Wednesday, 30 August 2023

உறவுகளை உணர்த்தும் திருவோணம்.

                               உறவுகளை உணர்த்தும் திருவோணம்.

ஆண்டு தோறும் அத்தம் நட்சத்திரம் தொடங்கித் திருவோண நட்சத்திரம் வரை பத்து நாள்கள் மாவேலியை வரவேற்க கேரள மக்கள், மனமெல்லாம் மகிழ்ச்சியுடன் கண்விழித்துக் காத்திருப்பர்.
தெருவெல்லாம் பூக்கோலம், வீடெல்லாம் மகிழ்ச்சியின் ஆரவாரம் இதுவே கேரள மாநிலத்தின் இன்றைய அடையாளம். அதுவே திருவோணப் பண்டிகையின் அற்புதம்.
மாவேலி மன்னன் நாடாண்ட காலத்தில் செங்கோலாட்சி தழைத்தோங்கி, மாதம் மும்மாரிப் பொழிந்து, வயல்வெளி செழித்து, வருமானம் பெருகி, மக்கள் மகிழ்ச்சியில் திழைத்தனர். இதனால் அந்நாட்டில் கொள்வாரும் இலர் கொடுப்பாரும் இலர் என்னும் நிலை நிலவியது.
மட்டுமின்றி மக்களிடையே எவ்வித ஏற்றத்தாழ்வுகளுமின்றி அனைவரும் ஒருதாய் மக்களாய் வாழ்ந்தனர் என்பதை “மாவேலி மன்னன் நாடு வாணிடும்கால் மனுஷரெல்லாம் ஒண்ணுபோலே” என்னும் மலையாளப் பாடல் வரிகளால் உணர முடிகிறது. இதனால் மக்கள் மன்னனைப் போற்றி புகழ்ந்தனர்.
இது மாவேலியின் மனதிற்குள் ஒருவித மமதையை ஏற்படுத்தி, இனி தேவலோகத்தையும் ஆள வேண்டும் எனும் பேராசையை உருவாக்கி, அவரின் அழிவுக்கு வித்திட்டது.
மாவேலியால் தங்களுக்கு ஆபத்து விளையும் எனக் கருதிய தேவர்கள், அபயம் வேண்டி மகாவிஷ்ணுவிடம் அடைக்கலம் புகுந்தனர். அவரும் அண்டி வந்தோருக்கு அடைக்கலம் கொடுப்பது தன் கருமம் எனக் கருதி, வாமன அவதாரம் பூண்டு மண்ணுலகு வந்து மாவேலியிடம், தனக்கு யாகசாலை அமைக்க மூன்றடி மண் மட்டும் வேண்டி நின்றார்.
மூன்றடி மண்ணுக்குள் மர்மம் இருக்கிறது என்ற சூச்சுமத்தை அறியாத மவேலி, எல்லாம் உணர்ந்த தன் குரு சுக்கிராச்சாரியரின் அறிவுரையையும் மீறி, மூன்றடி மண்ணை தாரைவார்த்தார் வாமனனுக்கு. மறுநிமிடம் எல்லாம் மாறிவிட்டது. இரண்டடியில் வானமும் பூமியும் அளந்த வாமனன் மூன்றாவது அடிக்கு கண்சிமிட்டி நிற்க, தலைதாழ்த்தி நின்றார் மாவேலி.
பாதாளம் செல்வது உறுதியென உணர்ந்தவர், வரமொன்று வேண்டினார் மகாவிஷ்ணுவிடம். ‘ஆண்டுக்கொரு முறை நாட்டுக்கு வந்து மக்களை சந்திக்க வேண்டும், அனுமதி அளித்தருளும்’ என யாசித்து நின்றார் ஆணவம் அடக்கி. ‘அப்படியே ஆகட்டும்’ என்றார் அவரும். அதன் பிறகு ஆண்டு தோறும் அத்தம் நட்சத்திரம் தொடங்கித் திருவோண நட்சத்திரம் வரை பத்து நாள்கள் மாவேலியை வரவேற்க கேரள மக்கள், மனமெல்லாம் மகிழ்ச்சியுடன் கண்விழித்துக் காத்திருப்பர் என்பது தான் திருவோணப்பண்டிகையின் ஐதீகம்.
திருவோணப்பண்டிகையின் ஐதீகம் இப்படி ஒருபுறம் இருக்க, இன்றையக் காலகட்டத்தில், கூட்டுக்குடும்பங்கள் சிதைந்து, உறவுகள் அனைத்தும் உடைந்து சின்னாபின்னமாகியிகும் நிலையில், இந்த திருவோணப் பண்டிகை உறவுகளை இணைக்கும் ஓர் அற்புதமான பண்டிகையாக திகழ்கிறது என்றால் அது மிகையாகாது.
பொதுவாக கேரள மாநிலத்திலுள்ள மக்கள், பெருவாரியாக வெளிநாடுகளில் சென்று தங்கள் வாழ்வாதரத்தை பெருக்கிக் கொண்டிருப்பது கண்கூடு. ஆனால் ஒவ்வோர் ஆண்டும் இந்தத் திருவோணப்பண்டிகையை கொண்டாடும் பொழுது அனைத்து மக்களும் எவ்வித சிரமமும் பார்க்காமல் தங்கள் சொந்த இடத்திற்கு வந்து, குடும்பத்துடன் கூடியிருப்பதை, வாழ்க்கையின் பெரும் பேறாகக் கருதுகின்றனர்.
அவர்களின் கொண்டாட்டம், அவரவர் வீட்டோடு மட்டும் நின்று விடாமல், இந்தப் பத்து நாள்களும் பண்ட பலகாரங்களுடன் உறவுகளையும் நாடிச் சென்று, அவர்களையும் உற்சாகப்படுத்தி, சொந்த பந்தங்களைப் பலப்படுத்திக் கொள்வதையும் வழக்கமாக்கியுள்ளனர்.
எனவே திருவோணப்பண்டிகையானது, வெறும் ஆட்டம்… பாட்டம்… கொண்டாட்டம்… என்னும் நிலையோடு மட்டும் நின்று விடாமல், சிதைந்து வரும் உறவு முறைகளை மீட்டுருவாக்கம் செய்து, கட்டிக்காக்கும் அற்புதமான உறவுகளின் உற்சாகத் திருவிழாகவும் திகழ்ந்து வருகிறது என்பது நிதர்சனமான உண்மை.
ஆண்டுதோறும் மாவேலியை வரவேற்போம்! மனெல்லாம் மகிழ்ந்திருப்போம்!!
முனைவர் கமல. செல்வராஜ்
அருமனை.
(இக்கட்டுரை 29-08-2023 ietamil இணைய வழி இதழில் பிரசுரமானது)

Monday, 14 August 2023

பல்கலைக் கழகங்களில் பொது பாடத்திட்டம்.

 

பல்கலைக் கழகங்களில் பொது பாடத்திட்டம்: அவசியம் இல்லாத அவசரம் ஏன்?



கட்டுரையாளர்: முனைவர் கமல. செல்வராஜ்

     தமிழகத்தில் எப்பொழுதெல்லாம் ஆட்சி மாற்றம் வருகிறதோ அப்போதெல்லாம் கல்வித் துறை ‘எடுப்பார் கைப்பிள்ளை’ யாகி, பல்வேறு கேலிக்கூத்துக்கு ஆளாவது வழக்கம். இதனை நிரூபிக்கும் வண்ணம் தான் தற்போது தமிழக அரசு கொண்டு வந்திருக்கும், தமிழகத்திலுள்ள அனைத்து கலை, அறிவியியல் பல்கலைக் கலைக் கழகங்களிலும் பொது பாடத்திட்டம் என்ற அறிவிப்பு.

     மத்திய அரசு 2020 இல் தேசிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்து, அதை இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியது. அதனை தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்தியுள்ளன. ஆனால் தமிழக அரசு அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, நடைமுறை படுத்தாததோடு மட்டும் நின்று விடாமல், தமிழகத்திற்கென்று மாநிலக் கல்விக்கொள்கையை வகுப்பதற்கு ஒரு குழுவையும் அமைத்துள்ளது. இது மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்குமிடையே மிகப்பெரியப் பனிப்போராகியுள்ளது.

     இந்நிலையில் தமிழக அரசு, மிகவும் அவசரக் கோலத்தில், தமிழகத்திலுள்ள அனைத்து கலை, அறிவியியல் பல்கலைக்கழகங்களிலும் இந்தக் கல்வியாண்டு முதல் பொது பாடத்திட்டத்தின் அடிப்படையில் கற்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.இதற்கான பாடத்திட்டங்கள் முழுமையாகத் தயாரிக்கப்பட்டுள்ளதா? அதனை யார் தயாரித்தார்கள்? எப்பொழுது தயாரித்தார்கள்? அதற்கான கருத்துக் கேட்பு நடந்ததா? கல்வியாளர்களிடமோ, பல்கலைக் கழகத் துணை வேந்தர்களிடமோ கலந்தாலோசிக்கப் பட்டதா? என்பவையெல்லாம் பரம ரகசியமாகவேயுள்ளன.

திடீரென இப்படியொரு அறிவிப்பை பல்கலைக் கழகங்களில் திணித்ததற்கு அனைத்துத் தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின்(யு.ஜி.சி) ஆலோசனையோ, அனுமதியோ பெறாமல் மாநில அரசு, தான்தோன்றித்தனமாக இப்படிப்பட்ட முடிவை எடுத்திருப்பது, எதிர்காலத்தில் தமிழகத்திலுள்ள பல்கலைக் கழகங்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க வழிவகுக்கும் என்கின்றனர் உயர்கல்வித் துறையை சார்ந்த கல்வியாளர்கள்.

யார் காரணம்?

1986 இல் ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது புதிய கல்விக்கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதை தமிழகத்தில் செயல்படுத்துவதற்காக, உயர்கல்வி மன்றம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அந்த அமைப்பு சரிவரச் செயல்படாமல் நீண்ட நெடுங்காலமாகச் செயலிழந்திருந்துள்ளது. கடந்த 2021 இல் மீண்டும் அம்மன்றம் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த மன்றம் தான் ஓராண்டு காலத்திற்குள், பொது பாடத்திட்டத்திற்கான 301 பாடங்களை அவசரக் கோலத்தில் உருவாக்கி, இந்தக் குழப்பத்திற்கு வித்திட்டுள்ளது.

இம்மன்றம், பாடதிட்டம் தயாரிப்பில் 922 பேராசிரியர்களை ஈடுபடுத்தி, 870 கூட்டங்களை நடத்தி, பாடதிட்டத்தை தயாரித்துள்ளதாக உயர் கல்வித் துறை தெரிவித்துள்ளது. ஆனால் அந்த போராசிரியர்கள் எந்தெந்த துறையைச் சார்ந்தவர்கள், கூட்டம் நடந்த விவரங்கள் பற்றியத் தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இவ்வாறு கூட்டம் நடந்தது தங்களுக்குத் தெரியாது என்று பெரும்பாலானப் பேராசிரியர்கள் மறுத்துள்ளனர். மட்டுமின்றி பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களிடமும் எவ்வித ஆலோசனைகளும் கேட்கப்படவில்லை என அரசு மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் தற்போதுள்ள தேசிய கல்விக் கொள்கையில் தனியார் பல்கலைக் கழகங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அப் பல்கலைக் கழகங்களால் மட்டுமே மாணவர்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்யும் விதத்தில், காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப புதிய புதிய பாடங்களை அறிமுகப்படுத்தி, கல்வியை வளப்படுத்த முடியும். இந்நிலையில் ஒரே பாடத்திட்டம் என்பது, தனியார் பல்கலைக் கழகங்களை வெகுவாகப் பாதிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்கின்றனர் தனியார் பல்கலைக் கழக நிர்வாகிகள்.

‘சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும், அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும், தன்னாட்சி அந்தஸ்துடன், தனித்தனிப் பாடத்திட்டங்களைத் தயாரிக்கின்றன. இதனால் புதிய பாடங்களைக் கற்ற பட்டதாரிகள் உருவாவார்கள். புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும். இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும் ஒரே பாடதிட்டம் என்ற நடவடிக்கை, தமிழக மாணவர்களின் கல்வித் தரத்தை குறைக்கும் செயல்’ என அண்ணா பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியிருக்கும் கருத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

எப்படி சாத்தியமாக்கலாம்?

தமிழக அரசின் இந்த முயற்சி வெற்றி பெற வேண்டுமென்றால், தமிழகத்தில் அனைத்து மருத்துவப் படிப்புக்களையும் உள்ளடக்கி டாக்டர் எம். ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் இருப்பது போன்றும், அனைத்து பொறியியல் படிப்புகளையும் ஒன்றிணைத்து, அண்ணா பல்கலைக் கழகம் இருப்பது போன்றும், பி.எட். படிப்புகளுக்காக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் இருப்பது போன்றும் அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளையும் ஒன்றிணைத்து ஒரே ஓர் பல்கலைக் கழகம் மட்டும் உருவாக்கினால் மட்டுமே இது சாத்தியமாகும். அதற்கு கல்வியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பு மக்களிடமும் நீண்ட நெடிய விவாதமும் கருத்துக் கேட்பும் நடத்த வேண்டும்.

நவீன தொழில் நுட்பம், அறிவியல் வளர்ச்சி, தொழில் வாய்ப்பு ஆகியவற்றை ஒன்றிரண்டு ஆண்டுகள் நன்கு அலசி ஆய்ந்து, தேவையான, தரமான பாடங்களைத் தேர்வுச் செய்து, பல்கலைக் கழக மானியக் குழுவின் அனுமதி பெற வேண்டும். அவ்வாறின்றி அவசரக் கோலத்தில் எடுத்திருக்கும் இந்த முடிவு நடைமுறை சாத்தியமற்றதாகவே இருக்கும்.

(கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ், கல்வியியல் கல்லூரி ஒன்றின் முன்னாள் முதல்வர். பல்வேறு கல்வி கருத்தரங்குகளில் பங்கேற்று உரையாற்றி வருபவர். அழைக்க: (9443559841); கருத்துக்களை அனுப்ப: (drkamalaru@gmail.com)

(இக்கட்டுரை 14-08-2023 அன்று ietamil E Journal இல் பிரசுரமானது.)