Friday, 29 March 2019

தீரர்சத்தியமூர்த்தி.

தீரர் சத்தியமூர்த்தி: பதவியை உதறியதில் காமராஜரின் முன்னோடி

காமராஜரின் ஆட்சிகாலத்தை தமிழக அரசியலில் பொற்காலம் எனப் போற்றப்படுவதற்கு சத்தியமூர்த்தியின் வழிகாட்டலே காரணமாக இருந்தது.

சத்தியமூர்த்தி என்கிற பெயரே, உண்மையையும் நேர்மையையும் உணர்த்தும் ஒரு அடையாளமாக நிற்பதை நாம் அறிவோம். யார் இந்தச் சத்தியமூர்த்தி? என்றால், பெருந்தலைவர் காமராஜரின் அரசியல் குரு என ஒரு வரியில் பதில் கூறலாம். அந்த ஒரு வரியில் தீரர் சத்திய மூர்த்தியின் கீர்த்தி நமக்கு புலப்படும்.
தமிழகத்தில், தற்போதைய புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் என்னும் ஊரில் மிகுந்த ஆச்சாரத்தைக் கடைபிடிக்கும் குடும்பத்தில் திரு. சுந்தரேச சாஸ்திரி – திருமதி சுப்புலட்சுமி தம்பதிக்கு முத்தான மூன்றாவது குழந்தையாக 1887 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15 ஆம் நாள் மண்ணுதித்தவர் இந்தச் சத்தியமூர்த்தி. எட்டு குழந்தைகள் கொண்ட இக்குடும்பத்தில் நான்கு மகன்களில் மூத்த மகனாக இவர் பிறந்ததால், இவருக்குத் திருமயம் சுவாமியின் பெயராகியச் சத்தியமூர்த்தி என்றப் பெயரை சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர்.
சத்தியமூர்த்தியின் தந்தை ஒரு பண்டிதரும், தலைசிறந்த கல்வியாளரும், கூடவே ஒரு பிரபலமான வழங்குரைஞரும் ஆவார். சத்தியமூர்த்தியின் சிறு வயதிலையே தந்தை உயிர் நீத்தார். அதனால் பெரும் எண்ணிக்கைக் கொண்டக் குடும்பம் சற்றே பொருளாதார தடுமாற்றத்திற்கு உள்ளானது. அதனால் தனது தாய் மற்றும் சகோதர சகோதரிகளைக் கவனிக்கும் பொறுப்பு மிக இளம் வயது முதலே இவரை வந்தடைந்தது.
சத்தியமூர்த்தி சொந்த ஊரில் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் வரலாற்றுத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதோடு, சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்றார். சுப்பிரமண்ணியப் பாரதியாரைப் போல் இவரும் மாணவர் பருவத்திலிருந்தே சமூகச் சீர்திருத்ததிலும் அரசியலிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது வங்காளம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதை எதிர்த்து தனது சக மாணவர்களை ஒன்று திரட்டி ஒரு கண்டன கூட்டம் நடத்தியுள்ளார். கல்லூரிகளில் நடந்த மாணவர் பேரவைத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். அதுவே பிற்காலத்தில், அவருக்கு நீண்ட நெடிய அரசியல் பிரவேசத்திற்கு அச்சாரம் அமைத்துள்ளது.
1937 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர், சென்னை மாகாண கவுன்சிலராகவும் தேர்தெடுக்கப்பட்டார்.
சத்தியமூர்த்தி 1939 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி தலைவராகப் பணியாற்றிய பொழுது, சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவியது. அது நாட்டில் இரண்டாம் உலகப் போர்நடைபெற்றுக் கொண்டிருந்த இக்கட்டான காலகட்டம். தண்ணீருக்காக மக்கள் கஷ்டப்படுவதையும் கண்ணீர் விடுவதையும் சத்தியமூர்த்தியால் பொறுத்துக் கொள்வதற்கு இயலவில்லை. இந்தப் பிரச்சனையைத் தீர்க்க பிரிட்டிஷ் அரசுடன் அவர் பல முறை வாதாட வேண்டியதும் போராட வேண்டியதும் வந்தது. அதன் விளைவாக உருவாக்கப் பட்டதுதான் பூண்டி நீர்தேக்கம். அந்த நீர்தேக்கம்தான் இப்பொழுது சத்தியமூர்த்தி சாகர் நீர்தேக்கம் என அழைக்கப்படுகிறது.
சத்திமூர்த்தி ஒப்பாரும் மிக்காருமில்லா தேசியவாதியாகவும் செயல்பட்டார். சுதேசி இயக்கத்தில் தன்னை முழுமையாக அற்பணித்து, தீவிர ஈடுபாடு கொண்டு செயல்பட்டர். இதனைப் பொறுத்துக் கொள்ளாதப் பிரிட்டீஷ் அரசாங்கம் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. அதைத் தொடர்ந்து 1942 ஆம் ஆண்டு நடைபெற்ற “வெள்ளையனே வெளியேறு” போராட்டத்திற்காக மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
காந்தியடிகளின் உப்பு சத்தியாகிரகத்தை தமிழகத்தில் முன்னின்று நடத்தியவர் சத்தியமூர்த்தி. இதிலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். காந்தியடிகளோடு சத்திய மூர்த்திக்கு நெருக்கமான உறவு இருந்தது. அதனால் அவர் நடத்தும் போராட்டங்கள் அனைத்திலும் சத்தியமூர்த்தியைக் கலந்து கொள்ளச் செய்வார்.
இப்படிதான் ஒருமுறை, காந்தியடிகள் தனிநபர் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்த வேண்டும் என முடிவு செய்தார். அதில் ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு தலைவரை கலந்து கொள்ளச் செய்வது என்றும் தீர்மானித்தார். தமிழகத்தில் அந்தச் சத்தியாக்கிரகத்தை நடத்துவது சத்தியமூர்த்தி என காந்தியடிகள் முடிவு செய்தார்.
அந்தச் சமயத்தில் சென்னைப் பல்கலைக் கழகம் சத்தியமூர்த்திக்குத் துணைவேந்தர் பதவி அளிப்பதற்கு முன் வந்தது. உடனே அவர் காமராஜரிடம் கலந்தாலோசித்தார். அதற்கு அவர், “நீங்கள் அப்பதவியை ஏற்றுக் கொண்டால் காந்தியடிகள் நடத்தும் தனிநபர் சத்தியாக்கிரப் போராட்டத்தில் கலந்து கொள்ள இயலாது, எனவே அப்பதவியை ஏற்க வேண்டாம் எனக் கூறினார். அதனால் சத்தியமூர்த்தி, துணைவேந்தர் பதவியை வேண்டாம் என உதறிவிட்டார். ஒரு பல்கலைக் கழகத்தின் கௌரவமிக்க மிக உயரிப் பதவியைக் கூட நம் நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்காகத் துச்சமென நினைத்து உதறித்தள்ளிய உயர்ந்த உள்ளத்திற்குச் சொந்தக்காரர் சத்தியமூர்த்தி என்றால் அது மிகையாகாது.
பிறரை வசீகரிக்கும் பேச்சாற்றல் எப்படி அவருக்குள் இருந்ததோ அதைப்போன்றே எழுத்தாற்றலும் அவருக்குள்ளே இருந்தது. 1910 முதல் 1917 வரை பத்திரிகைகளில் செய்திகள், கட்டுரைகள் எழுதி வந்தார். நாட்டு நடப்புகள் பற்றி அவர் எழுதிய செய்திகளும் கட்டுரைகளும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தன.
அவர் 1954 முதல் 1963 வரை தமிழ் நாட்டின் தலைசிறந்த முதலமைச்சராக இருந்த காமராஜருக்கு ஒரு சிறந்த அரசியல் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். இரண்டு முறை திறம்பட செயல்பட்ட காமராஜரின் ஆட்சிகாலத்தை தமிழக அரசியலில் பொற்காலம் எனப் போற்றப்படுவதற்கு சத்தியமூர்த்தியின் வழிகாட்டலே காரணமாக இருந்தது. 1936 ஆம் ஆண்டு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தேர்தெடுக்கப்பட்ட சத்தியமூர்த்தி, காமராஜரை பொதுச் செயலாளராகவும் நியமித்தார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற போது காமராஜர், முதலில் சத்தியமூர்த்தி வீட்டுக்குச் சென்று, சுதந்திரக்கொடியை ஏற்றி, தன்னுடைய குருவின் மீது கொண்ட பக்தியை வெளிப்படுத்தினார். தமிழக முதலமைச்சராக பதவியேற்ற காமராஜர் முதலில் சத்தியமூர்த்தி வீட்டுக்கு சென்று, அவருடைய புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தியுள்ளார். மேலும், அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு ஆற்றிய தொண்டை நினைவுகூறும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமையகத்திற்கு “சத்தியமூர்த்தி பவன்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
பூண்டி நீர்தேக்கம் இவரால் தொடங்கப்பட்டு 1944 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், கட்டி முடிக்கப்பட்டபோது இவர் உயிருடன் இல்லை. இவருடைய முதன்மை சீடரான காமராஜர் அந்த நீர்தேக்கத்திற்கு “சத்தியமூர்த்தி சாகர் அணை” என தனது குருவின் பெயரைச் சூட்டினார்.
ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராகத் தொடர்ந்து குரலெழுப்பியதின் காரணமாகச் சிறையில் தள்ளப்பட்டு சித்திரவதைக்கு ஆளான ஒப்பாரும் மிக்காருமில்லாத் தலைவர் சத்தியமூர்த்தி, முதுகுத்தண்டு காயத்தினால் அவதிப்பட்டு 1943 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி சென்னை மருத்துவமனையில் தன்னுடைய 55 வது வயதில் சுதந்திர இந்தியாவின் விடியலைக் காணாமலே நம்மிடமிருந்து விடைபெற்று விட்டார்.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்” என்பது பொய்யா மொழிப் புலவரின் மெய்யானக் கூற்று. அதற்கிணங்க ஒரு மனிதன் மண்ணில் வாழும் போது, அவன் எவ்வளவுதான் பொருளும், பதவியும், அந்தஸ்தும் அடைந்திருந்தாலும், அவனின் குணாதிசயங்கள் போற்றுதலுக்குரியதாக இருந்தால் மட்டுமே அவன் மறைந்த பின்பும் இவ்வையகத்தில் மக்களின் மனங்களில் நிஜமாக வாழ்ந்து கொண்டிருப்பான். அதற்கு தலைசிறந்த ஓர் உதாரணப் புருஷனாக வாழ்ந்தவர்தான் சத்தியமூர்த்தி.
இவ்வையம் உள்ளளவும் அவர் கீர்த்தி நிலைத்திருக்கும் என்பது திண்ணம்.
(இக்கட்டுரை 28-03-2019 அன்று ietamil E Journal இல் பிரசுரமானது)


Monday, 25 March 2019

பெண்களுக்குத் தேவை துப்பாக்கியா? துணிச்சலா?

பெண்களுக்குத் தேவை துப்பாக்கியா? துணிச்சலா?
(இக்கட்டுரை ietamil E Journal இல் 23-03-2019 அன்று பிரசுரமானது)

பொள்ளாச்சி கொடூரங்கள் அண்மையில் நம்மை உலுக்கியவைதான். அதனூடே கோவை மாவட்டத்தைச் சார்ந்த, ஒரே வீட்டிலுள்ள இரண்டு சகோதரிகள் சேர்ந்து, “சமுதாயத்தில் பெண்களுக்கு உரியப் பாதுகாப்பு இல்லை. அதனால் பெண்களுக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமை வழங்க வேண்டும்” என கோவை மாவட்ட கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்ததும், கவனம் ஈர்த்தது.
இவ்விரு சகோதரிகளில் ஒருவர் கல்லூரி மாணவி. மற்றொருவர் பள்ளி மாணவி. இவர்களின் கோரிக்கையை, அனைத்து பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்கள் பெட்டிச் செய்தியாகவும் முக்கியச் செய்தியாகவும் வெளியிட்டன. ஆனால் என்னைப் பொறுத்தவரை இக்கோரிக்கையை படித்தவுடன் வேடிக்கையாகவே இருந்தது.
ஏனென்றால் இச்செய்தியைப் படித்த போது எனது நினைவிற்கு வந்தவர்கள், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சார்ந்த ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும் நான்கு மாணவிகள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் பகுதியில் உள்ள அரசு வேளாண்மைக் கல்லூரி மாணவி ஒருவரும் தான்.
அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகள், தங்களுக்குப் படித்துக் கொடுத்த பேராசிரியை நிர்மலா தேவி, தங்களை தவறான வழிக்கு இட்டுச் செல்வதற்காக, பல்வேறு ஆசைவார்த்தைகள் கூறி அழைத்தபோது, அவை எவற்றிற்கும் மசியாமல் மறுத்து விட்டார்கள். மட்டுமின்றி அந்தப் பேராசிரியை பேசிய அனைத்து ஆசை வார்த்தைகளையும் அப்படியே, அவர்களின் கைபேசியில் பதிவு செய்து மிகவும் துணிச்சலுடன் அதை வெளியுலகிற்குக் கொண்டு வந்தனர்.
அதன் விளைவு, அந்த நான்கு மாணவிகளால் தமிழகத்திலுள்ள எத்தனையோ கல்லூரி மாணவிகள், கல்வித்துறையிலுள்ள கறுப்பு ஆடுகளின் கொடூரக் காமவெறியாட்டத்திற்கு ஆட்படாமல் காப்பாற்றப்பட்டுள்ளனர். இல்லையேல், அவர்கள் நான்கு பேரின் வாழ்க்கை மட்டுமல்ல பொள்ளாச்சியில் நடந்தது போல் எத்தனையோ பெண்களின் வாழ்க்கை இன்றைக்கு அலங்கோலமாயிருக்கும் என்பதை அறிவுடையோர் அனைவரும் உணர வேண்டும். மட்டுமல்ல இவர்களின் துணிச்சலுக்கு முன்பு எந்த துப்பாக்கி நிற்கும் என்பதை, துப்பாக்கிக் கேட்கும் கோவை சகோதரிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இது போல் மற்றொரு சம்பவம்… திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர் ஆய்வு செய்து வந்தார். அவர் அதே கல்லூரியிலுள்ள மாணவியர் விடுதியில் தங்கிப் படித்துள்ளார். அந்த மாணவிக்கு, அக்கல்லூரிப் பேராசிரியரும் விடுதி கண்காணிப்பாளருமான தங்கப்பாண்டியன் என்பவர் பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார்.
அதனால் பேரதிர்ச்சியடைந்த அம்மாணவி அக்கொடுமையை அவ்விடுதியிலுள்ள உதவிக் கண்காணிப்பாளராகிய புனிதா மற்றும் உதவியாளர் மைதிலி ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் பெண்களாக இருந்தும் கூட தங்களின் இனத்தைச் சேர்ந்த இன்னொரு பெண்ணுக்கு ஏற்பட்டக் கொடுமையை எதிர்த்து நிற்காமல், தவறுக்கு துணை நின்றுள்ளனர்.
எனினும் சிறிதும் தயங்காமல் சென்னையிலுள்ள தனது பெற்றோரிடம் நடந்தவற்றையெல்லாம் எடுத்துக் கூறியதுடன் திருவண்ணாமலையிலுள்ள காவல் நிலைத்தில், தனக்குத் தீங்கிழைத்த கீழ்தரமானப் பேராசிரியர் மற்றும் அவருக்குத் துணைநின்ற இரண்டு பெண்கள் மீது வழக்கும் தொடுத்துள்ளார். இங்கும் அந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமைகள் அனைத்தையும், தனது பெற்றோரின் துணையுடன் வெட்ட வெளிச்சத்திற்குக் கொண்டுவராமல் தனது தன்மானத்தைக் காப்பதற்காகத் தனக்குத்தானே தாங்கிக் கொண்டு மௌனம் சாதித்திருந்தால், இன்று பொள்ளாச்சியில் நிலவும் நிகழ்வுகளுக்கு இவளும் ஒரு சாட்சியாகத்தானே இருந்திருப்பாள்.
ஆனால் அம்மாணவியின் துணிச்சலால் எத்தனையோ மாணவிகளின் வாழ்க்கை, அந்த தங்கபாண்டியன் போன்றவர்களிடமிருந்து காப்பாற்றப் பட்டிருக்கிறது என்றால், அன்பு சகோதரிகளே பெண்களுக்குத் தேவை அதீதமானத் துணிச்சலா? இல்லை ஒரு குற்றவாளியை ஒழிக்க இன்னொருக் குற்றவாளியை உருவாக்கும் துப்பாக்கியா? என்பதை சற்றே சிந்தித்துப் பாருங்கள். இவை இரண்டு சம்பவங்கள் மட்டும் தான் என்று தவறாகக் கருதி விடாதீர்கள். இதைபோல் எத்தனையோ துணிச்சல் மிகு சம்பவங்களை எடுத்துக்காட்டலாம். ஆனால் “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதற்கிணங்க இவற்றை மட்டும் எடுத்துரைத்துள்ளேன்.
ஒருவேளை இவற்றையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், அந்த இரண்டு சகோதரிகளின் கோரிக்கையை ஏற்று பெண்களுக்குத் தற்காப்பிற்காகத் துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான உரிமையை வழங்கிவிட்டால், என்னவாகும் என்பதற்கு இன்னொரு நிகழ்வும் எனது நினைவில் வருகிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஹரியானா மாநிலம் ரோட்டக் பகுதியைச் சார்ந்த ஆர்த்தி, பூஜா என்ற இரண்டு சகோதரிகளானக் கல்லூரி மாணவிகள் பஸ்சில் பயணம் செய்யும் போது, அதே பஸ்சில் பயணித்த குல்தீப், மோஹித், தீபக் என்ற மூன்று இளைஞர்கள், தங்களுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்தாகக் கூறி அந்த மூன்று இளைஞர்கள் மீதும் தாக்குதல் நடத்தியதோடு, அதை தங்களின் தோழிகளின் உதவியோடு செல்போனில் படம் பிடித்து, ஊடகங்களுக்கு அனுப்பி, பேட்டியும் அளித்துள்ளனர். கூடவே போலீசில் வழக்குப் பதிவு செய்து, அவர்களைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தங்களுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்த இளைஞர்களை அடித்துத் துவைத்தெடுத்தாகக் கூறிய சகோதரிகளுக்கு பாராட்டுகளும், பரிசுகளும் குவிந்துள்ளன. இரண்டு சகோதரிகளுக்கும் ஹரியான அரசு குடியரசு தினவிழாவில் தலா 31,000 ரூபாய் பரிசுத் தொகை வழங்கிக் கௌரவித்துள்ளது. கூடவே அனைத்து ஊடங்களும் இருவருக்கும் “வீரமங்கைகள்” எனப் பட்டம் சூட்டி சூளுரைத்துள்ளன. மட்டுமின்றி இரண்டு மாணவிகளும் கல்லூரிக்குச் செல்ல போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
குற்றமற்ற இம்மூன்று இளைஞர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்தும், சகப் பயணிகளின் சாட்சியின் அடிப்படையிலும் இச்சம்பவம் குறித்து ரோட்டக் சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையும் நடத்தியுள்ளனர். அந்த விசாரணையின் முடிவு அனைவரையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்குவதாக இருந்தது.
இவ்விரு சகோதரிகளும் பஸ்சில் ஏறி, ஒரு வயதான மூதாட்டியின் இருக்கையை அபகரித்துள்ளனர். இதனை அந்த பஸ்சில் இருந்த மூன்று இளைஞர்கள் மற்றும் சகபயணிகள் தட்டிக்கேட்டு, அந்த வயதான மூதாட்டிக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த இரு சகோதரிகளும் அந்த மூன்று இளைஞர்கள் மீதும் தாக்குதல் நடத்தி விட்டு, இளைஞர்கள் பாலியல் தொல்லைக் கொடுத்ததாகக் கபட நாடகமாடியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் பேரில் அந்த மூன்று இளைஞர்களையும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதிகள் எனக் கோர்ட் தீர்ப்பளித்து விடுதலை செய்துள்ளது.
இப்பொழுது அநியாயமாக பழிசுமத்தப்பட்டு சிறையில் வாடிய மூன்று இளைஞர்களின் பரிதாபமான எதிர்கால நிலையை எவராலேனும் கற்பனைச் செய்து பார்க்க முடியுமா?
கையில் துப்பாக்கி இல்லாமல் இருந்த போதே இவ்வளவு நியாயத்தை அரங்கேற்றும் இது போன்ற சகோதர மாணவிகள், கையில் துப்பாக்கி இருந்தால் என்ன செய்திருப்பார்கள்? அவர்கள் நினைத்ததைச் சாதிப்பதற்காக முன்பின் சிந்திக்காமல் எவரை வேண்டுமானாலும், எதற்காகவும் எந்த இடத்தில் வைத்தானாலும் சுட்டுத்தள்ளுவார்கள்.
எனவே தங்களின் பாதுகாப்பிற்காக துப்பாக்கிக் கேட்கும் சகோதரிகளிடத்தில் நான் கூறிக்கொள்ள விரும்புவது, அருமை சகோதரிகளே! நீங்கள் பள்ளிக் கல்லூரிகளில் படிப்பவர்கள். உங்களுக்கு ஆசிரியர்கள் கண்ணகி, சீதை, மணிமேகலை, பாஞ்சாலி, சத்தியவான் சாவித்திரி போன்ற புராண, இதிகாச, காப்பியத் தலைவிகளைப் பற்றியெல்லாம் படித்துத் தந்திருப்பார்கள். இவர்களெல்லாம் தங்கள் வாழ்க்கையில் பெரும் துயரங்களையும் துன்பங்களையும் அனுபவித்தவர்கள். அப்பொழுதெல்லாம் அவர்கள், தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்குத் துப்பாக்கியை கேட்கவில்லை, கொடும் வாளையும் எடுக்கவில்லை மாறாகத் துணிச்சலோடு அரசர்களைக்கூட எதிர்த்து நின்று வாதிட்டார்கள், வெற்றியும் பெற்றார்கள். அதனால்தான் அவர்களெல்லாம் அன்று பெரும் காவியங்களின் தலைவிகளாக மாறியுள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
அதுபோல் நவீன காலத்து பெண்களே, உங்களுக்கும் ஏதேனும் சூழ்நிலையில் அநீதியும் அக்கிரமமும் நிகழுமேயாயின் அருப்புக்கோட்டை மற்றும் திருவண்ணாமலை இன்னும் பல கல்லூரி மாணவிகளைப் போன்று உங்களுக்குள் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு, உங்களையும் தற்காத்து, மற்றவர்களுக்கும் பாதுகாப்பு கேடயமாக இருங்கள். அதற்காகத்தானே முண்டாசுக் கவிஞன் பாரதி, உங்களுக்காக உரக்க உரைத்துள்ளான் “அச்சமும் நாணமும் நாய்களுக்கு வேண்டுமென்று”.
பெண்களே துப்பாக்கி கனவைத் தூக்கி எறியுங்கள், துணிச்சலை மனதில் வளர்த்துக் கொள்ளுங்கள்.
(கட்டுரையாளர், முனைவர் கமல. செல்வராஜ் கல்வியியல் கல்லூரி ஒன்றின் முதல்வர்! அழைக்க: 9443559841. அணுக: drkamalaru@gmail.com )




Friday, 15 March 2019


                    பொது அறிவுச் சுடர்.

     வாழ்த்துரை.                                                 

                                            
     எழுத்தையே மூச்சாகக் கொண்டவர் பெரியவர் சி. வின்சென்ட் அவர்கள்.
     ஆரம்பக்காலத்தில் கையெழுத்துப் பிரதியாகத் தொடங்கிய அவரது எழுத்துப்பணி, இன்று பயனுள்ள ஒன்பது நூல்களின் ஆசிரியர் என்ற உன்னத நிலைக்கு அவரை உயர்த்தியுள்ளது.
     இதுவரை அவர் எழுதியுள்ள அனைத்து நூல்களும் விவிலியத்தை அடியொற்றியுள்ளவை.
     பொது அறிவுச் சுடர் என்னும் இந்நூல் அவற்றிலிருந்தெல்லாம் முற்றிலும் வேறுபட்டு, அனைத்துத் தரப்பினருக்கும் குறிப்பாக மாணவர் சமுதாயத்திற்கு மிகவும் பயனுடைய நூலாக அமைந்திருப்பது பாராட்டிற்குரியது.
     அறிவியலின் அபரிதமான வளர்ச்சியால் தகவல் திரட்டு என்பது அனைவரின் கைக்குள் வந்து விட்டது. இந்நிலையில் இதுபோன்ற நூல்கள் அவசியமா? என்ற வினா பலருள் எழுவது நியாயமானது.
     எவ்வளவுதான் அறிவியல் வளர்ச்சி அடைந்தாலும் அவற்றையெல்லாம் அனுபவிப்பதற்கு வாய்ப்பும் வசதியும் இல்லாத மக்கள் இவ்வுலகம் உள்ளளவும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இது போன்ற நூல்கள் வரப்பிரசாதமாக அமையும் என்பது திண்ணம்.
     எழுத்தாற்றலோடு, இசை, ஓவியம், சிற்பம், கட்டடம் கட்டுதல்  ஆகிய கலைகளிலும் கைதேர்ந்த கலைஞராக விளங்குபவர் இந்நூலாசிரியர் திரு. வின்சென்ட் அவர்கள்.
     அன்னாரது இடைவிடாத எழுத்து மற்றும் கலைப் பணிகள் மென்மேலும் சிறந்து விளங்க அனைவரும் இதயபூர்வமாய் துணை நிற்போம்.
                                         என்றும் சிநேகங்களுடன்…
                                         டாக்டர் கமல. செல்வராஜ்           
அருமனை,
01-11-2018.