Tuesday, 31 March 2020

ஊரடங்கு இங்கே கல்வியை முடக்கவில்லை: சல்யூட் டூ சயின்ஸ் டீச்சர் மேரி சுபா

ஊரடங்கு இங்கே கல்வியை முடக்கவில்லை: சல்யூட் டூ சயின்ஸ் டீச்சர் மேரி சுபா

பாடம் நடத்தாமல் இருந்தால் மாணவர்களின் படிப்பு பாழ்பட்டுப் போகுமே என நினைத்த அந்த ஆசிரியர், கடைசியாக ஒரு புது வழியைக் கண்டுபிடித்தார்.


நாட்டில் நிலவும் கொடிய நோய் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மத்திய அரசு ஒட்டுமொத்த மக்களையும் வீட்டிற்குள் முடங்கியிருக்கச் செய்துள்ளது. மக்களை முடக்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பே பள்ளியிலிருந்து தொடங்கிப் பல்கலைக் கழகம் வரையிலும் மாணவ மாணவியருக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இதனால் மாணவர்களை நோய் தொற்றிலிருந்து காத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் பெற்றோருக்கு ஒரு பக்கத்தில் இருந்தாலும், இன்னொரு பக்கத்தில் அவர்களின் படிப்பு கேள்விக்குறியாகுமோ என்ற ஐயப்பாடு அனைத்துப் பெற்றோர்கள் மத்தியிலும் இருந்தது.

முதலில் மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்ற நிலையில் தற்போது அது ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை தேர்வின்றி அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கூடவே அடுத்த மாதம் நடைபெற இருந்த நீட் மற்றும் பொறியியல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வுகளும் அடுத்த தேதி குறிப்பிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை விட்ட நேரத்தில் மாணவர்கள் ஒரு வேளை குஷியாக இருந்திருக்கலாம். ஏனென்றால் நண்பர்களோடு ஊர் சுற்றலாம், நன்றாக விளையாடலாம் என்றெல்லாம் கருதியிருப்பார்கள். இந்நிலையில் திடீரென வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவிட்ட உடன் மிகவும் சோர்ந்து போனது மாணவர்களாக மட்டுமே இருக்க முடியும். ஏனென்றால் மாணவர்களுக்கு ஒட்டுமொத்த வீட்டு வாசம் என்பது ஒருவகையில் சிறை வாசம் போன்றதுதான்.
முதலில் விடுமுறை கிடைத்த போது மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் ஆனந்தம் அடைந்திருக்கலாம். ஏனென்றால் இனி பள்ளிக்குப் போக வேண்டாம், பாடம் நடத்த வேண்டாம். ஆனால் அவர்களிலும் சில விதிவிலக்கான ஆசிரியர்கள் இருக்கத்தான் செய்வார்கள். மாணவர்களின் படிப்பைப் பற்றி பெற்றோரை விட அக்கறைக் காட்டக்கூடிய ஆசிரியர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கத்தான் செய்வார்கள்.
அப்படிப்பட்ட ஆசிரியர்களில் ஓர் ஆசிரியர்தான் இந்த மேரி சுபா. இவர் கன்னியாகுமரி மாவட்டம் சிதறால் என். எம். வித்யா கேந்திரா சீனியர் செக்கண்டரி (சி.பி.எஸ்.இ) பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். பாடம் கற்பிப்பதிலும், மாணவர்களிடையே ஒழுக்கத்தை நிலைநாட்டுவதிலும் சிறந்த ஆசிரியர் என்று இயல்பாகவே பெயர் பெற்றவர்.
அப்பள்ளிக் கூடத்தில் சீனியர் செக்கண்டரி இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு அறிவியல் பாடம் கற்பித்து வரும் இவருக்கு பள்ளிக்கூடத்திற்கு நீண்ட விடுமுறை விட்ட உடனையே ஒரு சோகம் கௌவிக் கொண்டது. இவ்வளவு நாள்கள் பாடம் நடத்தாமல் இருந்தால் மாணவர்களின் படிப்பு பாழ்பட்டுப் போகுமே என நினைத்த அந்த ஆசிரியர், கடைசியாக ஒரு புது வழியைக் கண்டுபிடித்தார்.
தனது செல்போனில் ஒரு வாட்ஸ்அப் குரூப் தொடங்கி, அதில் தனது வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களையும் இணைத்து ஒவ்வொரு நாளும் தனது வீட்டில் இருந்து கொண்டே தான் கற்பிக்கும் பாடத்தின் ஒரு பகுதியை வீடியோ அல்லது ஆடியோவாகப் பதிவிட்டுகிறார். இதனை மாணவர்கள் கேட்டுவிட்டு, அவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனே அவரிடத்தில் மெசேஜ் மூலமாகவோ, போனில் அழைத்தோ அவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கிறார்.
முதல் வீடியோவில் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய அறிவுரையை வழங்குகிறார். அதன் பிறகு பாடத்தை நடத்துகிறார். இந்த ஆசிரியரின் இச் செயல்பாடு அனைத்து மாணவர்களையும் ஆச்சரியப்படச் செய்துள்ளது. கூடவே அனைத்துப் பெற்றோரும், “எல்லா ஆசிரியர்களும் இதுபோல் மாணவர்களின் படிப்பில் இப்படி அக்கறை காட்டினால் நம்நாடு என்றோ எங்கோ சென்றிருக்கும்” என வெகுவாகப் பாராட்டுகின்றார்கள்.

இறைபணிக்கு நிகரான ஆசிரியர் பணியை இந்த ஒரு மேரி சுபா ஆசிரியை மட்டுமல்ல, நம் நாட்டின் வேறு ஏதேனும் மூலை முடுக்கிலிருந்து ஓர் ஆசிரியர் செய்து வருகிறார் என்றால் அந்த ஆசிரியருக்கும் சேர்த்து நாம் எல்லோரும் ஒரு சபாஷ் சொல்லுவோம்.
(கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர். அழைக்க: 9443559841, அணுக: drkamalaru@gmail.com)

Saturday, 28 March 2020

முடக்கத்தை சுகமாக மாற்ற சில டிப்ஸ்.


முடக்கத்தை சுகமாக மாற்ற சில டிப்ஸ் ; இதை பின்பற்றினால் 21 நாட்களும் 21 நிமிசம் போலத்தான்..











“மனுசன் ஒண்ணு நினைக்க; ஆண்டவன் வேறொண்ணு நினைப்பான்” இப்படியொருப் பழமொழிய ஊருக்குள்ள அடிக்கடிப் பெரியவங்கச் சொல்லிக் கேட்பதுண்டு.
இதைக் கேட்கக் கூடிய இளசுக உடனே சொல்லுவாங்க, “ஆமா… ஆண்டவன்… என்ன ஆண்டவன்… நம்ம மனசிலத் என்னத் தோணுதோ அத செஞ்சிட்டுப் போயிட்டே இருக்க வேண்டுயதுதான்… அப்படியெண்ணு. இப்பத்தான் தெரியுது மனுசன் நினைப்பது ஒண்ணும் நடக்காது, அந்த ஆண்டவன் நினைப்பதுதான் நடக்கும் அப்படியெண்ணு.
ஆனாலும் அந்த ஆண்டவன் இப்படி கொரோனா வைரசால் இந்த உலகத்தையே முடக்கிப் போடுவான் என்று ஒருவர் கூடக் கனவிலும் நினைத்திருக்கு முடியாது.

நாளை காலையில் எழும்பி அங்க போக வேண்டும், அதை செய்ய வேண்டும், அவரைப் பார்க்க வேண்டும் என எத்தனை எத்தனையோ எண்ணங்களோடு இருந்த நமக்கு, விடிந்தால் வீட்டை விட்டே வெளியே வரக்கூடாது என உத்தரவு வந்தால் எப்படியிருக்கும். எப்படி இருக்கும் என எதற்குக் கேட்க வேண்டும்? வந்தே விட்டது. அப்புறம் எதற்கு இப்படியொரு கேள்வி?
ஆம், கொரோனா வைரஸ் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை 21 நாள்கள் நம்மை வீட்டுக்குள்ளே முடக்கி விட்டது. இந்த முடக்கத்தை ஒரு சுமையாக எடுக்காமல், சுகமாக மாற்றுவதற்கு என்னச் செய்யலாம் என்பதற்கு இதோ சில டிப்ஸ். இதைக் கொஞ்சம் செய்து பாருங்கள் 21 நாள்களும் 21 நிமிடம் போல் மாறிவிடும்.
1. தினமும் காலையில் வழக்கமாகத் தூக்கம் எழும்பும் நேரத்தில் இப்பொழுதும் எழுந்து விடுங்கள். இல்லை எங்கும் போக முடியாதே அதனால் அதிக நேரம் தூங்கி நேரத்தைப் போக்குவோம் என நினைத்து அதிக நேரம் தூங்கினால், அது உங்கள் உடலுக்கு ஒத்துவராமல் உடல் சோர்வடைந்து எதுவும் செய்ய முடியாமல் சோம்பேறியாகி விடுவீர்கள்.
2. வழக்கமாக காலையில் வீட்டிலிருந்து வெளியே கிளம்புவதற்காக உங்கள் வேலைகளை மிக அவசர அவசரமாகச் செய்வீர்கள். இப்பொழுது அந்த அவசரத்தை மட்டும் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். எல்லா வேலைகளையும் அவசரமின்றி நிதானமாகச் செய்யுங்கள். கூடவே வீட்டில் உங்கள் வேலைகளைச் செய்வதற்கு இதுவரை யார் உங்களுக்கு உதவியாக இருந்தார்களோ, இப்பொழுது நீங்கள் அவர்களுக்கு உதவியாக இருங்கள். அப்பொழுது அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள்.
3. வீட்டிலிருந்து வெளியே வேலைக்குச் செல்லும் போது அந்தந்த நேரத்திற்கு மட்டுமே சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பீர்கள். அதைப்போன்று இப்பொழுதும் அந்தந்த நேரத்திற்கு மட்டுமே சாப்பிடுங்கள். வீட்டில் தானே இருக்கிறோம் எப்போதாவது சாப்பிடலாம் என்றும் நினைக்காதீர்கள் அல்லது நேரம் காலம் பார்க்காமல் எப்பொழுதுமே நொறுக்குத்தீனி சாப்பிட்டுக் கொண்டே இருக்காதீர்கள் அதுவும் உங்கள் உடலுக்கு கொரோனாவை விடப் பெரும் தீங்கை உருவாக்கி விடும்.
4. தயவு செய்து இதுதான் டி.வி. பார்ப்பதற்குக் கிடைத்த வாய்ப்பு என நினைத்து முழு நேரமும் அதன் முன்பு அமர்ந்து விடாதீர்கள். ஏனென்றால் கடந்த சில தினங்களாக கொரோனா வைரசின் கொடுமையை விட நமது டி.வி. சானல்களும், முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களும் தரும் செய்திகள் தான் மக்களை பெருமளவில் பயமுறுத்திப் பீதியடையச் செய்து கொண்டிருக்கின்றன. இப்போதெல்லாம் கொரோனா வைரஸ் பற்றி இவைகளில் வரும் தகவல்கள் அல்லது செய்திகளில் எவ்வித நம்பகத்தன்மையும் இல்லை என்பதே உண்மை. இவற்றிற்குப் பதிலாக கண்டிப்பாக ஒன்றோ, இரண்டோ பத்திரிகைகளை வாங்கிப் படியுங்கள் அவை உங்களுக்கு ஓரளவிற்கு உண்மையானத் தகவல்களைத் தரும். கூடவே எவ்விதமான அச்சத்தையும் ஏற்படுத்தாது.
5. இதை ஓர் அரியச் சந்தர்ப்பமாகக் கருதி நீங்கள் பள்ளியில் படித்த போது உங்கள் நண்பர்களிடம் எழுதி வாங்கிய ஆட்டோகிராப் அல்லது நீங்கள் எழுதிய டையரி எங்கோ ஓர் இடத்தில் பல ஆண்டுகளாக உங்கள் பார்வையில் படாமல் ஒழிந்திருக்கும். அதை தேடிப்பிடித்து, தூசுத் தட்டிக் கொஞ்சம் படித்துப் பாருங்கள். அதற்குள்ளே எவ்வளவோ அற்புதமானத் தகவல்கள் புதைந்திருக்கும். ஒரு வேளைப் படிக்கப்படிக்கப் பெரும் ஆனந்தத்தைத் தரும். அதோடு அந்த ஆட்டோகிராப்பில் உங்கள் நண்பர்களின் டெலிபோன் எண் இருந்தால் அதில் அவர்களை அழைத்துப் பேசுங்கள். பழைய உறவுகளைப் புதுப்பித்துக் கொள்வதற்கும், புதிய புதிய விஷயங்களை அறிந்து கொள்வதற்கும் இதைவிட உங்களுக்கு இன்னொரு சந்தர்ப்பம் அமையாது.
6. திருமணம் ஆனவர்கள், உங்கள் திருமணத்திற்கு எடுத்த வீடியோ மற்றும் போட்டோ ஆல்பம் இரண்டையும் தேடிப்பிடித்து எடுங்கள். இவை இரண்டையும் திருமணம் முடிந்த நேரத்தில் ஒன்றோ இரண்டோ முறை பார்த்திருப்பீர்கள். அதோடு சலித்துப் போய் எங்கோ ஒரு மூலையில் முடக்கி வைத்திருப்பீர்கள். இப்பொழுது அந்த ஆல்பத்தை உங்கள் மனைவி மற்றும் பிள்ளைகளோடு சேர்ந்திருந்துப் புரட்டிப் பாருங்கள். ஆஹா… பழைய நினைவுகள் எல்லாம் எப்படி உங்கள் கண்முன் நிழலாடும் என்பது அப்பொழுதுப் புரியும்.
அதைப் போன்றே அந்த வீடியோவைக் குடும்பத்துடன் இருந்துப் போட்டுப் பாருங்கள். பல மணிநேரம் உங்களை அறியாமலே போகும். அதோடி ஒரு சினிமா தீயேட்டரில் இருந்து ஒரு குடும்பப் படம் பார்த்ததுப் போன்ற உணர்வு வரும்.
7. உங்களுக்குள்ளே எத்தனையோ தனித்திறமைகள் புதைந்து கிடக்கலாம். அதாவது கதை, கவிதை, கட்டுரை எழுதுவது, ஓவியம் தீட்டுவது, பாடல் பாடுவது, நடனம் ஆடுவது இப்படி எத்தனை எத்தனையோ திறமைகள் உங்களுக்குள் இருக்கலாம் அவற்றையெல்லாம் நல்ல முறையில் பயிற்சி செய்யுங்கள். மட்டுமின்றி ஆர்வமிருந்தால் உங்கள் குழந்தைகளுக்குக் கூட அவற்றையெல்லாம் நீங்கள் கற்றுக் கொடுக்கலாம்.
8. காலையிலோ அல்லது மாலையிலோ கொஞ்சம் நேரம் உங்கள் வீட்டுக்குள்ளே இருந்து கொண்டு பழைய காலத்து அல்லது இந்த காலத்தில் விளையாடக் கூடிய விளையாட்டுகளைக் குடும்பத்துடன் சேர்ந்திருந்து விளையாடிப்பாருங்கள். அப்பப்ப… என்னா ஆனந்தம்… பல மணிநேரம் போறதே தெரியாம விளையாடலாம்.
9. இன்றைக்கு நம்மிடையே பிரபலமாகிக் கொண்டிருப்பது யோகா என்னும் அற்புதமாக மன அழுத்தப் போக்கி. இதை மட்டும் தினமும் அரைமணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் செய்து பாருங்கள் எந்தக் கொரோனாவும் உங்களை அண்டவே அண்டாது.
10. இவை அனைத்திற்கும் மேலாக ஒரு மிக முக்கியமான விஷயத்தை உங்களுக்குச் சொல்கிறேன் தயவு செய்து இதை அப்படியே உங்க குழந்தைகளுகுச் சொல்லிக் கொடுங்கள். உங்களின் குடும்பம், அதன் வரலாறு, குடும்ப உறுப்பினர்கள் பற்றியத் தகவல்கள், யார் யார் எங்கெங்கு இருக்கிறார்கள், என்னென்ன நிலையில் இருக்கிறார்கள், நீங்கள் இளமைப் பருவத்தில் என்னென்னச் சூழ்நிலைகளையெல்லாம் சந்தித்திருக்கிறீர்கள், என்னென்ன சாதனைகளையும், சோதனைகளையும் கடந்து வந்திருக்கிறீர்கள் என்பது பற்றிய அனைத்துத் தகவல்களையும் எடுத்துக் கூறுங்கள்.
இன்றைய பெற்றோர்கள் பிள்ளைகளிடத்தில் செய்வதற்குத் தவறக்கூடிய ஒரு மிகப்பெரிய விஷயத்தை அவர்களுக்கு எடுத்துக் கூறுவதற்கு கிடைத்திருக்கும் மிகப் பெரியச் சந்தர்ப்பம் என்றே இதைக் கருதுங்கள்.
இவற்றையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகச் செய்து வந்தால் 21 நாள் அல்ல எத்தனை நாள் வேண்டுமானாலும் வீட்டுக்குள்ளே பேரானந்தோடு இருந்து விடலாம்.
எந்த கொரோனா வைரசும் நம்மையும் நம்மை சார்ந்தவர்களையும் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
(இக்கட்டுரை ietamil E Journl இல் பிரசுமானது)
(கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர். கல்வியியல் கல்லூரி ஒன்றின் முதல்வர். அழைக்க: 9443559841, அணுக: drkamalaru@gmail.com)


உறவுகளை உடைத்தக் கொரோனா. CORONA MAKING CLEAVAGE IN RELATIONSHIPS

Friday, 27 March 2020

வியாதியைவிட, கொரோனா பீதியை போக்குவது முக்கியம்

வியாதியைவிட, கொரோனா பீதியை போக்குவது முக்கியம்


ஆரம்பத்தில் பத்திரிகைகளும் மீடியாக்களும் தான் அப்படி வரும்… இப்படிவரும்… எதைச் செய்யலாம்… எதைச் செய்யக் கூடாது… என்றெல்லாம் எழுதியும், வாசித்தும் மக்களை பீதிக்குள்ளாக்கின. ஆனால் ஆரம்பத்தில் மீடியாக்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் அந்த அளவிற்கு எந்த பாதிப்பையும் மக்களால் உணர முடியவில்லை. ஆகவே மக்கள் கொஞ்சம் மெத்தனமாகவே இருந்தனர்.
பின்னர் இம்மாதம் 31 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு, அரசு விடுமுறை அளித்தது, அதன் பிறகுக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது. அப்போது மக்கள் மத்தியில் லேசான பய உணர்வு இருந்தது. ஆனால் அதிலும் மாணவர்களுக்கு, இந்த நோயினால் எவ்வித பாதிப்பும் இல்லை என்பதைப் பெற்றோரும் பொதுமக்களும் உணரத் தொடங்கினார்கள். மட்டுமின்றி வீடுகளில் பிள்ளைகளின் குறும்புத்தனங்களைப் பெற்றோர்களால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. அதனால் எதற்குப் பிள்ளைகளுக்கு இந்த விடுமுறை எனப் பெற்றோர்களே சலித்துக் கொள்ளத் தொடங்கினார்கள்.

தொடர்ந்து சூழ்நிலைக்கு ஏற்ப கொஞ்சம் கொஞ்சமாக மாநில அரசுகள் களத்தில் இறங்கத் தொடங்கின. ஒவ்வொரு மாவட்டங்களின் நிலைமைக்கு ஏற்ப மக்களுக்கு அறிவுரை வழங்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கவும் தொடங்கின. அதில் முதல் முதலில் கேரளா மாநிலம் மக்களிடம் கோயில், தேவாலயங்கள் போன்ற புனிதத் தலங்களுக்குக் கூட மக்கள் செல்லக் கூடாது எனக் கட்டுப்பாடு விதித்தது. அதிலும் கூட ஒட்டுமொத்த மக்களும் அந்த அளவுக்கு அசையவில்லை.
இந்நிலையில் தான் திடீரென நம்ம பிரதமர் நரேந்திர மோடி களத்தில் இறங்கி கொரோனா வைரஸ் தாக்குதல் மூன்றாம் உலகப்போருக்கு நிகரானது. அதனால் மார்ச் 22 ஆம் தேதி மக்கள் அனைவரும் தாமாகவே முன் வந்து ஒரு நாள் முழுவதும் ஊரடங்கைக் கடைபிடிக்க வேண்டும் என மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் பிறகுதான் மக்கள் உண்மையில் கொரோனாவின் கொடூரத்தைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கினார்கள்.
அதோடு பெரும் பீதியடையவும் செய்தார்கள். முதலில் அந்தந்த மாநில அரசுகள் தாங்களாகவே முன் வந்து தங்கள் மாநிலங்களின் எல்லைகளை மூடினார்கள், பின்னர் மாவட்டங்களின் எல்லைகளை மூடினார்கள். இப்பொழுது மார்ச் 31 ஆம் தேதிவரை ஒட்டு மொத்த இந்தியாவிலும் 144 அவசர நிலைப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அதனால் ஒட்டு மொத்த மக்களிடையேயும் ஒரு விதமான பீதி பற்றிக்கொண்டுள்ளது. அந்த பீதி இரண்டு விதத்தில் உள்ளது. முதல் பீதி கொரோனா தங்களையும் தாக்கிவிடுமோ என்பது. இரண்டாவதாக அனைவரும் வீட்டுக்குள்ளையே முடங்கிக் கிடந்தால் எப்படி வாழ்க்கையை ஓட்டுவது என்ற பயங்கரப் பீதி.
மக்களின் இந்த இரண்டு விதமான பீதியும் நியாயமானதே. கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றி மக்கள் அடைந்துள்ள இந்தப் பீதி பற்றி இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசியத் தலைவரும், அகில உலக மருத்துவச் சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவருமான டாக்டர் விஜயகுமார் கூறும் போது;
“கொரோனா வைரஸ் தாக்குதல் என்பது கடுமையானதுதான். ஆனால் இன்றைக்கு மீடியாக்கள் ஏற்படுத்தும் பரபரப்பிற்கு ஏற்ற விதத்தில் நாம் பீதியடைய வேண்டிய தேவையில்லை. ஏனென்றால் இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டவர்களில் பத்து சதவீதம் மக்கள் மட்டுமே மரணமடைவதற்கான சாத்தியம் உண்டு. அதாவது நூறு பேரை இந்த வைரஸ் தாக்கினால் அதில் பத்து பேர் மட்டுமே உயிரிழக்கும் நிலைக்குச் செல்வார்கள். அதிலும் பெரும்பாலானவர்கள் அறுபது வயதைத் தாண்டியவர்களாகத்தான் இருப்பார்கள். மற்றவர்களை இதன் தாக்கத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம்” என்கிறார்.
மேலும் அவர் கூறும் போது; “அகில இந்திய மருத்துவ சங்கம் இதற்கான மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. அரசு அனுமதியளித்தால் அந்த சிகிச்சை முறையை மருத்துவர்கள் கையாண்டு இந்த வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு முடியும்” என்ற உத்தரவாதத்தையும் தருகிறார். “தற்போதைய சூழ்நிலையில் மக்கள் மத்தியில் கொரோன வியாதியைவிட பீதியே அதிகமாக உள்ளது. அந்த பீதியிலிருந்து மாறி மக்கள் தங்களைத் தாங்களே சுயக் கட்டுப்பாடு, சமூகத்திடமிருந்து விலகி இருத்தல், சுய சுத்தம் ஆகியவற்றின் மூலம் இந்த வைரஸ் தாக்குதலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும்” என்கிறார்.
எனவே ஒரு பக்கத்தில் முன்னெச்சரிக்கை என்கின்ற பெயரில் மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகள் ஒரு வகையில் நன்மை பயப்பதாக இருந்தாலும், இன்னொரு வகையில் அவை மக்களைப் பெரும் பீதியடையச் செய்திருக்கின்றன என்பதுதான் உண்மை. அந்த பீதியும் சமூக வலைதளங்கள் பரப்பும் தேவையற்றச் செய்திகளாலும், வதந்திகளாலும் உருவாகக் கூடியதுதான் அதிகமாக உள்ளது.
எனவே மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸ் தாக்குதலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு எடுக்கும் நடவடிக்கையைப் போன்று, மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பும் வகையில் தவறான கருத்துகளைப் பரப்பும் சமூக வலைதளங்கள் மீதும் கட்டுப்பாடு விதிப்பது இந்தக் காலகட்டத்திற்கு மிக அவசியமான ஒன்றாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  
கூடவே நீண்ட நாள் 144 தடை உத்தரவினால் வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடக்கும் மக்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்குத் தேவையான அனைத்து அத்யாவசியப் உணவுப் பொருட்களும் கிடைப்பதற்கான வழிவகைச் செய்வதும் அரசின் தலையாயக் கடமையாகும். இல்லையேல் கொரோனா வைரஸ் தாக்குதல் வியாதியை விட, மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் பீதியே அவர்களைக் கடுமையாகப் பாதித்து விடும்.
(இக்கட்டுரை ietamil E Journal இல் பிரசுரமானது)
(கட்டுரையாளர், முனைவர் கமல. செல்வராஜ் கன்னியாகுமரி மாவட்டம், அருமனையை சேர்ந்தவர். அழைக்க: 9443559841, அணுக: drkamalaru@gmail.com)



Monday, 2 March 2020

பள்ளி விதைகளே உலகின் விருட்சங்களாக மாறுங்கள்

பள்ளி விதைகளே உலகின் விருட்சங்களாக மாறுங்கள்




ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் பிறந்தால் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மத்தியில் ஒரு விதமான பதற்றமும் பரபரப்பும் இயல்பாகத் தொற்றிக் கொள்வது வழக்கம். அதிலும் 10 மற்றும் +2 வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அவர்களின் முகத்தில் அதுவரை இருந்த மகிழ்ச்சியும்… ஆனந்தமும்… அடங்கியே போகும்.
இதுவரை சாப்பிடு… சாப்பிடு… எனக் கெஞ்சிக்கொண்டிருந்த அம்மா, இப்போ எந்நேரம் வாய் திறந்தாலும் ஓயாம படியிடா… படியிடா… எனப் பாட்டாவே பாடிட்டிருங்காங்க… அங்கிள், என என் நண்பனின் +2 படிக்கும் மகன் என்னிடம் கூறியபோது, அவனுக்கு என்னப் பதில் சொல்வதென்று நானே திணறிப்போனேன்.

ஆனாலும் ஒருசில நிமிடங்களில் என்னைத் திடப்படுத்திக் கொண்டு அந்த மாணவனிடம் நான் கூறினேன், ‘இப்பவெல்லாம் வீட்டில இருக்கிற உங்க அம்மா மட்டுமல்ல, நம்ம நாட்டு பிரதம மந்திரி மரியாதைக்குரிய நரேந்திர மோடி கூட 10 மற்றும் +2 தேர்வு எழுதும் மாணவர்களைப் பற்றிக் கவலைப்படுராரு, அவர்கூட கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து மாணவர்களை டில்லியில் அழைத்து பயமின்றித் தேர்வு எழுதுவது எப்படி? என்று பேசி வருகிறார். கூடவே புத்தகமும் எழுதியிருக்கிறார். இப்படி வீட்டில் இருப்பவர்களும் நாட்டில் இருப்பவர்களும் உங்களைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள் என்றால் அதில் ஏதோ முக்கியத்துவம் இருக்கிறது என்றுதானே அர்த்தம் எனக் கூறினேன்.
அவனும் ஆமா… ஆமா… பெரிய முக்கியத்துவம் எனக் கூறிக்கொண்டே வீட்டிற்குள் சென்று விட்டான்.
அருமை மாணவர்களே ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள் இந்தப் 10 மற்றும் +2 தேர்வுகள், உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததென்றும், திருப்பத்தை ஏற்படுத்துவதென்றும். பத்தாம் வகுப்பு தேர்வில் நீங்கள் நல்ல மார்க் வாங்கினால், எதிர்காலத்தில் உங்கள் வாழ்க்கையை நிர்ணையிக்கும் +2 வகுப்பில் நீங்கள் விரும்பும் பாடத்தைப் படிப்பதற்கு முடியும். அதைப் போன்று +2 தேர்வில் நீங்கள் அதிக மார்க் பெற்றால், அடுத்து நீங்கள் புதுமையான நல்ல பாடங்களை, பிரபலமான கல்வி நிறுவனங்கள் அல்லது கல்லூரிகளில் படிக்க முடியும்.
இந்த இரண்டு வகுப்புத் தேர்வுகளிலும் நீங்கள் சமத்துகளாகத் தேர்ச்சிப் பெற்று விட்டால் அதன் பிறகு உங்களின் எந்தப் படிப்பிலும், உங்களின் பின்னால் வந்து, உங்களைக் கட்டாயப் படுத்தி படியுங்கள்… படியுங்கள்… என எவரும் ஓயாமல் கூறப்போவதில்லை. அதன் பிறகு நீங்கள் சுதந்திரப் பறவைகளாக மாறிவிடுவீர்கள். அதன் பிறகு இன்று பள்ளிகளில் விதைகளாக இருக்கும் நீங்கள், இந்த உலகத்தின் விருட்சங்களாக மாறிவிடுவீர்கள்.
1. அதனால் இப்போதைக்கு நீங்கள் செய்ய வேண்டியது, இந்த 10 மற்றும் +2 தேர்வில் நான் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற வைராக்கியத்தை மனதிற்குள் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
2. தினமும் அதிகாலையில், உங்கள் வீட்டிலுள்ள எவருடைய வற்புறுத்துதலும் இல்லாமல், நீங்கள் சுயமாகவே எழும்பி படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
3. ஆசிரியர்கள் கற்றுத்தரும் பாடங்களில் எப்படிப்பட்ட, ஐயப்பாடுகள் இருந்தாலும், அவற்றை அவர்களிடம் எவ்விதத் தயக்கமுமின்றி கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
4. தேர்வு முடியும் வரை நீங்கள் அதிகமாகப் பயன்படுத்தும் செல்போன், கம்பியூட்டர், டி.வி. இன்டர்நெட் ஆகியவற்றிற்கு நீங்களாகவே கொஞ்சம் விடைகொடுங்கள். அதனால்தான் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடும் போது, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள். ஆனால், தொழில்நுட்பம் உங்களைப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள் என அறிவுறுத்தியுள்ளார்.
5. தூக்கத்திற்கும் ஓய்விற்கும் அறவே விடை கொடுக்காதீர்கள். தேவையான அளவு தூக்கமும், ஓய்வும் கட்டாயம் தேவை.
6. தேவையில்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றுவதையும், ஊர் வம்பு அளப்பதையும் அறவே நிறுத்திக் கொள்ளுங்கள்.
7. கருத்தொத்த இரண்டோ மூன்றோ வகுப்புத் தேழர்களுடன், ஒத்திருந்து கலந்துரையாடிப் படிப்பது மிகுந்தப் பலனைத் தரும்.
8. இதுவரையிலும் படித்ததையெல்லாம் எழுதிப் பாருங்கள், அது உங்கள் நினைவாற்றலை அதிகரிக்கச் செய்து தேர்வை மிகத் துணிச்சலோடு எழுதுவதற்கு தூண்டுகோலாக இருக்கும்.
9. ஒரு வேளை இதுவரை ஒரு பாடத்தைக் கூட படிக்காமல் இன்று படிக்கலாம்… நாளை படிக்கலாம்… என நாட்களைக் கடத்தி வந்த மாணவர்கள் மனதில், இனி எப்படிப் படிப்பது? என்ற ஐயப்பாடு எழலாம். அவர்கள் அனைவரும் அந்த ஐயப்பாட்டை விட்டுவிட்டு என்னால் இனியும் முடியும் என்னும் தன்னம்பிக்கையுடன் திட்டமிட்டுப் படியுங்கள் நிச்சயமாக உங்களாலும் வெற்றி வெறுவதற்கு முடியும்.
10. தேர்வு எழுதும் போது மனதிற்குள் எவ்வித பதற்றமும். குழப்பமுன்றி நிதானமாகச் சிந்தித்து எழுதுங்கள்.
இந்த முறைகளைப் பின்பற்றி நீங்கள் 10 மற்றும் +2 தேர்வு எழுதினால் தேர்வில் மட்டுமல்ல உங்கள் எதிர்கால வாழ்விலும் வெற்றி பெறுவது நிச்சயம்.



ABOUT ME


பாண்டியன் சுந்தரம் is with Vinoth Pandian and Mani
அந்தத் திருமணம் ஆடம்பரமாக நடைபெற்றது. ஸ்ரீதேவி என்ற பெண்ணுடைய திருமணம் அது. எல்லோரும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்திருக்க இரண்டு பேர் கண்களில் மட்டும் கண்ணீர் திரண்டிருந்தது. அவர்கள் கமலசெல்வராஜ் அவரது மனைவி மினி செல்வராஜ்.."என்னப்பா, என்னம்மா.. மகிழ்ச்சியான தருணம் தானே இது? நம்முடைய அக்காவுக்குத் தானே திருமணம் நடைபெறுகிறது? நீங்கள் இருவரும் ஏன் கண் கலங்கி நிற்கிறீர்கள்?" என்று கேட்டவர்கள் வேறு யாருமல்ல கமலசெல்வராஜ்-மினி தம்பதியினரின் மகள் ஆதர்ஷாவும் மகன் ஆதர்ஷும்..
அவர்கள் 'அக்கா' என்று குறிப்பிட்ட ஸ்ரீதேவி கூடப் பிறந்த அக்கா இல்லை; ஆனாலும் கூடப் பிறந்த அக்கா மாதிரிதான். கமலசெல்வராஜும் மேலும் எட்டு நண்பர்களும் சேர்ந்து ஆதரவற்ற பெண்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் சிதறால் பகுதியில் சித்ராலயா இல்லம் ஒன்றைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள். 28 பிள்ளைகள் அங்கே இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் ஸ்ரீதேவி. ஸ்ரீதேவியை நர்சிங் படிப்பு படிக்க வைத்து இருக்கிறார்கள். இப்போது அவருக்குத் தகுந்த மணமகனைத் தேடிக் கண்டுபிடித்து, திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்..
கமலசெல்வராஜின் அப்பா கமலன் விவசாயி. அம்மா கமலம்மாள். குமரி மாவட்டத்தின் அருமனை கிராமத்தில் வசித்து வந்தார்கள். இவர்களுக்கு மூன்று பெண்கள். நான்கு ஆண்கள்.ஆக மொத்தம் ஏழு குழந்தைகள். மிக மிக வறுமையான குடும்பம். கமலசெல்வராஜுக்கு 11வயது நடக்கையில் அதாவது ஆறாம் வகுப்பு படிக்கும்போதே அப்பா இறந்துவிட்டார். குடும்பம் திக்குத் தெரியாமல் திகைத்து நின்றது."இனி நாங்க என்ன பண்ணுவோம்னு தெரியலையே. ஒரு தீப்பெட்டி வாங்கக்கூட வழியில்லேயே"என்று எல்லோருக்கும் மூத்த அக்கா சொல்லிக் கதறி அழுதார்.
அம்மா வாழ்க்கையை தைரியமாக எதிர் கொண்டார். சின்னச் சின்ன வேலைகளுக்குப் போக ஆரம்பித்தார். தமிழ்நாட்டில் ரேஷன் அரிசியை வாங்கி கேரளாவுக்குக் கொண்டுபோய் விற்று சம்பாதிக்க வேண்டிய அளவுக்கு வறுமை வீட்டில் தாண்டவமாடியது. அரிசி நிறைத்த பையை தலை சும்மாடாகக் கொண்டு போவார் அம்மா. நேர்வழியில் போனால் காவல்துறையினர் பிடித்துவிடுவார்கள் என்று அம்மா ரப்பர் தோட்டங்களுக்குள் புகுந்து புறப்பட்டுப் போவார். அவ்வளவு கஷ்டப்பட்டு தான் குடும்பத்தை கரையேற்ற வேண்டியிருந்தது.
இருந்தாலும் எல்லாக் குழந்தைகளுக்கும் படிப்பு கொடுப்பது என்பது அந்தத் தாய்க்கு மிகவும் முடியாத காரியமாகவே இருந்தது. அதனால் கமலசெல்வராஜை தனது சகோதரன் பொறுப்பில் படிக்கவைக்க அனுப்பினார் அம்மா. தாய் மாமாவின் தயவில் பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்தார் கமலசெல்வராஜ். அதன் பிறகு படித்துக்கொண்டே கூலி வேலைகள் பார்க்கப் போனார். ரப்பர் பால் வெட்டுகிற வேலை கிடைக்கவே அதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு பட்டப்படிப்பு படித்து முடித்தார் கமலசெல்வராஜ். ரப்பர் பால் எடுக்கும் போது உடம்பு பூரா துர்நாற்றம் வீசும். கல்லூரி படிக்கும் காலங்களில் ரப்பர் பாலுடைய துர்நாற்றம் தன்னிடம் இருந்து வந்து மற்ற மாணவர்கள் முகம் சுளிக்க அதுவே காரணமாகிவிடுமோ என்று எண்ணி அவர்களிடம் இருந்து விலகியே இருந்தார் கமலசெல்வராஜ். ஆனாலும் படிப்பில் மிகத் திறமைசாலியாக இருந்தார்.
பட்டப்படிப்பை முடித்து பின்னர் முனைவர் பட்டமும் பெற்றார் இவர். படித்த பாடங்கள் மூலம் சீர்திருத்தமான எண்ணங்களை தன் மனதில் வளர்த்துக் கொண்டு வந்தார் கமலசெல்வராஜ். தன்னுடைய குடும்ப வறுமை, வீட்டில் இவரோடு கூடப்பிறந்த பெண் பிள்ளைகள் பட்ட கஷ்டங்கள், இவரை வரதட்சணை தவிர்த்து புரட்சித் திருமணம் செய்ய வேண்டும் என்ற லட்சியத்தை நோக்கித் தள்ளியது. ஆரம்பத்தில் விதவைத் திருமணம், சாதி மறுப்புத் திருமணம் இவற்றையெல்லாம் செய்யலாம் என்று நினைத்த கமலசெல்வராஜ்
மனதில் கடைசியாக ஆதரவற்ற ஒரு பெண்ணுக்கு வாழ்வு தருவோம் என்ற எண்ணமே நிலைபெற்று இறுதியானது.
ஆதரவற்ற பெண்ணை திருமணம் முடிக்க கமலசெல்வராஜ் ஓராண்டு காத்திருக்க வேண்டியதாயிற்று. திருவனந்தபுரத்தில் அரசு நடத்தும் ஸ்ரீ சித்ரா ஆதரவற்றோர் இல்லம் சென்று தனது விருப்பத்தைச் சொன்னார் கமல செல்வராஜ். மாவட்ட ஆட்சியர் தான் அந்த மையத்தின் தலைவர். மையத்தில் உள்ள பெண்ணை திருமணம் செய்ய யாரேனும் விரும்பினால் அவரைப்பற்றிய எல்லா விவரங்களையும் முழுமையாக அறிந்து கொள்வது அந்த மையத்தின் நடைமுறை. மணமுடிக்கும் மணமகனுக்கு சொந்த வீடு நிரந்தர வருமானம் குடும்பத்தினர் சம்மதம் உடல் தகுதிச் சான்று இவையெல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பார்களாம்.கமல செல்வராஜ் இவற்றையெல்லாம் கடந்து வர ஓராண்டு ஆகிவிட்டது.
ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த 400 இளம்பெண்களில் கமலசெல்வராஜின் வயது தகுதிக்கு ஏற்ப மூன்று பெண்களை மையம் பரிந்துரைத்தது. அதில் மினியை தேர்வு செய்து திருமணம் செய்து கொண்டார் கமலசெல்வராஜ். பரதநாட்டியக் கலைஞராக இருந்தார் மினி. ஆதரவற்ற மினிக்கு நல் வாழ்வு கொடுத்த மகிழ்ச்சி கமலசெல்வராஜின் வாழ்வில் நிலைபெற, இப்போது இரண்டு குழந்தைகளுக்கு நல்ல தகப்பனாக விளங்கி வருகிறார். வீட்டிலேயே பரதம் சொல்லிக் கொடுத்து வருகிறார் மினி.
"சொல்லுவது எல்லோருக்கும் மிகவும் சுலபம்; சொன்னபடி நடப்பவர்கள் மிகவும் சொற்பம்" என்ற கவிதை வரிகளுக்கு ஏற்பவே வாழ்பவர்கள் மத்தியில், சொல்லும் செயலும் ஒன்றாக வாழ்பவர் தான் கமல செல்வராஜ். எம்., எம்.ஃபில், எம்.எட், டி.ஜே என பல பட்டங்கள் பெற்றிருக்கும் இவர், இப்போது படந்தாலுமூடு பகுதியிலுள்ள பிஎட் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வருகிறார். பத்திரிக்கையாளர், எழுத்தாளர், பேச்சாளர் என்ற பன்முகத் திறமை இவருக்கு உண்டு. இவரது கவிதை மற்றும் கட்டுரைகள் நூலாக்கம் பெற்றிருக்கிறது.இவரது படைப்புகள் மீது ஆய்வு செய்திருப்பவர்களின் எண்ணிக்கை ஐந்துக்கும் மேலாக இருக்கிறது.
15 ஆண்டுகளுக்கு முன்பே தன் உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக எழுதி வைத்திருக்கிறார் கமல செல்வராஜ். தன் காலத்துக்குப் பிறகு தன் உடல் பாகங்களால் பல உயிர்கள் பிழைத்திருக்கும் என்று நினைக்கும் போது மனசுக்கு நிம்மதியாக இருப்பதாக உணர்கிறார் கமலசெல்வராஜ். இப்படிப்பட்ட சேவை மனப்பான்மை அனைவருக்கும் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார் கமலசெல்வராஜ்!