Monday, 23 March 2026

தனித்துக் களம் காணும் த.வெ.க: வரலாற்றை விஜய் கொஞ்சம் திரும்பிப் பார்ப்பாரா?

      தனித்துக் களம் காணும் த.வெ.க:  வரலாற்றை விஜய் கொஞ்சம் திரும்பிப் பார்ப்பாரா?

முனைவர் கமல. செல்வராஜ்.

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் மக்கள் மத்தியில் மிகப்பெரும் மாற்றத்தை எதிர்நோக்கிய, எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்குக் காரணம், இத்தனை ஆண்டுகளாக தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளுக்கு வாக்களித்ததால் ஏற்பட்டுள்ள வெறுப்பும், புதிதாக உதயமான நடிகர் விஜயின், தமிழக வெற்றி கழகம் அரசியல் கட்சியுமாகும்.
புதிய உதயம், தமிழக இளைஞர்கள் மத்தியில் மாபெரும் எழுச்சியை உருவாக்கியது. மிக விரைவாக எவ்வளவு எழுச்சியை உருவாக்கியதோ, அதே வேகத்தில் கரூர் கொடுந்துயரம், ஜனநாயகன் திரைப்படம் வெளியிடத் தடை, மனைவியின் விவாகரத்து விவகாரம், புதிய வரவிற்குள் ‘திரி(ஷ)சங்காய்’ இன்னொரு வரவு உட்பட பல்வேறு வீழ்ச்சிகளும் குறுகியக் காலத்திற்குள் அரங்கேறின.
எனினும், ஏதேனும் மாநில அல்லது தேசியக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட்டு, புதிய வரவின் தலைவர், முதல்வராவார் என்ற நம்பிக்கை அனைத்து தரப்பினரிடமும் இருந்தது.
புதிய உதயத்தோடு கைகோர்க்க, கையும், இலையும், மலரும் இமயத்தளவு முயற்சித்தன. அவை அனைத்தையும் உதறிவிட்டு, ‘நானே தலைவன்’, ‘நானே முதல்வன்’ என்ற முடிவை, தேர்தல் களம் அறியாத இளம் கன்று எடுத்துள்ளது. தனித்துக் களம் காண்பது தன்மானம் தான். ஆனால், ஆழம் தெரியாமல் காலை விடுவது அவமானம் என்பதை உணர்வது தலைவன் கடமையன்றோ?
ஒற்றைத் தலைவனாய், முதல்முறையே முதல்வனாகி விடவேண்டும் என்னும் அவா அவசியம் தான். ஆனால், அதற்கு முன் எந்தெந்த நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்து, என்னென்ன சாதித்திருக்கிறார்கள் என்பதை கொஞ்சம் திரும்பிப் பார்ப்பதும் மிக முக்கியம்.
நடிப்புத் துறையில் திலகமாகத் திகழ்ந்து, காங்கிரஸ் கட்சியில் பிரபலமாக விளங்கிய சிவாஜிகணேசன், தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்ற ஆசையில் 1988 இல் தொடங்கிய தமிழக முன்னேற்ற முன்னணி என்னும் அரசியல் கட்சி, எதையும் சாதிக்காமல் மாய்ந்து, தேய்ந்துப் போனதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
நடிப்பில் தனி முத்திரைப் பதித்து, தி.மு.க. பிரமுகராயிருந்த டி. இராஜேந்தர் 1991 தனியாக ஆரம்பித்த தாயக மறுமலர்ச்சி கழகம், தமிழகத்தில் தடம் பதிக்காமல், மக்கள் இதயத்தில் இடம் பிடிக்காமல் இடறிப்போனதை உணர வேண்டும்.
திரையுலகில் பிரபலமாகவும், நடிகர் சங்கத்தின் தலைவராகவும் செயலாற்றிய சரத்குமார், தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்ற ஏக சிந்தையில் 2007 இல் தொடங்கிய அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, இன்று பா.ஜ.க.,விடம் அழிந்து போயுள்ளதையும் ஆய்ந்து பார்க்க வேண்டும்.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனத் திரையுலகில் பலத் தளங்களில் முத்திரைப் பதித்த பாக்கியராஜையும், அரசியல் ஆசை விட்டு வைக்கவில்லை. அவரும் எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியை 1989 இல் தொடங்கினார். அதுவும் தொடங்கிய வேகத்தில் முடங்கிப்போன வரலாற்றை அறிந்திருக்க வேண்டும்.
நடிப்பில் தனித்துவத்தை நிலைநிறுத்திய, கமலஹாசனையும் முதல்வர் ஆசை தூண்டியது. அதன் விளைவு 2018 இல் மதுரையில் மக்கள் நீதி மய்யம் உதயமானது. முதல்வரல்ல, சட்டமன்ற உறுப்பினராவதற்கே தகுதியற்று போனார் அவர்.
தமிழரைத் தமிழர் ஆள வேண்டும் என்னும் கோஷத்தை முன்னிறுத்தி, திரைத்துறையை முற்றும் துறந்து 2010 இல் நாம் தமிழர் கட்சியை தமிழகத்தில் தடம் பதிக்க வைத்தார் சீமான். அதன் பிறகு நடந்த அத்தனை தேர்தல்களையும் தன்மானத்தோடுத் தனித்தேக் களமாடினார். ஆனால், ஒன்றிலும் இன்று வரை கரைசேர விடாமல் கரிசனத்தோடு உள்ளனர் தமிழக மக்கள் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும் புதிய உதயம்.
இவர்கள் அனைவருக்கும் மாற்றாக உள்ளனர் இருவர். அவர்கள், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், கேப்டன் விஜயகாந்தும். இவர்களில் முன்னவர் தனிக்கட்சி தொடங்குவதற்கு முன் வேறு அரசியல் கட்சியில் பல ஆண்டுகள் பயணித்து, அரசியல் ஞானமும், தந்திரமும் முழுமையாகப் பெற்றிருந்ததினால், அவரது அரசியல் பயணம் முழு வெற்றிபெற்று பத்தாண்டுகள் தமிழகத்தின் அசைக்க முடியாத முதல்வராக பதவி வகித்தார்.
கேப்டன் விஜயகாந்த் அரசியலில் ஓரளவிற்கு வெற்றி பெற்றார் என்றுதான் கூற முடியும். அதுவும் எடுத்த எடுப்பில் நானே தலைவன் நானே முதல்வர் என்று தேர்தல் களம் காணாமல், அ.தி.மு.க உடன் கூட்டணி வைத்ததால் அவ்வளவும் சாதிக்க முடிந்தது. அவரது காலத்திற்குப் பிறகு நடந்த தேர்தல்களில் அக்கட்சி எப்பாடு படுகிறது என்பது ஊரறிந்த உண்மை.
புதிய வரவு, இந்த முன்னுதாரணங்களை ஒரு முறையாவது புரட்டிப் பார்த்திருந்தால், தங்களோடு உறவாட தவமாய் தவம் கிடந்த கையோடும், இலையோடும், பூவோடும் கைகோத்து இம்முறை சட்டமன்றத்திற்குள் பாதம் பதித்துவிட்டு, அடுத்த முறை மக்கள் விரும்பினால் முதல்வர் நாற்காலியில் கம்பீரமாய் அமர்ந்திருக்கலாம்.
இதையெல்லாம் விட்டுவிட்டு, சினிமா பாணியில் எடுத்த எடுப்பில் ஒரேயடியாக முதல்வர் ஆக வேண்டும் என்னும் ஆசைக்கு மீசை முளைக்குமா? என்பதற்கு தமிழக வாக்காளர்கள் தான் தீர்ப்பளிக்க வேண்டும்.
கட்டுரை: முனைவர் கமல. செல்வராஜ்
எழுத்தாளர், அருமனை.
அழைக்க: 9443559841
அணுக: drkamalaru@gmail.com
(இக்கட்டுரை 21- 03 -2026 அன்று ieTamil இணைய இதழில் பிரசுரமானது)
All reactions:
Thirupa

Thursday, 11 December 2025

தேசிய மொழிகள் தினம்: பாரதிக்குக் கிடைத்த மகத்துவம்.

 தேசிய மொழிகள் தினம்: பாரதிக்குக் கிடைத்த மகத்துவம்.

இன்று மகாகவி சுப்பிரமணியப் பாரதி பிறந்த தினம், நாடு முழுவதும் தேசிய மொழிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
பாரத தேசத்தில் சுதந்திரக் கனல் பற்றி எரிந்த போது, விடுதலைக்காகப் போராடிய ஒவ்வொரு தலைவரும், அவரவருக்கென்று ஒரு தனிப்பாணியை வகுத்து, போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர். ஆனால், முண்டாசுக் கவிஞர் சுப்ரமண்ணியப் பாரதி, இப்போராட்டத்தில், தன் மனதில் தோன்றிய போராட்ட எண்ணங்களை, போனாவை துப்பாக்கியாக்கி, வார்த்தைகளைத் தோட்டாக்களாக்கி, அன்னியனின் நெஞ்சில் தீக்கனலாய்ப் பாச்சினான்.
தமிழ்மொழி மீது காதல்.
மற்றவர்களெல்லாம், நாட்டு விடுதலையைப் பற்றி மட்டுமே சிந்தித்து, அதற்காகப் போராடிக்கொண்டிருந்த நேரத்தில், பாரதி, நாட்டு விடுதலையோடு, நம் நாட்டின் கல்வி, கலாச்சாரம், கலை, மொழி, பொருளாதாரம், தொழில் வளம், தொலைத்தொடர்பு ஆகியவற்றை எப்படி உலகின் உன்னத நிலைக்குக் கொண்டுச் செல்லலாம் என்ற தொலைநோக்குடன் சிந்தித்துச் செயலாற்றினார்.
அந்த வகையில் அவர், பாரதத்திலுள்ள மொழிகள் மீது கொண்டிருந்த மரியாதை அபரிதமானது. அதிலும், தமிழ் மொழி மீது கொண்டிருந்த காதல் அளப்பரியது.
பன்மொழி புலமை.
பாரதத்தில், தேசிய அந்தஸ்து பெற்ற மொழிகள் 22 ஆகும். இவற்றில்:
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்”- எனப் பாரதி ஓங்கி உரைக்கின்றார். இது அவர், வெறும் பொய்யும் புரட்டுமாக உரைத்ததன்று. சுமார் 13 மொழிகள் அவருக்கு, நன்கு பரிச்சயமாயிருந்தன. அதன் வெளிப்பாடே இக்கூற்று.
“செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே” – என்னும் கவிதை வரியால் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார் பாரதி. இவ்வாறு, பாரதி, மொழிகள் மீது கொண்டிருந்த பற்றினைப் போற்றும் வகையில் மத்திய அரசு 2022 ஆம் ஆண்டு முதல், பாரதி பிறந்த நாளான டிசம்பர் 11 ஆம் தேதியை, ‘பாரதிய பாஷா திவாஸ்’ என்னும் பெயரில் ‘தேசிய மொழிகள் தினமாகப்’ பிரகடனப்படுத்தியது.
மகாகவிக்குக் கிடைத்த அந்தஸ்து
மத்திய அரசால், “பாரதிய பாஷா திவாஸ்” என அறிவிக்கப்பட்ட இந்நாளை, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் ஆண்டுதோறும் மிக விமரிசையாகக் கொண்டாட வேண்டும் எனப் பல்கலைக்கழக மானியக் குழு அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவுறித்தியது.
அவ்வகையில் தற்பொழுது தமிழகத்திலுள்ள, பள்ளிகள் முதல் பல்கலைக் கழகங்கள் வரை இந்நாளில், மாணவர்களுக்கிடையே சுப்ரமணியப்பாரதியின் பெயரில் பல்வேறு கலை, இலக்கியப் போட்டிகள், கருத்தரங்குகள், கலைநிகழ்ச்சிகள் உட்படப் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி பாரதியின் மகத்துவத்தை இளம் தலைமுறையினருக்குள் புகுத்துவதில் தேசம் முழுவதுமுள்ள கல்வி நிறுவனங்கள் முனைப்புடன் செயல்படுத்துகின்றன. இது, மகாகவிக்குக் கிடைத்த மாபெரும் அந்தஸ்து மட்டுமின்றி, தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் கிடைத்த அளப்பரிய அங்கீகாரமாகும்.
பார்போற்றும் பாரதி.
''ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்”- என்கிறார்.
ஒரு பேதை உரைத்ததாக பாரதி கூறும் நிலை, பாரதத்திலுள்ள எந்த மொழிக்கும் வராமல் இருப்பதற்காக மத்திய அரசால், தற்பொழுது வாடிவமைக்
கப்பட்டிருக்கும் தேசியக் கல்விக் கொள்கையில், தொடக்க நிலையிலிருந்து, உயர்நிலைக் கல்வி வரை தாய்மொழியில் படிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதோடு மாணவர்கள், ஒரு மொழி, அறிவோடு நின்று விடாமல் பன்மொழி கற்கும் வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, தமிழ் மொழிக்குத் தேசம் முழுக்கப் பெருமை சேர்த்துள்ள பாரதியை, பார்போற்றும் பாரதியாக மாற்றிக்காட்டும் பொறுப்பு தமிழர்களுக்கும் தமிழகத்திற்கும் உண்டு என்பதை அனைவரும் உணர வேண்டும்.
-முனைவர் கமல. செல்வராஜ்
கல்வியாளர், அருமனை.
பேச: 9443559841
(இக்கட்டுரை இன்றைய(11-12-2025), தினமலர் தேசிய நாளிதழில் பிரசுரமாகியுள்ளது)
May be an image of text
All reactions:



Friday, 19 September 2025

அறம் போதிக்கும் பல்கலைக் கழகத்தின் அவலம்.

 அறம் போதிக்கும் பல்கலைக் கழகத்தின் அவலம்.

தலைமை இல்லாமல் தடுமாறும் அறம் போதிக்கும் பல்கலைக் கழகம்; தமிழக அரசு கவனிக்குமா?
கட்டுரை: முனைவர் கமல. செல்வராஜ்
“ஒரு நாட்டின் வளர்ச்சியும் உயர்ச்சியும், அந்நாட்டின் கல்வியை மையமாகக் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது” என்று சுவாமி விவேகானந்தர் உரக்க உரைத்துள்ளார்.
அப்படிப்பட்டக் கல்விக்கு அடித்தளம் அமைப்பது ஆசிரியர்களின் தலையாயக் கடமை. அதற்காக அறிவு, ஆற்றல், தியாகம், அறம், அர்பணிப்பு, தன்னலமின்மை ஆகியவற்றைக் கொண்ட கண்ணியமிகு ஆசிரியர்களை உருவாக்குவது அரசின் உன்னத நோக்கமாக இருக்க வேண்டும்.
அந்த நோக்கத்தின் அடிப்படையில் 2008 இல், தமிழக அரசால் சென்னையில் தொடங்கப்பட்டது, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம். இது, இந்தியாவில் ஆசிரியர் கல்விக்காக மட்டும் ஆரம்பிக்கப்பட்ட முதல் பல்கலைக் கழகமாகும். அதுவரையிலும் தமிழகத்திலுள்ள வேறுவேறு பல்கலைக் கழகங்களின் கீழ் செயல்பட்டு வந்த அனைத்து பி.எட். கல்லூரிகளையும் ஒருங்கிணைத்து, இப்பல்கலைக் கழகம் செயல்படத் தொடங்கியது.
ஆரம்பத்தில், இதனால் அங்கீகரிக்கப்பட்ட அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகள் என சுமார் 746 கல்லூரிகள் இயங்கி வந்தன. அதன் பின்னர் பல்கலைக் கழத்தின் நிர்வாகச் சீர்கேடு, சுயநிதி கல்லூரிகளுக்குப் பல்கலைக் கழகத்தால் கொடுக்கப்பட்ட தேவையற்ற நெருக்கடிகள் உட்படப் பல்வேறு காரணங்களால், தொடர்ந்து ஒவ்வொரு பி.எட். கல்லூரிகளாக மூடப்பட்டு, தற்போது சுமார் அறுநூறுக்கும் குறைவான கல்லூரிகளே செயல்படுகின்றன.
தற்பொழுது இப்பல்கலைக் கழகத்தில் மிக முக்கியப் பொறுப்புகளான துணைவேந்தர், பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆகிய மூன்று பொறுப்புகள், பல ஆண்டுகளாக நியமனம் செய்யப்படாமல் உள்ளன. இதனால், இப்பல்கலைகழகம் எண்ணற்ற நிர்வாகக் குளறுபடிகளுக்குள் சிக்குண்டுள்ளது. இதனால், இதன் கீழ் செயல்படும் பி.எட். கல்லூரி நிர்வாகிகளும் அவற்றில் படிக்கும் மாணவர்களும் நாள்தோறும் அனுபவிக்கும் இன்னல்களுக்கு அளவேயில்லை.
கடைசியாக இப்பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராக இருந்தவர் 2022 நவம்பர் மாதம் பணி நிறைவுற்றுள்ளார். அதன் பிறகு, கடந்த மூன்றாண்டுகளாகத் துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை.
துணைவேந்தருக்கு அடுத்து மிக முக்கியப் பொறுப்பானப் பதிவாளர் பொறுப்பில் இருந்தவர் 2016 ஜூன் மாதம் ஓய்வு பெற்றுள்ளார். அவருக்குப் பிறகு, கடந்த ஒன்பது ஆண்டுகளாக, இப்பொறுப்பில் இதுவரை நிரந்தர பதிவாளர் நியமிக்கப்படவில்லை. ஆனால், இந்த ஒன்பது ஆண்டுகளில், இப்பல்கலைக் கழகத்தில், வேறுவேறு துறைகளில் பணிபுரிந்த பேராசிரியர்கள் ஏழு பேரை மாற்றி மாற்றி பொறுப்பு பதிவாளர்களாக நியமித்துள்ளது தமிழக அரசு.
இவர்களில் ஒருவர் மீது, பதிவாளர் பொறுப்புக்குரியக் கல்வித் தகுதியும் பணி அனுபவமும் இல்லாமல், போலியான சான்றிதழ்கள் மூலம் நியமிக்கப்பட்டார் என்றக் குற்றச்சாட்டு எழுந்து, நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. அதனால், அவர் அப்பொறுப்பிலிருந்து சில மாதங்களிலேயே நீக்கப்பட்டார். ஒருவர் மீது, நிர்வாக சீர்கேடு குற்றச்சாட்டு எழுந்து அதுவும் நீதிமன்றத்தில் வழக்காகி, அப்பொறுப்பிலிருந்து அகற்றப்பட்டார். இன்னொரு பதிவாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்து, வழக்குப் பதிவானதினால், பதிவாளர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டதோடு, பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.
இப்படி, கடந்த ஒன்பது ஆண்டுகளாக, இப்பல்கலைக் கழகத்தில், தகுதியும் திறமையும் வாய்ந்த நிரந்தரப் பதிவாளர் நியமிக்கப்படாததால், பல்கலைக் கழகத்திற்குள் அரங்கேறி வரும் நிர்வாக அசிங்கங்களுக்கு அளவேயில்லை.
இவ்விரு முக்கியப் பொறுப்புகளின் பரிதாப நிலை இப்படியிருக்க, மூன்றாவது முக்கியப் பொறுப்பாகிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பொறுப்பு 2019 மே மாதத்திருந்து, கடந்த ஆறு ஆண்டுகளாகத் தற்காலிகப் பொறுப்பாகவே இருக்கிறது.
ஒரு பல்கலைக் கழகத்தின் முதுகெலும்பாகச் செயல்பட வேண்டிய மூன்று முக்கியப் பொறுப்புகளும் முடமாகியிருப்பதால், பல்கலைக் கழகத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் செயலிழந்து, ‘கோமா’ நிலையில் உள்ளன.
இதனால், பல்கலைக் கழகத் தேர்வின் முடிவுகள் (Result) வெளியாகி, மாணவர்களுக்கு, ஒருசில நாட்களில் வழங்கப்பட வேண்டிய சான்றிதழ்கள், பல்வேறு பிரச்னைகளை எழுப்பியப் பிறகு இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப்படுகிறது. இதனால் போட்டித் தேர்வுகள் எழுதி வெற்றி பெறும் மாணவர்கள் உரியக் காலத்தில் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கு இயலாமல், அரிதாகக் கிடைத்த வேலை வாய்ப்புகளையே இழக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.
பல்கலைக் கழகத் துணைவேந்தர் இல்லாமல், பட்டமளிப்பு விழா நடத்தி, துணைவேந்தரின் கையொப்பம் இல்லாமல், பல்கலைக் கழகப் பட்டம் (Degree) வழங்கப்பட்டுள்ளது. இது பிற்காலத்தில் வேலைவாய்ப்புகள் வரும் போது ஏதேனும் பிரச்னையை உருவாக்குமா? என்ற ஐயப்பாட்டை மாணவர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
இதுபோன்று, நாள்தேறும் அடுக்கடுக்கானக் குற்றச்சாட்டுகளும் ஐயப்பாடுகளும் இப்பல்கலைக் கழகம் மூலம் எழுந்து கொண்டேயிருக்கின்றன. இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தில் பல ஆண்டுகளாக நியமிக்கப்படாமல் இருக்கும் துணைவேந்தர், பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆகிய மூன்று முக்கியப் பொறுப்புகளுக்கும் தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களை விரைவாக நியமித்து, ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் மாண்பை காத்து, மாணவர்களின் சிரமங்களைப் போக்குவது தமிழக அரசு மற்றும் தமிழக ஆளுநரின் தலையாயக் கடமையாகும்.
கட்டுரை: முனைவர் கமல. செல்வராஜ், தென்மாநில ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கேந்திரம் ஆசிரியர் கல்வி.
அழைக்க: 9443559841
அணுக: drkamalaru@gmail.com
(இக்கட்டுரை 18-09-2025 அன்று ie Tamil E-Journal இல் பிரசுரமானது.)
All reaction

Saturday, 6 September 2025

ஓணம் சொல்லும் மகாபலி கதை!

 ஓணம் சொல்லும் மகாபலி கதை!

முனைவர் கமல. செல்வராஜ்.
உலக நாடுகள் அனைத்திலும் வாழும் மலையாள மக்கள் மிகவும் மகிழ்ச்சியோடும் எழுச்சியோடும், தங்களின் வசந்த விழாவாகக் கொண்டாடும் ஓணப்பண்டிகை இன்று கேரளா மாநிலத்தில் கோலாகலமாக நடக்கிறது. கேரளாவில் ஆண்டுதோறும் சிங்கம் மாதத்தின் அத்தம் நட்சத்திரத்தில் தொடங்கி, திருவோண நட்சத்திரம் வரை 10 நாள்கள் தொடர்ச்சியாக இப்பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. இப்பண்டிகை மக்களின் பொழுதுப் போக்கிற்காக மட்டும் கொண்டாடப்படுவதில்லை. இதற்குள், அனைத்து மக்களும் தங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டியத் மிக முக்கியமானத் தத்துவங்கள் ஏராளம் நிறைந்துள்ளன.
ஓணம் பிறந்த கதை.
அசுரக்குலத்துதித்து, நீதியையும், தர்மத்தையும் நிலைநிறுத்தி நல்லாட்சிப் புரிந்ததால், நாட்டு மக்களால் போற்றிப் புகழப்பட்டவர் மகாபலி மன்னன். பூலோக ஆட்சியில், மக்களிடம் கிடைத்த ஏகோபித்த ஆதரவு, அவரை, வெல்வதற்கு எவருமில்லை என்னும் ஆணவத்தின் உச்சத்திற்குக் கொண்டுச்சென்றது. அதனால், மன்னருக்கு, தேவலோகத்தையும் அடக்கியாள வேண்டும் என்னும் பேராசைப் பற்றிக் கொண்டது. அதனால், தேவர்களோடுப் போர் தொடுப்பதற்குத் தயாரானார்.
அசுரக் குலத்தைச் சார்ந்த ஒருவர், தங்களுக்குத் தொடர்ந்து தொல்லைக் கொடுத்து, தங்கள் மீது போர் தொடுப்பதற்கும் தயாரானதைத் தாங்கிக் கொள்ள இயலாத தேவர்கள், நேராக மகாவிஷ்ணுவிடம் சென்று, தங்களை, அசுரனிடமிருந்து பாதுகாக்குமாறு முறையிட்டனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற மகாவிஷ்ணு, வாமன அவதாரமெடுத்து, பூலோகம் வந்தார். பின்னர் நேராக யாகத்திலிருந்த மகாபலி மன்னனிடம் சென்று, தமக்கு பூலோகத்தில் யாகம் நடத்துவதற்கு மூன்றடி மண் வேண்டுமென்று யாசித்து நின்றார்.
தன்முன் யாசித்து நிற்பவர் யார் என்பதை ஆய்தறியும் ஞானமற்ற அவ்வசுரன், வாமனனிடம், மூன்றடி மண் தானே, தாராளமாக எடுத்துக்கொள் என ஏளனமாகவும் இளக்காரமாகவும் பதிலுரைத்தார். தமது, தவ வல்லமையால், மகாபலி முன், யாசித்து நிற்பவர் யாரென்பதை உணர்ந்த, அசுரக்குலத்தின் குரு சுக்கிராச்சாரியர், தடுத்தும், மகாபலி செவிமடுக்காமல், தான் கொடித்த வாக்குறுதியில் உறுதியாக நின்றார்.
தமது சுயரூபத்தால் மண்ணையும் விண்ணையும் இரண்டடியால் அளந்த மகாவிஷ்ணு, மூன்றாவதடியாக ஆணவத்தின் அடையாளமாகத் திகழ்ந்த மகாபலியின் தலையில், தன் காலை வைத்து பாதாளத்தில் தாழ்த்தினார். அப்போது, மகாவிஷ்ணுவிடம், மகாபலி யாசித்துப் பெற்றது தான், ஆண்டுக்கு ஒரு முறை, தன்னை நேசித்த மக்களைச் சந்திக்க பூலோகம் வர அருள வேண்டும் என்னும் வரம். அப்படி ஆண்டுக்கு ஒரு முறை தங்களுக்கு நல்லாட்சி வழங்கிய மன்னன் மகாபலி, தங்களை சந்திக்க வரும் நாளை ஓணப்பண்டிகையாக உலகம் முழுவதும் வாழும் மலையாள மக்கள் மிகவும் விமரிசையாக இன்று வரை கொண்டாடி வருகின்றனர்.
கதை கூறும் தத்துவம்.
ஓணம் பற்றி பல்வேறு கதைகளும் சம்பவங்களும் கூறப்பட்டாலும். இக்கதை மட்டுமே மக்கள் மனதில் மிக ஆழமாகப் பதிந்து பரவலாகப் பேசப்படுகிறது. அதற்குக் காரணம் இக்கதையினுள் அடங்கியுள்ள, அனைத்துத் தரப்பு மக்களும் உணர்ந்து கொள்ள வேண்டிய வாழ்வியியல் தத்துவங்களாகும்.
அதில் முதலாவது, நாடாளும் மன்னன், மக்களின் நலனுக்காக நல்லாட்சி நடத்தினால், மக்கள் எப்போதும் அவருக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்பதை உணர்த்துவது. அதைத் தொடர்ந்து மன்னன், எவ்வளவுதான் நல்லாட்சி நடத்தினாலும், அவனுக்கு ஆணவம் தலைக்கேறி விட்டால் அழிவு நிச்சயம் என்பதைக் காட்டுவது.
தன்னை விட வலிமை மிக்காரிடம் வம்பு செய்தால், ஏதேனும் வகையில் தோல்வி நிச்சயம் என்பதை அறிவிப்பது. எதையும் ஆய்ந்தறியாமல் வாக்குறுதியளிக்கக் கூடாது, அவ்வாறு செய்தால் அங்கே ஆபத்து சூழ்ந்திருக்கும் என்பதை வலியுறுத்துவது. எவருடைய உருவையும் கண்டு ஏளனம் செய்யாதிருத்தல். எந்தச் சூழ்நிலையிலும் குருவின் அறிவுரையை உதாசினப்படுத்தக் கூடாது.
எவருக்காகவும், ஒருவருக்குக் கொடுத்த வாக்குறுதியை வாப்பஸ் பெறாமல், அதில் உறுதியாகயிருந்து நிறைவேற்றுவது. தங்களுக்கு நல்லாட்சி நல்கிய மன்னனுக்கு நன்றி மறவாமலிருப்பது. உழைப்பிற்கும் நேர்மைக்கும் மரியாதை செலுத்துவது. இவையே இப்பண்டிகை மூலம் நாட்டில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உணர்த்தும் தத்துவங்களாகும்.
வேற்றுமையில் ஒற்றுமை.
தமிழகத்தில் தீபாவளியை எப்படி உலகத் தமிழர்கள் அனைவரும் எவ்வித சாதி, மத, இன, உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடுமின்றி கொண்டாடுகிறார்களோ அது போன்றே கேரளாவில் உள்ள அனைத்துத் தரப்பட்ட மக்களும் எவ்வித வேற்றுமையுமின்றி ஒற்றுமையுடன் கொண்டாடுகின்றனர்.
இந்த ஒற்றுமைக்கு வலிமை சேர்க்கும் விதத்தில், ஓணப்பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் நடத்தப்படும் பாரம்பரிய விளையாட்டுகள் விளங்குகின்றன. அவற்றில் கயிறு இழுத்தல், களரி, வள்ளக்களி, புலிக்களி, பெண்களுக்கு மட்டுமே உரித்தான, அனைவரும் கசவு எனப்படும் தூய வெண்ணிற சாரி அணிந்து, வட்ட வடிவில் நின்று பாடல்பாடி, கைதட்டி நடனம் ஆடும் கைகொட்டுக் களி அல்லது திருவாதிரை களி மற்றும் பாரம்பரிய நடனப் போட்டிகள், ஓண ஊஞ்சல், அத்தப்பூ கோலம் போடுதல் போன்ற அனைத்து விளையாட்டுகளும் கேரளமக்கள் அனைவரும் ஒருவரே என்பதற்குப் சான்றுப் பகர்வனவாகும்.
இவ்வளவு தத்துவங்களையும் உள்ளடக்கிய, இப்பண்டிகை, தமிழகத்தில் மன்னராட்சி நடந்த காலகட்டத்தில், பாண்டியன் நெடுஞ்செழியன், மதுரையில் சிறப்பாகக் கொண்டாடயிருக்கிறார் என்ற தகவல் தமிழக வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. அதுபோன்று தமிழ் இலக்கியங்கள் சிலவற்றிலும் இப்பண்டிகைப் பற்றியச் செய்திகள் உள்ளன. ஆனாலும் இப்பண்டிகை இன்று கேரளா மாநிலத்தின் தேசியப் பண்டிகையாக அங்கீகரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் வாழும் மலையாள மக்கள் மங்களகரமாகக் கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்குத் தமிழக மக்களின் பொன்னோண வாழ்த்துகளைத் தெரிவிப்போம்.
கட்டுரை: முனைவர் கமல. செல்வராஜ்
கல்வியாளர்
அருமனை.
அழைக்க: 9443559841
அணுக: drkamalaru@gmail.com
(இக்கட்டுரை 05-09-2025 அன்று IE Tamil E Journal இல் பிரசுரமானது.)