை தமிழகத்தில் ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பும் தமிழகத்தில் மாறி மாறி வரும் கழக ஆட்சிகளையேச் சாரும். இவர்கள் ஏழை மக்களுக்கு இலவசங்களையும் சலுகைகளையும் வழங்குகிறோம் என மேலோட்டமாகக் கூறிக்கொண்டு ஏழைகளின் குரல்வளையை நெரிப்பதை யாரும் அறிகிலார்.
     அப்பாவிகளின் ஓட்டை வாங்க பள்ளி சத்துணவில் தினமும் ஒரு முட்டை +1 வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் கூடவே தற்போது இலவச லேப்டாப்’ என இலவசங்களை அள்ளி வழங்கும் இவர்கள் ஏன் கூரை இல்லாம் இருக்கும் அரசுப் பள்ளிகள் பற்றியும் ஆசிரியரே இல்லாமல் கல்வி இழந்து தவிக்கும் மாணவர்கள் பற்றியும் சிந்திக்கவில்லை.
     தமிழகத்தில் ஒரு காலத்தில் வறுமையும் பசியும் தாண்டவமாடியது. அப்போது மக்கள் ஒரு வேளை கஞ்சிக்குக் கூட வழியின்றி தவித்தனர். இதனால், குழந்தைகள் பள்ளிக்குப் படிக்கச் செல்லாமல் பெற்றோர்களுடன் வேலைக்குச் செல்லவோ அல்லது வெட்டியாக வீட்டில் இருக்கவோ செய்தனர். இதனைக் கண்டு வருத்தமுற்ற அன்றைய முதல்வர் காமராஜர் எப்படியாவது இந்தக் குழந்தைகளுக்குக் கல்வியறிவு புகட்ட வேண்டும் என்ற ஏகச் சிந்தையில் அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப் படுத்தினார்.
     அதன் பிறகுத் தழிழகத்தில் அட்சிக்கு வந்த இரு கழகக் கட்சிகளும் தங்களின் சுய லாபத்திற்காக மக்களிடமிருந்து ஓட்டுப் பெறும் ஒரே நோக்கத்திற்காக மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டமென்றாக்கி அதன் பிறகு ஒவ்வொரு அரசும் மாறிமாறி ஆட்சிக்கு வரும் போது வாரத்திற்கு ஒரு முட்டை, இரண்டு முட்டை எனப் போட்டி போட்டுக் கொண்டு மாணவர்களுக்கு முட்டை வழங்குவதில் கவனம் செலுத்தி மாணவர்களின் கல்வியை முட்டை என்ற நிலைக்குக் கொண்டு வந்துள்ளனர்.
     இன்று, தமிழகத்தில் கல்வியின் நிலை களங்கப்படுத்தப் பட்டுள்ளது. இவர்கள் மாறிமாறி தங்கள் தேர்தல் அறிக்கையில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு லேப் டாப் வழங்குவோம் என்ற வாக்குறுதியை நாம் அனைவரும் ஏகோபித்தக் குரலோடு வரவேற்போம். அதே வேளையில் இந்த மாணவர்கள் அந்த லேப்டாப்பை’ சுயமாகப் பயன்படுத்தும் அளவுக்கு கல்வியறிவை அரசுப் பள்ளிகளில் கொடுக்க வேண்டும். மேலும், அந்த லேப்டாப்பை பயன்படுத்தி அவன் ஏதேனும் தொழில் துறையில் முன்னேறுவதற்கான தொழில் சார்ந்த வாய்ப்புகளை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டும். என்றால், மட்டுமே இந்த லேப்டாப்பினால் மாணவர்களுக்கும் அவர்கள் சார்ந்திருக்கும் குடும்பங்களுக்கும் பயனுண்டு.
     இதைத் தவிர்த்து வெறுமனே மாணவர்களுக்கு லேப்டாப் மட்டும் வழங்குவதின் நோக்கம் மாணவர்களின் கல்வி வளர்ச்சியையோ அல்லது அவர்கள் சார்ந்திருக்கும் குடும்பங்களின் பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டோ இருக்காது; அதற்கு மாறாக இந்த லேப்டாப்புகளை உற்பத்திச் செய்யும் கம்பியூட்டர் கம்பெனிகளிலிருந்து கோடி கோடியாகப் பணத்தை வாங்கிக் குவித்து தானும் தான் சார்ந்த குடும்ப அங்கங்களும் வளமும் நலமும் பெறுவதற்கான ஒரே முயற்சியாகத்தான் இருக்க முடியும்.
     உலகம் முழுவதும் உள்ள கல்வி முறையிலும் கற்பித்தல் முறையிலும் இன்று பல்வேறு விதமான நுட்பங்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. அவை, மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கும் சுய முன்னேற்றத்திற்கும் பல்வேறு முறைகளில் துணை நிற்கின்றன. குறிப்பாக தமிழகத்தில் கூட தனியார் கல்வி நிறுவனங்களும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளும் பழைய கற்பித்தல் முறைகளை மாற்றி விட்டு முழுக்க முழுக்க கணணி முறையில் கற்பிக்கும் ஸ்மார்ட் கிளாஸ் கற்பித்தல் உத்தியைப்  பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
     இந்நிலையில், தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் இன்றும் மாணவர்களை மர நிழலிலும் வெட்ட வெளியிலும் வைத்துக்  கற்பித்தால் அவர்களின் மனநிலையும் அறிவுத்திறனும் எந்த அளவிற்கு மேம்பட்டிருக்கும் என்பதை நடுநிலைச் சிந்தனையாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
     எனவே, தமிழகத்தில் இனிமேலும் ஆட்சிக்கு வரும் அரசுகள் மக்களுக்கு அடுக்களைப் பொருள்களை இலவசமாக வாரிவாரி வழங்குவதை உடனடியாக நிறுத்திவிட்டு, நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் உயர்ச்சிக்கும் அடிப்படைக் காரணமாக இருக்கும் கல்வி நிலையங்களுக்குப் பெரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
     அதற்காக, அரசுப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப் படுத்த வேண்டும். போதியக் கட்டட வசதி, ஒரு வகுப்புக்கு ஓர் ஆசிரியர் என்ற முறையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். நவீன கற்பித்தல் உத்தியான ஸ்மார்ட் கிளாஸ் முறையை அரசுப் பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தி முழுக்க முழுக்க தரமானக் கல்வியை வழங்க வேண்டும்.
     இவற்றால் மட்டுமே வளமான தமிழகத்தையும் வலுவான இந்தியாவையும் எதிர்காலத்தில் உருவாக்க முடியும் என்பதை அடுத்து தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் அரசு உணர வேண்டும்
                               நன்றி:  சமுதாய நண்பன் ஏப்ரல் 2011.
.

              
                                  
                       
    



























                                                          .   .

Saturday, 23 April 2011


சமரசம்

ஆப்பிளுக்கு
அடம்பிடித்த பிள்ளைக்கு
தக்காளியைக் காட்டி
சமரசம் செய்தார் அப்பா!

இரண்டின் நிறமும்
சிவப்பு
கூடவே
வறுமையின் நிறமும்...

Wednesday, 13 April 2011

குமரி குயிஸ்


குமரி குயிஸ்
    
     கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தின் ஒரு வரப்பிரசாதமான மாவட்டமாகும். தமிழ் இலக்கியம் குறிப்பிடும் ஐவகை நிலத்தில் பாலை தவிர்த்து நான்கு நில வகைகளையும் தன்னகத்தேக் கொண்டுள்ளது.
     இம்மாவட்டத்தில் முத்துக்களாகவும் மாணிக்கங்களாகவும் ஒளிந்து, மறைந்துக் கிடக்கும் தகவல்கள் ஏராளம்.அவற்றை எளிமையாகவும் இனிமையாகவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெறும் வண்ணம் வழங்க இந்தப்  புதிய முயற்சியை வினா விடை முறையில் ஹலோ கன்னியாகுமரி மூலம் தொடங்கியுள்ளேன்.


வினா

1.       . கன்னியாகுமரி மாவட்டம் முன்பு எந்த மாநிலத்துடன்                                               
            இணைந்திருந்தது?
2.       கன்னியாகுமரி மாவட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு?
3.       கன்னியாகுமரி மாவட்டத்தின் பரப்பளவு?
4.       குமரி மாவட்டத்திலுள்ள தாலுகாக்கள் எத்தனை?  அவை                       யாவை?
5.        குமரியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
6.        கன்னியாகுமரி மாவட்டம் முழூ எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு எது?
7.    இந்தியாவின் எல்லையைக் குறிப்பிடும் போது வடக்கில்
                         இமயமலை பாப்பா தெற்கில் வாழும் குமரி முனை பாப்பா என்று குறிப்பிட்ட கவிஞ்ஞர் யார்?
    
           

8.       குமரியின் குற்றாலம் என அழைக்கப்படுவது எது?
9.       கன்னியாகுமரி மாவட்டத்தில் எந்த இடத்தில் முன்று             கடல்கள் சங்கமிக்கின்றன?
10.   கன்னியாகுமரியிலுள்ள திருவள்ளுவர் சிலையின் உயரம் எவ்வளவு?

விடைகள்

1)      கேரளா.  2.) 1956.  3). 1684.4 ச.கி.மீ.  4).  4 தாலுகாக்கள். அவை, அகஸ்தீஸ்வரம்,. தோவாளை, கல்குளம், விளவங்கோடு.   5)மார்சல் நேசமணி. 6) 1992. 7). மகாகவி சுப்பிரமணிய பாரதி 8)திற்பரப்பு அருவி. 9). கன்னியாகுமரி. 10). 133 அடி.   

                          
                                                                                            ஹலோ கன்னியாகுமரி ஏப்ரல் 2011.

Monday, 11 April 2011


ஹைகூ கவிதை
  
பேணிக் காப்போம்
தீண்டாமையை
தீவிரவாதமொழிய

Sunday, 10 April 2011

தேர்தலில் தேர்ந்தெடுப்போம் தியாகிகளை



தேர்தலில் தேர்ந்தெடுப்போம் தியாகிகளை

     ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நமது இந்திய ஜனநாயகம் நம்மை சுய பரிசோதனைச் செய்துக் கொள்வதற்கான ஓர் அற்புதமான வாய்ப்பை உருவாக்கித் தருகின்றது.   அந்தச் சுயபரிசோதனையின் மூலம், நாம் கடந்த ஐந்தாண்டுகளில் வாழ்தோம? இல்லை வீழ்தோமா? என்பதை மிக நுணுக்கமாக சிந்தித்துத் தெளிவு பெற வேண்டும்.
     இந்த ஐந்து ஆண்டுகளில் நம்மை நாம் சுய பரிசோதனைச் செய்துப்பார்க்கும் போது நாம் வாழ்ந்திருந்தால் இங்கே வாழ்வது நாமல்ல நம் நாடு;  நாம் வீழ்திருந்தால் அந்த வீழ்ச்சி நமக்கல்ல நம் தேசத்திற்காகும்.
              ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வாழ்வையும் வீழ்வையும் தீர்மானிப்பது நம் ஓட்டுரிமை மட்டுமே. ஒரு ஜனநாயக நாட்டில் மக்களுக்கு கிடைக்கும் மிகப்பெரும் உரிமை என்பது ஓட்டுரிமைதான். இதனை சரியான முறையில், நேர்மையான வழியில், தகுதியான ஒருவருக்கு அளித்திருக்கிறோமா? என்பதைத்தான் இப்பொழுது பரிசோதித்துப் பார்க்க வேண்டியுள்ளது.
     நாம் ஓட்டளித்திருக்கும் அல்லது ஓட்டளிக்கப் போகும் ஒருவரது தகுதியையும் திறமையையும் ஒரு தராசுக்கோலில் வைத்து எடை போட்டுப் பார்ப்பதற்கு இயலாது. அதே நேரத்தில் தகுதியையும் திறமையையும் ஒழுக்க நெறியையும் அதோடு அவரது கடந்தகால செயல்பாடுகளிலிருந்து தெரிந்து, புரிந்துக் கொள்ள இயலும். அதை வைத்து நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைத் தீர்க்கமாகத் தீர்மானிக்க வேண்டும். அவருக்கு மட்டுமே ஓட்டளிக்கவும் வேண்டும்.
     ஆனால் கடந்த சில ஐந்தாண்டுகளாக நம் நாட்டில் மத்திய, மாநில தேர்தல்கள் நடக்கும் போது நம் நாட்டுக் குடி மக்கள் தாங்கள் வாக்களிக்கப் போகும் வேட்பாளரைத் தேர்வு செய்வதில் தவறி விடுகின்றனர் என்றே கருத முடிகிறது. ஏனெனில், கடந்த காலங்களில் நம் நாட்டில் நடந்திருக்கும் சில அருவருப்பான அசம்பாவிதங்களே அதற்கு அடிப்படைச் சான்றாதாரங்களாக அமைந்துள்ளன.
     அந்த ஆதாரங்கள் லஞ்சத்தில் தொடங்கி ஊழலில் தொடர்ந்து கொலை,கொள்ளைகளெனப் பெருகி நாட்டின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் முடக்கிப் போட்டுள்ளன. அதோடு, நாம் வாக்களித்துத் தேர்ந்தெடுத்தவர்கள் கிரிமினல் குற்றவாளிகளாகவும் ஒழுங்கீனர்களாகவும் மாறி இன்று சிறைச்சாலைகளில் கைதிகளாக உள்ளனர்
     இத்தகுத் தீயச் செயல்களால் நம் நாட்டின் முன்னேற்றம் முடங்கிப் போனது என்பதல்ல முக்கியம் இப்படிப் பட்டவர்களுக்கு ஓட்டளித்த நாம் அவமானத்தாலும் அசிங்கியத்தாலும் முடமாகிப் போயுள்ளோம் என்பதுதான் பரிதாபம். இப்படிப்பட்ட அவமானங்களிலிருந்தும் அசிங்கியங்களிலிருந்தும் நம்மை நாம் விடுவித்துக் கொள்வதற்காக மீண்டும் நமக்கு ஓர் அருமையான சந்தர்பம் கிடைத்துள்ளது. அதுதான் 2011 ஏப்ரலில் தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்.
     இத்தேர்தலில் நம் நாடு முடங்கிப் போகவோ அல்லது நாம் முடங்கிப்போகவோ செய்யலாகாது. இப்பொழுது நாம் அனைவரும் விழித்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இப்பொழுதும் நாம் விழித்துக் கொள்ள தவறிவிட்டால் அது நம்மை நாம் ஏமாற்றிக் கொள்கிறோம் என்பதல்ல நம் வருங்கால சந்ததியினரை ஏமாற்றுகிறோம் என்பது நிஜமாகும்.
     நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதல்ல முக்கியம் நம் சந்ததியினரை எப்படி வாழ வைக்கப் போகிறோம் என்பதுதான் முக்கியம்.
     தேர்தல் காலங்களில் நம்மை ஏமாளிகளாக்க அரசியல்வாதிகள் பயன்படுத்தும் மிகப் பெரிய வித்தை ஒன்றே ஒன்றுதான். அது தேர்தல் அறிக்கையில் மெகா இலவசத் திட்டங்களை அறிவிப்பதுதான். கூடவே சில சலுகைகளையும் அறிவித்து விடுகின்றனர். இவற்றைப் பார்க்கும் போது வாக்காளர்களாகிய நாமும் பரவசப்பட்டுப் போகின்றோம். அதனால் கண்மூடிக் கொண்டு இலவசத் திட்டங்களுக்காக ஓட்டுகளை அள்ளியள்ளி வழங்குகின்றோம். அதன் பிறகு நாம் பாழ்பட்டுப் போவதை எவரும் அறியிலோம்.
    முதறிஞ்ஞர் இராஜாஜீ, கர்மவீரர் காமராஜர், பேரறிஞர் அண்ணா போன்றவர்களெல்லாம் முதலமைச்சர்களாக இருந்து ஆட்சி செய்த தமிழகம். அப்பொழுதுதெல்லாம் அவர்கள் இலவசங்களைக் காட்டி மக்களை  மயங்க வைத்து ஓட்டுகளைப் பெறவும் இல்லை நாட்டை குட்டிச்சுவராக்கவும் இல்லை. அப்படி ஏதேனும் இலவசத் திட்டங்களை அறிவித்திருந்தாலும் அவை மக்களின் அறிவு வளர்ச்சி சார்ந்த கல்விக்காக மட்டுமே இருந்திருக்கின்றது.
     ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.அனாவசியமான அடுக்களைச் சாமான்களிலிருந்து ஆடம்பரமான பள்ளியறை சாமான்கள் வரை இலவசம்...இலவசம்... என்றாகி விட்டது.
     அன்றெல்லாம் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறியிக்கையில் விவசாயிகளின் நலனுக்காகவும் விவசாயப் பெருக்கத்திற்காகவும்  எத்தனை அணைகளைக் கட்டப் போகிறோம் போக்கு வரத்து வசதிக்காக எத்தனைப் பாலங்களைக் கட்டப் போகிறோம் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக எத்தனை பள்ளிகளையும், கல்லூரிகளையும் தொடங்குவோம், மக்களின் ஆரோக்கியத்தைப் பேண எத்தனை மருத்துவமனைகள் எங்கெங்குக் கட்டப்படும் எத்தனைச் சாலைகள் உருவாக்கப்படும் எங்கெல்லாம்  அரசுத் தொழிற்சாலைகள் உருவாகும் எந்தெந்த வழித்தடங்களில் புதிதாக போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்படும் மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர் தேவைக்காக எத்தனைக் குடிநீர் திட்டங்கள் உருவாக்கப்படும் என்றெல்லாம் மக்கள் நலனை மட்டுமேக் கருத்தில் கொண்டுத் தொலை நோக்குப் பார்வையுடன் திட்டங்கள் தீட்டப்பட்டன.
     அதனால். அக்காலங்களில் ஆட்சி செய்தவர்களின் பெயர்கள் இன்றும் நிலைத்திருக்கின்றன. அவர்களின் ஆட்சிக் காலத்தில் முதலமைச்சர் பதவி வகித்தவர்களோ அல்லது அவர்களின் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த சகாக்களோ லஞ்சம் பெற்றமைக்கு அல்லது ஊழல் செய்தமைக்காக இல்லை வருவாய்க்கு அதிகமாகச் சொத்துக் குவித்தமைக்காக அல்லது வேறு ஏதேனும் ஒழுங்கீன செயலுக்காக கைது செய்யப்படவும் இல்லை என்பது வரலாறு கூறும் உண்மை.
     ஆனால், இன்றிருக்கும் நிலையை ஒரு கணம் எண்ணிப் பார்ப்போம். இன்று மந்திரியாக இருப்பவர் நாளை மத்தியச் சிறையில் கைதியாக இருக்கிறார். இன்று ஓலைக் குடிசையில் ஓட்டாண்டியாக வாழ்ந்தவர் அரசியல் செல்வாக்கால் தேர்தலில் நின்று மக்கள் பிரதிநிதியாகி நாளை பல மாடி வீடுகளுக்குச் சொந்தக்காரராகி பல கோடி சொத்துக்களின் அதிபதியாகி விடுகிறார். இப்படிப்பட்ட அவலங்களுக்கு யார் காரணம்? என ஆய்ந்துப் பார்த்தால் அவை அத்தனைக்கும் காரணம் வாக்காளர்களே என்பது நிஜமாகும்.
     நாம் ஓட்டுப் போடும் போது அந்த வேட்பாளர் எப்படிப்பட்டவர், அவரின் கல்வித் தகுதியென்ன, அவரது நடைமுறைச் செயல்கள் என்னஇவை அனைத்திற்கும் மேலாக அவரது குணாதிசையங்கள் என்ன என்பதைப் பற்றியெல்லாம்  எள்ளளவும் கவலைப்படாமல்  அவர் சார்ந்திருக்கும் அரசியல் கட்சி, தேர்தல் அறிக்கையில் என்னென்ன இலவசங்களையும் சலுகைகளையும் அறிவித்திருக்கிறது என்பதை மட்டும் கருத்தில் கொண்டு ஓட்டளித்து விடுகிறோம். இதுதான் நாம் செய்யும் அடிப்படைத் தவறாகி விடுகின்றது.
          மேலும் நம்மில் பெரும்பாலானவர்களும் தேர்தலில் ஓட்டுப்போடச் செல்லாமல் இராமன் ஜெயித்தாலும் இராவணன் ஜெயித்தாலும் எனக்கொருக் கவலையில்லை என்ற தவறான மன நிலையில் இருந்து விடுகிறோம். இதனால், ஒருவேளை நல்லவர்களாக... வல்லவர்களாக...தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு அதிக ஓட்டு கிடைக்காமல் அவர்கள் தோல்வியுறும் நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள்.
     எனவே, இனி நாம் விழித்துக்கொள்வோம். இப்பொழுது நடைபெற இருக்கின்ற தேர்தலில் நாம் வாக்களிக்க வேண்டியது .யாருக்கு என்பதைத் தீர்க்கமாக தீர்மானிப்போம்.
     நம் நாட்டின் வரிப்பணம் என்பது நம் நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தமானதாகும். அந்தப் பணம் இந்நாட்டின் முதலீடாக அமைய வேண்டும். அந்த முதலீட்டினால் நாட்டில் கல்விச்சாலைகள் மலிய வேண்டும், தொழிற்சாலைகள் பெருக வேண்டும். அணைக்கட்டுகள் உயர வேண்டும். இவற்றால் இந்நாட்டிலிருந்து பசியும் பட்டிணியும் பறந்தோட வேண்டும். கொலையும், கொள்ளையும் ஒழுங்கீனங்களும் இல்லவே இல்லையென்றாக வேண்டும். அன்பும், அமைதியும் அனைவரின் உள்ளத்திலும் ஊற்றுப் பெருக்காக வேண்டும்.
     இதற்கு நாம் ஓவ்வொருவரும் செய்ய வேண்டியது என்ன என்பதை எண்ணித்துணிய வேண்டும். அதற்காக நாம் துணிந்து விட்டோம். எழுந்துப் போவோம் வாக்குச் சாவடிக்கு. முதலில் நாம் ஓட்டுப்போடுவோம் பின்னர் நம்மைச் சார்ந்தவர்களை ஓட்டுப்போட வைப்போம்.இதனால் ஓட்டுப் போடாதவர்ளே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்.
     அடுத்து யாருக்கு ஓட்டுப் போடுவது என்பைத் தீர்மானிப்போம். அதற்காக அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையை கூர்ந்துக் கவனிப்போம். இலவசங்கள் இல்லாத அனாவசிய சலுகைகளை அறிவிக்காத நாட்டு நலனில் அக்கரை கொண்டு தொலை நோக்குப் பார்வையுடன் திட்டங்களைத் தீட்டியுள்ள கட்சிக்கு மட்டுமே வாக்ச்களிப்போம்.
     வேட்பாளர்களைப் பொறுத்தவரை நம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றி நாம் நன்குத் தெரிந்திருக்க வேண்டும். அவரின் கல்வித்தகுதி, செயல்பாடுகள், குணாதிசயங்கள் ஆகியவைப் பற்றிய தெளிவானப் பார்வை நமக்கு இருக்க வேண்டும்.  அதன் அடிப்படையில் எவ்வித விருப்பு வெறுப்புகளுக்கும் ஆட்படாமல் சாதி, சமய, இன, மொழி கூடவே உறவு முறைகளைக் கூடத் தாண்டி நம் வாக்குகள் யாருக்கு என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.
     என்றால், மட்டுமே நம் நாட்டை மிகப்பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள இயலும். இதை நமக்காகச் செய்யவில்லை என்றாலும் நம் பிற்காலச் சந்ததியினருக்காகச் செய்தாக வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.    

.

































 .













                                         .