Thursday, 11 December 2025

தேசிய மொழிகள் தினம்: பாரதிக்குக் கிடைத்த மகத்துவம்.

 தேசிய மொழிகள் தினம்: பாரதிக்குக் கிடைத்த மகத்துவம்.

இன்று மகாகவி சுப்பிரமணியப் பாரதி பிறந்த தினம், நாடு முழுவதும் தேசிய மொழிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
பாரத தேசத்தில் சுதந்திரக் கனல் பற்றி எரிந்த போது, விடுதலைக்காகப் போராடிய ஒவ்வொரு தலைவரும், அவரவருக்கென்று ஒரு தனிப்பாணியை வகுத்து, போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர். ஆனால், முண்டாசுக் கவிஞர் சுப்ரமண்ணியப் பாரதி, இப்போராட்டத்தில், தன் மனதில் தோன்றிய போராட்ட எண்ணங்களை, போனாவை துப்பாக்கியாக்கி, வார்த்தைகளைத் தோட்டாக்களாக்கி, அன்னியனின் நெஞ்சில் தீக்கனலாய்ப் பாச்சினான்.
தமிழ்மொழி மீது காதல்.
மற்றவர்களெல்லாம், நாட்டு விடுதலையைப் பற்றி மட்டுமே சிந்தித்து, அதற்காகப் போராடிக்கொண்டிருந்த நேரத்தில், பாரதி, நாட்டு விடுதலையோடு, நம் நாட்டின் கல்வி, கலாச்சாரம், கலை, மொழி, பொருளாதாரம், தொழில் வளம், தொலைத்தொடர்பு ஆகியவற்றை எப்படி உலகின் உன்னத நிலைக்குக் கொண்டுச் செல்லலாம் என்ற தொலைநோக்குடன் சிந்தித்துச் செயலாற்றினார்.
அந்த வகையில் அவர், பாரதத்திலுள்ள மொழிகள் மீது கொண்டிருந்த மரியாதை அபரிதமானது. அதிலும், தமிழ் மொழி மீது கொண்டிருந்த காதல் அளப்பரியது.
பன்மொழி புலமை.
பாரதத்தில், தேசிய அந்தஸ்து பெற்ற மொழிகள் 22 ஆகும். இவற்றில்:
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்”- எனப் பாரதி ஓங்கி உரைக்கின்றார். இது அவர், வெறும் பொய்யும் புரட்டுமாக உரைத்ததன்று. சுமார் 13 மொழிகள் அவருக்கு, நன்கு பரிச்சயமாயிருந்தன. அதன் வெளிப்பாடே இக்கூற்று.
“செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே” – என்னும் கவிதை வரியால் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார் பாரதி. இவ்வாறு, பாரதி, மொழிகள் மீது கொண்டிருந்த பற்றினைப் போற்றும் வகையில் மத்திய அரசு 2022 ஆம் ஆண்டு முதல், பாரதி பிறந்த நாளான டிசம்பர் 11 ஆம் தேதியை, ‘பாரதிய பாஷா திவாஸ்’ என்னும் பெயரில் ‘தேசிய மொழிகள் தினமாகப்’ பிரகடனப்படுத்தியது.
மகாகவிக்குக் கிடைத்த அந்தஸ்து
மத்திய அரசால், “பாரதிய பாஷா திவாஸ்” என அறிவிக்கப்பட்ட இந்நாளை, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் ஆண்டுதோறும் மிக விமரிசையாகக் கொண்டாட வேண்டும் எனப் பல்கலைக்கழக மானியக் குழு அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவுறித்தியது.
அவ்வகையில் தற்பொழுது தமிழகத்திலுள்ள, பள்ளிகள் முதல் பல்கலைக் கழகங்கள் வரை இந்நாளில், மாணவர்களுக்கிடையே சுப்ரமணியப்பாரதியின் பெயரில் பல்வேறு கலை, இலக்கியப் போட்டிகள், கருத்தரங்குகள், கலைநிகழ்ச்சிகள் உட்படப் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி பாரதியின் மகத்துவத்தை இளம் தலைமுறையினருக்குள் புகுத்துவதில் தேசம் முழுவதுமுள்ள கல்வி நிறுவனங்கள் முனைப்புடன் செயல்படுத்துகின்றன. இது, மகாகவிக்குக் கிடைத்த மாபெரும் அந்தஸ்து மட்டுமின்றி, தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் கிடைத்த அளப்பரிய அங்கீகாரமாகும்.
பார்போற்றும் பாரதி.
''ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்”- என்கிறார்.
ஒரு பேதை உரைத்ததாக பாரதி கூறும் நிலை, பாரதத்திலுள்ள எந்த மொழிக்கும் வராமல் இருப்பதற்காக மத்திய அரசால், தற்பொழுது வாடிவமைக்
கப்பட்டிருக்கும் தேசியக் கல்விக் கொள்கையில், தொடக்க நிலையிலிருந்து, உயர்நிலைக் கல்வி வரை தாய்மொழியில் படிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதோடு மாணவர்கள், ஒரு மொழி, அறிவோடு நின்று விடாமல் பன்மொழி கற்கும் வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, தமிழ் மொழிக்குத் தேசம் முழுக்கப் பெருமை சேர்த்துள்ள பாரதியை, பார்போற்றும் பாரதியாக மாற்றிக்காட்டும் பொறுப்பு தமிழர்களுக்கும் தமிழகத்திற்கும் உண்டு என்பதை அனைவரும் உணர வேண்டும்.
-முனைவர் கமல. செல்வராஜ்
கல்வியாளர், அருமனை.
பேச: 9443559841
(இக்கட்டுரை இன்றைய(11-12-2025), தினமலர் தேசிய நாளிதழில் பிரசுரமாகியுள்ளது)
May be an image of text
All reactions:



Friday, 19 September 2025

அறம் போதிக்கும் பல்கலைக் கழகத்தின் அவலம்.

 அறம் போதிக்கும் பல்கலைக் கழகத்தின் அவலம்.

தலைமை இல்லாமல் தடுமாறும் அறம் போதிக்கும் பல்கலைக் கழகம்; தமிழக அரசு கவனிக்குமா?
கட்டுரை: முனைவர் கமல. செல்வராஜ்
“ஒரு நாட்டின் வளர்ச்சியும் உயர்ச்சியும், அந்நாட்டின் கல்வியை மையமாகக் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது” என்று சுவாமி விவேகானந்தர் உரக்க உரைத்துள்ளார்.
அப்படிப்பட்டக் கல்விக்கு அடித்தளம் அமைப்பது ஆசிரியர்களின் தலையாயக் கடமை. அதற்காக அறிவு, ஆற்றல், தியாகம், அறம், அர்பணிப்பு, தன்னலமின்மை ஆகியவற்றைக் கொண்ட கண்ணியமிகு ஆசிரியர்களை உருவாக்குவது அரசின் உன்னத நோக்கமாக இருக்க வேண்டும்.
அந்த நோக்கத்தின் அடிப்படையில் 2008 இல், தமிழக அரசால் சென்னையில் தொடங்கப்பட்டது, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம். இது, இந்தியாவில் ஆசிரியர் கல்விக்காக மட்டும் ஆரம்பிக்கப்பட்ட முதல் பல்கலைக் கழகமாகும். அதுவரையிலும் தமிழகத்திலுள்ள வேறுவேறு பல்கலைக் கழகங்களின் கீழ் செயல்பட்டு வந்த அனைத்து பி.எட். கல்லூரிகளையும் ஒருங்கிணைத்து, இப்பல்கலைக் கழகம் செயல்படத் தொடங்கியது.
ஆரம்பத்தில், இதனால் அங்கீகரிக்கப்பட்ட அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகள் என சுமார் 746 கல்லூரிகள் இயங்கி வந்தன. அதன் பின்னர் பல்கலைக் கழத்தின் நிர்வாகச் சீர்கேடு, சுயநிதி கல்லூரிகளுக்குப் பல்கலைக் கழகத்தால் கொடுக்கப்பட்ட தேவையற்ற நெருக்கடிகள் உட்படப் பல்வேறு காரணங்களால், தொடர்ந்து ஒவ்வொரு பி.எட். கல்லூரிகளாக மூடப்பட்டு, தற்போது சுமார் அறுநூறுக்கும் குறைவான கல்லூரிகளே செயல்படுகின்றன.
தற்பொழுது இப்பல்கலைக் கழகத்தில் மிக முக்கியப் பொறுப்புகளான துணைவேந்தர், பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆகிய மூன்று பொறுப்புகள், பல ஆண்டுகளாக நியமனம் செய்யப்படாமல் உள்ளன. இதனால், இப்பல்கலைகழகம் எண்ணற்ற நிர்வாகக் குளறுபடிகளுக்குள் சிக்குண்டுள்ளது. இதனால், இதன் கீழ் செயல்படும் பி.எட். கல்லூரி நிர்வாகிகளும் அவற்றில் படிக்கும் மாணவர்களும் நாள்தோறும் அனுபவிக்கும் இன்னல்களுக்கு அளவேயில்லை.
கடைசியாக இப்பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராக இருந்தவர் 2022 நவம்பர் மாதம் பணி நிறைவுற்றுள்ளார். அதன் பிறகு, கடந்த மூன்றாண்டுகளாகத் துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை.
துணைவேந்தருக்கு அடுத்து மிக முக்கியப் பொறுப்பானப் பதிவாளர் பொறுப்பில் இருந்தவர் 2016 ஜூன் மாதம் ஓய்வு பெற்றுள்ளார். அவருக்குப் பிறகு, கடந்த ஒன்பது ஆண்டுகளாக, இப்பொறுப்பில் இதுவரை நிரந்தர பதிவாளர் நியமிக்கப்படவில்லை. ஆனால், இந்த ஒன்பது ஆண்டுகளில், இப்பல்கலைக் கழகத்தில், வேறுவேறு துறைகளில் பணிபுரிந்த பேராசிரியர்கள் ஏழு பேரை மாற்றி மாற்றி பொறுப்பு பதிவாளர்களாக நியமித்துள்ளது தமிழக அரசு.
இவர்களில் ஒருவர் மீது, பதிவாளர் பொறுப்புக்குரியக் கல்வித் தகுதியும் பணி அனுபவமும் இல்லாமல், போலியான சான்றிதழ்கள் மூலம் நியமிக்கப்பட்டார் என்றக் குற்றச்சாட்டு எழுந்து, நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. அதனால், அவர் அப்பொறுப்பிலிருந்து சில மாதங்களிலேயே நீக்கப்பட்டார். ஒருவர் மீது, நிர்வாக சீர்கேடு குற்றச்சாட்டு எழுந்து அதுவும் நீதிமன்றத்தில் வழக்காகி, அப்பொறுப்பிலிருந்து அகற்றப்பட்டார். இன்னொரு பதிவாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்து, வழக்குப் பதிவானதினால், பதிவாளர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டதோடு, பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.
இப்படி, கடந்த ஒன்பது ஆண்டுகளாக, இப்பல்கலைக் கழகத்தில், தகுதியும் திறமையும் வாய்ந்த நிரந்தரப் பதிவாளர் நியமிக்கப்படாததால், பல்கலைக் கழகத்திற்குள் அரங்கேறி வரும் நிர்வாக அசிங்கங்களுக்கு அளவேயில்லை.
இவ்விரு முக்கியப் பொறுப்புகளின் பரிதாப நிலை இப்படியிருக்க, மூன்றாவது முக்கியப் பொறுப்பாகிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பொறுப்பு 2019 மே மாதத்திருந்து, கடந்த ஆறு ஆண்டுகளாகத் தற்காலிகப் பொறுப்பாகவே இருக்கிறது.
ஒரு பல்கலைக் கழகத்தின் முதுகெலும்பாகச் செயல்பட வேண்டிய மூன்று முக்கியப் பொறுப்புகளும் முடமாகியிருப்பதால், பல்கலைக் கழகத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் செயலிழந்து, ‘கோமா’ நிலையில் உள்ளன.
இதனால், பல்கலைக் கழகத் தேர்வின் முடிவுகள் (Result) வெளியாகி, மாணவர்களுக்கு, ஒருசில நாட்களில் வழங்கப்பட வேண்டிய சான்றிதழ்கள், பல்வேறு பிரச்னைகளை எழுப்பியப் பிறகு இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப்படுகிறது. இதனால் போட்டித் தேர்வுகள் எழுதி வெற்றி பெறும் மாணவர்கள் உரியக் காலத்தில் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கு இயலாமல், அரிதாகக் கிடைத்த வேலை வாய்ப்புகளையே இழக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.
பல்கலைக் கழகத் துணைவேந்தர் இல்லாமல், பட்டமளிப்பு விழா நடத்தி, துணைவேந்தரின் கையொப்பம் இல்லாமல், பல்கலைக் கழகப் பட்டம் (Degree) வழங்கப்பட்டுள்ளது. இது பிற்காலத்தில் வேலைவாய்ப்புகள் வரும் போது ஏதேனும் பிரச்னையை உருவாக்குமா? என்ற ஐயப்பாட்டை மாணவர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
இதுபோன்று, நாள்தேறும் அடுக்கடுக்கானக் குற்றச்சாட்டுகளும் ஐயப்பாடுகளும் இப்பல்கலைக் கழகம் மூலம் எழுந்து கொண்டேயிருக்கின்றன. இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தில் பல ஆண்டுகளாக நியமிக்கப்படாமல் இருக்கும் துணைவேந்தர், பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆகிய மூன்று முக்கியப் பொறுப்புகளுக்கும் தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களை விரைவாக நியமித்து, ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் மாண்பை காத்து, மாணவர்களின் சிரமங்களைப் போக்குவது தமிழக அரசு மற்றும் தமிழக ஆளுநரின் தலையாயக் கடமையாகும்.
கட்டுரை: முனைவர் கமல. செல்வராஜ், தென்மாநில ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கேந்திரம் ஆசிரியர் கல்வி.
அழைக்க: 9443559841
அணுக: drkamalaru@gmail.com
(இக்கட்டுரை 18-09-2025 அன்று ie Tamil E-Journal இல் பிரசுரமானது.)
All reaction

Saturday, 6 September 2025

ஓணம் சொல்லும் மகாபலி கதை!

 ஓணம் சொல்லும் மகாபலி கதை!

முனைவர் கமல. செல்வராஜ்.
உலக நாடுகள் அனைத்திலும் வாழும் மலையாள மக்கள் மிகவும் மகிழ்ச்சியோடும் எழுச்சியோடும், தங்களின் வசந்த விழாவாகக் கொண்டாடும் ஓணப்பண்டிகை இன்று கேரளா மாநிலத்தில் கோலாகலமாக நடக்கிறது. கேரளாவில் ஆண்டுதோறும் சிங்கம் மாதத்தின் அத்தம் நட்சத்திரத்தில் தொடங்கி, திருவோண நட்சத்திரம் வரை 10 நாள்கள் தொடர்ச்சியாக இப்பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. இப்பண்டிகை மக்களின் பொழுதுப் போக்கிற்காக மட்டும் கொண்டாடப்படுவதில்லை. இதற்குள், அனைத்து மக்களும் தங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டியத் மிக முக்கியமானத் தத்துவங்கள் ஏராளம் நிறைந்துள்ளன.
ஓணம் பிறந்த கதை.
அசுரக்குலத்துதித்து, நீதியையும், தர்மத்தையும் நிலைநிறுத்தி நல்லாட்சிப் புரிந்ததால், நாட்டு மக்களால் போற்றிப் புகழப்பட்டவர் மகாபலி மன்னன். பூலோக ஆட்சியில், மக்களிடம் கிடைத்த ஏகோபித்த ஆதரவு, அவரை, வெல்வதற்கு எவருமில்லை என்னும் ஆணவத்தின் உச்சத்திற்குக் கொண்டுச்சென்றது. அதனால், மன்னருக்கு, தேவலோகத்தையும் அடக்கியாள வேண்டும் என்னும் பேராசைப் பற்றிக் கொண்டது. அதனால், தேவர்களோடுப் போர் தொடுப்பதற்குத் தயாரானார்.
அசுரக் குலத்தைச் சார்ந்த ஒருவர், தங்களுக்குத் தொடர்ந்து தொல்லைக் கொடுத்து, தங்கள் மீது போர் தொடுப்பதற்கும் தயாரானதைத் தாங்கிக் கொள்ள இயலாத தேவர்கள், நேராக மகாவிஷ்ணுவிடம் சென்று, தங்களை, அசுரனிடமிருந்து பாதுகாக்குமாறு முறையிட்டனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற மகாவிஷ்ணு, வாமன அவதாரமெடுத்து, பூலோகம் வந்தார். பின்னர் நேராக யாகத்திலிருந்த மகாபலி மன்னனிடம் சென்று, தமக்கு பூலோகத்தில் யாகம் நடத்துவதற்கு மூன்றடி மண் வேண்டுமென்று யாசித்து நின்றார்.
தன்முன் யாசித்து நிற்பவர் யார் என்பதை ஆய்தறியும் ஞானமற்ற அவ்வசுரன், வாமனனிடம், மூன்றடி மண் தானே, தாராளமாக எடுத்துக்கொள் என ஏளனமாகவும் இளக்காரமாகவும் பதிலுரைத்தார். தமது, தவ வல்லமையால், மகாபலி முன், யாசித்து நிற்பவர் யாரென்பதை உணர்ந்த, அசுரக்குலத்தின் குரு சுக்கிராச்சாரியர், தடுத்தும், மகாபலி செவிமடுக்காமல், தான் கொடித்த வாக்குறுதியில் உறுதியாக நின்றார்.
தமது சுயரூபத்தால் மண்ணையும் விண்ணையும் இரண்டடியால் அளந்த மகாவிஷ்ணு, மூன்றாவதடியாக ஆணவத்தின் அடையாளமாகத் திகழ்ந்த மகாபலியின் தலையில், தன் காலை வைத்து பாதாளத்தில் தாழ்த்தினார். அப்போது, மகாவிஷ்ணுவிடம், மகாபலி யாசித்துப் பெற்றது தான், ஆண்டுக்கு ஒரு முறை, தன்னை நேசித்த மக்களைச் சந்திக்க பூலோகம் வர அருள வேண்டும் என்னும் வரம். அப்படி ஆண்டுக்கு ஒரு முறை தங்களுக்கு நல்லாட்சி வழங்கிய மன்னன் மகாபலி, தங்களை சந்திக்க வரும் நாளை ஓணப்பண்டிகையாக உலகம் முழுவதும் வாழும் மலையாள மக்கள் மிகவும் விமரிசையாக இன்று வரை கொண்டாடி வருகின்றனர்.
கதை கூறும் தத்துவம்.
ஓணம் பற்றி பல்வேறு கதைகளும் சம்பவங்களும் கூறப்பட்டாலும். இக்கதை மட்டுமே மக்கள் மனதில் மிக ஆழமாகப் பதிந்து பரவலாகப் பேசப்படுகிறது. அதற்குக் காரணம் இக்கதையினுள் அடங்கியுள்ள, அனைத்துத் தரப்பு மக்களும் உணர்ந்து கொள்ள வேண்டிய வாழ்வியியல் தத்துவங்களாகும்.
அதில் முதலாவது, நாடாளும் மன்னன், மக்களின் நலனுக்காக நல்லாட்சி நடத்தினால், மக்கள் எப்போதும் அவருக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்பதை உணர்த்துவது. அதைத் தொடர்ந்து மன்னன், எவ்வளவுதான் நல்லாட்சி நடத்தினாலும், அவனுக்கு ஆணவம் தலைக்கேறி விட்டால் அழிவு நிச்சயம் என்பதைக் காட்டுவது.
தன்னை விட வலிமை மிக்காரிடம் வம்பு செய்தால், ஏதேனும் வகையில் தோல்வி நிச்சயம் என்பதை அறிவிப்பது. எதையும் ஆய்ந்தறியாமல் வாக்குறுதியளிக்கக் கூடாது, அவ்வாறு செய்தால் அங்கே ஆபத்து சூழ்ந்திருக்கும் என்பதை வலியுறுத்துவது. எவருடைய உருவையும் கண்டு ஏளனம் செய்யாதிருத்தல். எந்தச் சூழ்நிலையிலும் குருவின் அறிவுரையை உதாசினப்படுத்தக் கூடாது.
எவருக்காகவும், ஒருவருக்குக் கொடுத்த வாக்குறுதியை வாப்பஸ் பெறாமல், அதில் உறுதியாகயிருந்து நிறைவேற்றுவது. தங்களுக்கு நல்லாட்சி நல்கிய மன்னனுக்கு நன்றி மறவாமலிருப்பது. உழைப்பிற்கும் நேர்மைக்கும் மரியாதை செலுத்துவது. இவையே இப்பண்டிகை மூலம் நாட்டில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உணர்த்தும் தத்துவங்களாகும்.
வேற்றுமையில் ஒற்றுமை.
தமிழகத்தில் தீபாவளியை எப்படி உலகத் தமிழர்கள் அனைவரும் எவ்வித சாதி, மத, இன, உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடுமின்றி கொண்டாடுகிறார்களோ அது போன்றே கேரளாவில் உள்ள அனைத்துத் தரப்பட்ட மக்களும் எவ்வித வேற்றுமையுமின்றி ஒற்றுமையுடன் கொண்டாடுகின்றனர்.
இந்த ஒற்றுமைக்கு வலிமை சேர்க்கும் விதத்தில், ஓணப்பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் நடத்தப்படும் பாரம்பரிய விளையாட்டுகள் விளங்குகின்றன. அவற்றில் கயிறு இழுத்தல், களரி, வள்ளக்களி, புலிக்களி, பெண்களுக்கு மட்டுமே உரித்தான, அனைவரும் கசவு எனப்படும் தூய வெண்ணிற சாரி அணிந்து, வட்ட வடிவில் நின்று பாடல்பாடி, கைதட்டி நடனம் ஆடும் கைகொட்டுக் களி அல்லது திருவாதிரை களி மற்றும் பாரம்பரிய நடனப் போட்டிகள், ஓண ஊஞ்சல், அத்தப்பூ கோலம் போடுதல் போன்ற அனைத்து விளையாட்டுகளும் கேரளமக்கள் அனைவரும் ஒருவரே என்பதற்குப் சான்றுப் பகர்வனவாகும்.
இவ்வளவு தத்துவங்களையும் உள்ளடக்கிய, இப்பண்டிகை, தமிழகத்தில் மன்னராட்சி நடந்த காலகட்டத்தில், பாண்டியன் நெடுஞ்செழியன், மதுரையில் சிறப்பாகக் கொண்டாடயிருக்கிறார் என்ற தகவல் தமிழக வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. அதுபோன்று தமிழ் இலக்கியங்கள் சிலவற்றிலும் இப்பண்டிகைப் பற்றியச் செய்திகள் உள்ளன. ஆனாலும் இப்பண்டிகை இன்று கேரளா மாநிலத்தின் தேசியப் பண்டிகையாக அங்கீகரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் வாழும் மலையாள மக்கள் மங்களகரமாகக் கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்குத் தமிழக மக்களின் பொன்னோண வாழ்த்துகளைத் தெரிவிப்போம்.
கட்டுரை: முனைவர் கமல. செல்வராஜ்
கல்வியாளர்
அருமனை.
அழைக்க: 9443559841
அணுக: drkamalaru@gmail.com
(இக்கட்டுரை 05-09-2025 அன்று IE Tamil E Journal இல் பிரசுரமானது.)

Sunday, 24 August 2025

காதல் என்னும் மாய வலையால் ஓயாத மரணங்கள்: தீர்வு என்ன?

 காதல் என்னும் மாய வலையால் ஓயாத மரணங்கள்: தீர்வு என்ன?

முனைவர் கமல. செல்வராஜ்
சென்னையில் பட்டப்பகலில், இரயில் நிலைத்தில் மக்கள் மத்தியில் ஸ்வாதி வெட்டிக் கொலையிலிருந்து தொடங்கி, திருப்பூர் சத்தியஸ்ரீ-ஐ அவள் வேலை செய்த மருத்துவமனையில், பலர் கண்முன்னே கழுத்தை அறுத்துக் கொன்றது வரை காதலிகளை, காதலர்கள் கொடூரமாகக் கொலை செய்த சம்பவங்கள் தமிழகத்தைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தின.
நாட்டில் பெருகிவரும் தகவல் தொடர்புச் சாதனங்களால், ஏதும் அறியாப் பள்ளிப் பருவத்திலிருந்தே, மாணவ, மாணவிகளிடையே, மோகமும் காமமும் கலந்த காதல் துளிர் விடுகிறது. இவ்வாறு, அறியாப் பருவத்தில் ஆரம்பிக்கும் காதல், பின்னாளில் ஆபத்தாக முடியும் என்பதை இக்காதலர்கள் உணர்வதில்லை. அதன் விளைவு திருமணப்பருவம் எட்டும் போது, பல்வேறு சமூகச் சம்பிரதாயங்களும், குடும்பப் பின்னணிகளும் இவர்களின் காதலுக்கு இடையூறுச் செய்கின்றன.
அதோடு, மட்டுமின்றி நீண்ட நெடுநாள், நிதானமிழந்து உணர்ச்சிப் பெருக்கால் காதலித்து வந்தவர்கள், ‘எல்லாம்’ முடிந்த பிறகு, நிதானமாக தங்களின் எதிர்கால நிஜ வாழ்வைப் பற்றி பரஸ்பரம் சிந்திக்கத் தொடங்குகின்றனர். அப்பொழுது, இருவருக்கும் இடையே ஏற்படும் கருத்து முரண் இம்மாதிரியான கசப்பானக் கொடூரங்களுக்கு, இவர்களை இட்டுச் செல்கின்றன.
இதுபோன்ற காதல் விவகாரத்தால் வெளிச்சத்திற்கு வந்தும் வாராமலும் ஆண்டுக்குச் சராசரியாக 150 பெண்கள் வரை கொலை செய்யப்படுகிறார்கள் என்ற அதிர்ச்சியான புள்ளி விவரத்தை ஒரு தனியார் அமைப்பு (மதுரை எவிடன்ஸ்) வெளியிட்டுள்ளது.
சமீபகாலமாக இந்தக் காதல் கொலைகளின் திசை முற்றிலும் மாறுபட்டுள்ளது. இதுவரையிலும், இருவரும் காதலித்து இடையில் காதலியால் தடங்கல் ஏற்பட்டால், அந்த வலியைத் தாங்கிக் கொள்ளும் மனநிலையற்ற காதலன், காதலியின் கதையை முடித்து வந்தான். இதற்கு விதிவிலக்காக கன்னியாகுமரி மாவட்டத்தில், காதலின் இடையில், இருவருக்குள்ளும் ஏற்பட்ட முரணால், காதலனுக்குக் கஷாயத்தில் விஷம் கொடுத்துக் கொன்ற கிரீஷ்மாவின் கசப்பானக் கதையும் உண்டு.
என்றாலும் இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு, காதலித்து இடையில் ஏதோ காரணத்தால் கைவிட்ட, காதலியைப் பழிவாங்க வேண்டும் என்னும் ஏகச்சிந்தனையில், அவளின் வீட்டின் அருகில் அல்லது வீட்டினுள் சென்று காதலன் தனக்குத்தானே, சுயமரணத்தை ஏற்படுத்திக் கொள்ளும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தான் காதலித்தக் காதலியைத் திருமணம் முடிக்க முயன்றபோது, அவளின் பெற்றோர் சம்மதிக்காததால், ஒரு மாலை வேளையில் தன் வீட்டிலிருந்து பைக்கில் புறப்பட்டு, சாலையோரம் இருந்த காதலியின் வீட்டில் முன் நின்று, தன் உடலில் தானே தீ வைத்து சுயமரணத்திற்கு ஆளானான் ஒரு காதலன்.
நோய்வாய்பட்டுச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்ற போது, தனக்கு ஒருசில நாள்கள் மட்டுமே சிகிச்சையளித்த நர்ஸ் மீது மோகம் ஏற்பட்டு, அவளை திருணம் முடிக்க ஆசை கொண்டு, அதற்குச் சம்மதம் கிடைக்காததால், ஓர் இரவு, அவள் வீட்டின் முன்பக்கத்தில் நின்ற மரத்தில் தூக்கிட்டு, சுயமரணம் ஏற்றுள்ளான், கேரள மாநிலத்தைச் சார்ந்த ஓர் இளைஞன்.
பள்ளி வகுப்பறையிலிருந்து தொடங்கியக் காதல், கல்லூரி படிப்பு முடித்து, வேலை கிடைத்தப் பிறகு, திருமணம் செய்வதற்காக குடும்பத்தாருடன் வந்து, பெண்வீட்டாரிடம் முறைபடி பெண் கேட்க, அவர்களிடமிருந்து ஏமாற்றமே கைமாறாக, அவளின் வீட்டு மாடியில் தூக்கிட்டு சுயமரணம் செய்துள்ளான் ஒரு காதலன்.
இந்த அதிர்ச்சிகள் அனைத்துமே தமிழகத்தில், கற்றவர் அதிகமுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளன. இவ்வாறு நடந்தேறும் கொடூரங்கள், தங்கள் பிள்ளைகள் பற்றி ஆயிரமாயிரம் கனவுகளோடும் கற்பனைகளோடும் இருக்கும், இருசார் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்குப் பேரிழப்பையும், வாழ்நாள் முழுவதும் நீங்கா மனக்காயத்தையும் ஏற்படுத்துகின்றன.
தங்கள் வாழ்க்கையின் இளம் பருத்தில் இமயத்தளவு சாதிக்க வேண்டிய, இளம் சிங்கங்கள், இப்படி, காதல் என்னும் மாய வலையில் சிக்குண்டு, தங்களின் இன்னுயிரை தாங்களாகவே மாயித்துக் கொள்வதும், காதலித்தவள் கிடைக்கவில்லை என்பதற்காக, அவளை வாழவிடாமல் தீர்த்துக் கட்டுவதும் எதனால் என்பதை அறிவுடையோர் ஆராய வேண்டும்.
இதுபோன்ற அநியாய நிகழ்வுகள், வரும் சந்ததியினரிடம் பகராமலிருக்க, பள்ளிப்பாடப் புத்தகங்களில், ஆரம்ப நிலையிலிருந்தே விழுமியக் கவ்வியை (Value Education) அறிமுகப்படுத்த வேண்டும். குடும்ப அமைப்பு மற்றும் வாழ்வியல் முறையைப் பாடத்திட்டங்களில் உட்படுத்த வேண்டும். அதன் மூலம் உண்மையான அன்பு அல்லது காதல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான விளக்கத்தையும் விழிப்புணர்வினையும் மாணக்கர்களிடையே உருவாக்க வேண்டும்.
இதுபோன்ற வன்மங்களுக்குப் பெரும்பாலானக் காரணமாக இருப்பவை சாதி, மத வேறுபாடுகளாகும். எனவே பள்ளிச் சேர்க்கைப் படிவத்திலிருந்து சாதி, மதம் போன்ற மாணவர்களிடம் வேற்றுமையைத் தூண்டும் பகுதிகளை நீக்க வேண்டும்.
ஏதேனும் காரணத்திற்காக மாணவர்கள் அல்லது போலி காதலர்கள் சுயமரணம் செய்து கொண்டால் அவர்களின் குடும்பத்திற்கு அரசும், அரசியல் கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு பண உதவியும் பிற சலுகைகளையும் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. இது மற்றவர்களை இது போல் செய்வதற்கு ஊக்கமளிக்கிறது. அதனால், எந்த வகையில் சுயமரணம் செய்தாலும், அதற்குச் சட்டப்படி குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர எவ்வித உதவியும் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
இவையே இவ்விரு வன்மத்திற்கும் முற்றுப் புள்ளி வைத்து, வரும் தலைமுறையைின் தலையெழுத்தை மாற்றுவதற்கு வழிகோலும் என்பது திண்ணம்.
கட்டுரை: முனைவர் கமல. செல்வராஜ், கல்வியாளர், அருமனை.
அழைக்க: 9443559841
அணுக: drkamalaru@gmail.com
(இக்கட்டுரை 21-08-2025 அன்று IETamil E Journal இல் பிரசுரமானது)
All reactions