Thursday, 30 January 2020

இலக்கியமும் உளவியலும் : காப்பிய இலக்கியம் காட்டும் பெண்களின் உளவியல்.

இலக்கியமும் உளவியலும் : காப்பிய இலக்கியம் காட்டும் பெண்களின் உளவியல்.


பொதுவாக இவ்வையகத்தில் மிகவும் ஆழமானது கடல். அக்கடலின் ஆழம் என்ன என்பதை இன்றளவும் யாவராலும் அறிதியிட்டு உரைக்க இயலவில்லை என்பார்கள்.
அக்கடலின் ஆழத்தை விட பன்மடங்கு ஆழமானது பெண்களின் மனம். பெண்களின் மனதை மிகவும் மென்மையானது என்று இலக்கியங்கள் வருணிக்கின்றன. இந்த மென்மையான மனம் எப்படிப்பட்டது? அது எந்த சூழ்நிலையில் எப்படி சிந்திக்கிறது? எப்படி செயல்படுகிறது? என்பதை ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலம்பில், இளங்கோ தெளிவு படுத்துகிறார்.
கண்ணகியின் கணவன் கோவலன், ஆடலரசி மாதவியின் நடனத்தின் நயத்தில், தன் இதயத்தை அவளிடத்தில் இழந்து விட்டான். அதனால் இதுவரையிலும் தன்னுடன் இணை பிரியாது, ஈருடல் ஓருயிராக வாழ்ந்து வந்த கணவன் கோவலன், தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து மாதவியை மணந்து, அவளுடன் இல்லறம் நடத்தத் தொடங்கினான்.
தன் அன்பு கணவன் தன்னை விட்டுப் பிரிந்துச் சென்றதால் கண்ணகி, சொல்லி மாளாதத் துயரத்திற்கு ஆளானாள். அதனால் ஊணும் உறக்கமுமின்றி, ஆடை அலங்காரம் ஏதுமின்றி, தோழியரைக் கூட சந்திப்பதைத் தவிர்த்து தனிமையின் துயரத்தில் துடித்திருந்தாள்.
தன் தோழி கண்ணகி, அவளது எல்லா இன்பங்களையும் துறந்து, வாழ்க்கையே சூனியமாகி விட்ட நிலையில் இருக்கின்றாள், என்பதை உணர்ந்த அவளது தோழி தேவந்தி, அவளிடம் கூறுகிறாள், “நீ கணவனுக்கு வேண்டாதவளல்ல. ஆனால் நீ முற்பிறவியில் ஒரு நோன்பினைச் செய்யாமல் பிழைத்துள்ளாய். அதனால்தான் இந்தத் தீங்கு உனக்கு வந்து சேர்ந்துள்ளது. இதனை நீக்குவதற்கு காவிரிக்கு அருகே பூவின் இதழ்கள் விரிந்து பரந்து கிடக்கும் நெய்தல் நிலத்துக் கானலிலே, சோம குண்டம், சூரியகுண்டம் என்னும் இரண்டு பொய்கைகள் உள்ளன. அவற்றில் நீராடி அவற்றின் கரையில் இருக்கும் காமவேளின் கோயிலைத் தொழுதுவருவாயாயின் நின் கணவனோடு நீண்டகாலம் இவ்வையகத்தில் இன்புற்றிருப்பாய்” என்கிறாள்.
“மடலவிழ் நெய்தல்அம் கானல், தளம்உள,
சோமகுண்டம், சூரியகுண்டம்: துறைமூழ்கிக்
காமவேள் கோட்டம் தொழுதார், கணவரொடு
தம்இன் புறுவர் உலகத்துத் தையலார்:
போகம்செய் பூமியினும் போய்ப்பிறப்பர்: யாம்ஒருநாள்
ஆடுதும்” என்கிறாள்.
இதனைக் கேட்டதும் அந்த மென்மை மனம் கொண்ட தனது தோழியாகிய கண்ணகி, உடனே அதற்குச் சம்மதம் தெரிவித்து ஒத்துக் கொள்வாள் என எதிர்பார்த்தாள் அந்தத் தோழி. ஏனென்றால் பொதுவாக பெண்கள் இதுபோன்ற இக்கட்டானச் சூழ்நிலையில் இருக்கும் போது தனக்கு வேண்டியவர்கள் எதைக் கூறினாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனநிலையைக் கொண்டவர்கள்.
ஆனால் அவளுக்கோ அது ஒரு பலத்த ஏமாற்றமாக மாறிவிட்டது. ஒரேயொரு வார்த்தையில் தன் உள்ளக்கிடக்கையை, தனது தோழியிடம் உணர்த்துகிறாள்.
“அவ் ஆய் இழையாள்
பீடு அன்று” என்கிறாள்.
“பீடு” என்றால் பெருமை என்று பொருள். “பீடு அன்று” என்றால் அஃது பெருமைக்குரியது அல்ல என்று பொருள்.
கோவலன் கண்ணகியை விட்டுப் பிரிந்து சென்றபோது. கண்ணகி தன் கணவனை அடக்கியாளத் தெரியாதவள், தன் கணவனின் உணர்வுகளையும் உளவியலையும் அறிந்து அவனோடு ஒத்திணங்கும் தன்மை இல்லாதவள், கோவலனின் இரசனையை அறிந்து அவனை திருப்தியடையச் செய்யாதவள் என்றெல்லாம் குற்றச்சாட்டிற்கு ஆளானவள்.
ஆனால், அவளது தோழி கூறியக் கூற்றிற்குக் கண்ணகியுரைத்தப் பதிலுரை, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து அவள் மிகவும் அறிவுடைய நங்கை என்பதையும், நல்ல உளப்பாங்கு உடையவள் என்பதையும் உணரச் செய்துள்ளது.
மட்டுமின்றி, காப்பியக் காலம் தொடங்கி இன்றையக் கம்பியூட்டர் காலம் வரையிலும், சமூகத்திலும் குடும்பங்களிலும் மக்களுக்கு ஏதேனும் துன்பங்களும், தீங்குகளுக்கும், அவலங்களுக்கும் ஏற்படும் போது, அவற்றிற்கு கோயில்களிலும் சாமியார்களிடத்திலும் சென்று பரிகாரம் காண்பது இன்றளவும் ஒரு பழக்கமாக அனைத்துத் தரப்பு மக்களிடமும் புரையோடியுள்ளது.
தமிழகத்தில் புதையல் எடுப்பதற்கு நரபலியிடுவதும், கேரள மாநிலத்தில் ஒரு பாதிரியாரிடத்தில், தான் செய்த பாவங்களைச் சொல்லிப் பாவமன்னிப்பு கேட்கச் சென்ற பெண்ணைப் பல பாதிரிமார்கள் சேர்ந்து பங்கிட்டுப் பாவம் செய்தச் செய்தியும் மிகவும் பரபரப்பாக நாம் பத்திரிகைகளில் படித்ததும், மீடியாக்களில் பார்த்ததும்தானே?
நம்பிக்கை என்ற நோக்கில், இப்படிப்பட்டக் கொடுஞ் செயல்கள் சமுதாயத்தில் தொடர்ந்து நடைபெறாமல் இருப்பதற்கு, இளங்கோவடிகள் தனது காப்பியத்தில், கண்ணகி என்னும் அற்புதமான கதாபாத்திரத்தைப் படைத்து, அவளின் “பீடன்று” என்ற ஒற்றை வார்த்தை மூலம் எவ்வளவுப் பெரியச் சவுக்கடியைக் கொடுத்திருக்கிறார் இச்சமுதாயத்திற்கு என்பதை நினைக்கும் போது அனைவரின் உள்ளமும் பூரிப்படையத்தான் செய்யும்.
எனவே கற்காலம் முதல் கம்பியூட்டர் காலம் வரை இலக்கியங்கள் அனைத்தும் சில உளவியல் கருத்துகளை உள்ளடக்கி, அதன் மூலம் சமூகத்திற்கு மிகப் பெரிய உண்மையை உணர்த்துவதற்கு முற்படுகின்றன என்பதுதான் நிஜம்.
(கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர். அழைக்க: 9443559841, அணுக: drkamalaru@gmail.com)



Sunday, 19 January 2020

பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சு பாய்ச்சலாமா?

பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சு பாய்ச்சலாமா?


January 16, 2020 அன்று ietamil E Journal இல் பிரசுரமான எனது கட்டுரை.
முனைவர் கமல.செல்வராஜ், கட்டுரையாளர்

எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் ஒருவர் கன்னியாகுமரி மாவட்டம், கேரளா எல்லையோரத்தில், கடந்த 20 ஆண்டுகளாக மெட்ரிக்குலேஷன் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். அப்பள்ளியில் இந்து, கிறிஸ்தவர், முஸ்லீம் என அனைத்து மதத்தையும் சார்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.
அங்கு ஓணம், கிறிஸ்துமஸ், தீபாவளி, பொங்கல் என அனைத்துப் பண்டிகைகளும் பாரம்பரிய முறைப்படி மிகவும் சிறப்பாகப் கொண்டாப்படுவது வழக்கம். அந்த வகையில் இரண்டு தினங்களுக்கு முன்பு, எனது நண்பரைச் சந்தித்தபோது அவருக்கு அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துகளைக் கூறிக்கொண்டு, அவரிடம் கேட்டேன் ‘பள்ளியில் பொங்கல் விழா எப்பொழுது கொண்டாடப் போகிறீர்கள்?’ என்று. அதற்கு அவர் அளித்தப் பதில் என்னை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒருவேளை அந்தப் பதில் உங்களுக்கும் அதிர்ச்சியாகவே இருக்கும் என நினைக்கின்றேன். இதோ அவரது பதில்:
“முன்பெல்லாம் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடும் போது அனைத்து மாணவ மணவியரும் எவ்விதப் பாகுபாடுமின்றி விழாவில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொள்வார்கள். அதோடு, பொங்கலிட்டு, அந்தப் பொங்கலை, மாணவ மாணவியருக்குக் கொடுக்கும் போது அனைத்து தரப்பு மாணவர்களும் மிகுந்த மனமகிழ்ச்சியோடு அந்தப் பொங்கலை வாங்கிச் சாப்பிட்டு மகிழ்வார்கள். ஆனால், இப்போதெல்லாம் பொங்கல் விழா நடத்தும் போது சில மாணவ மாணவியர், அந்த விழாவில் எவ்வித பங்கும் எடுக்காமல் ஒதுங்கி விடுகிறார்கள். மட்டுமின்றி பொங்கலிட்டப் பிறகு அவர்கள் அந்தப் பொங்கலையும் சூரியனுக்குப் படையல் வைத்த எந்தப் பொருளையும் சாப்பிடுவதற்கு மறுக்கின்றனர்.
அந்த மாணவ மாணவிகளிடத்தில் ஏன் நீங்கள் இப்படி நடந்து கொள்கின்றீர்கள்? என்று கேட்கும் போது அவர்கள் அளிக்கும் பதில் அதிர்ச்சியல்ல பேரதிர்ச்சியாகவே உள்ளது. இப்படி பள்ளிக்கூடங்களில் பொங்கலிட்டு, படையல் வைத்துக் கொடுக்கும் எந்த ஒரு பொருளையும் வாங்கிச் சாப்பிடக் கூடாது. அது நமக்கு ஒவ்வாது என பெற்றோர் கூறியனுப்பியதாக அந்த மாணவ மாணவியர் கூறுகின்றனர் என அந்த நண்பர் மிகுந்த மன வேதனையோடு கூறினார்.
அதோடு மட்டும் அவர் நின்று விடவில்லை, மீண்டும் அவர் இப்படித் தொடர்ந்தார். ‘மாணவ மாணவிகளின் நிலை ஒருபுறம் இப்படியிருக்க மறுபுறம் சில ஆசிரியர்களும் இதே நிலையைத்தான் பொங்கல் விழாவில் கடைபிடித்து வருகின்றனர். அவர்களும் எந்த நிகழ்விலும் பங்கெடுப்பதும் இல்லை பொங்கலுக்காக வைக்கும் எந்தப் பொருளையும் சாப்பிடுவதுமில்லை. அவர்களிடம் கேட்டால் அது அவர்களின் மதத்திற்கு விரோதமானது’ எனக் கூறுகின்றனர்.
“இப்படி ஒருசில மாணவ மாணவிகளும், ஆசிரியர்களும் நடந்து கொள்வதினால் இப்பொழுதெல்லாம் பொங்கல் விழா நடத்துவதில் அதிக அக்கறை காட்டுவதில்லை” என மிகுந்த வேதனையோடு கூறினார்.
ஒன்றும் அறியாதப் பிஞ்சு குழந்தைகளின் நெஞ்சங்களில் இப்படி நஞ்சு பாய்ச்சும் பெற்றோர்களை எப்படி திருத்துவது? எல்லாம் தெரிந்தும் அறிவிலிகளாகச் செயல்படும் ஆசிரியர்களுக்கு என்னத் தண்டனை வழங்குவது?
நமது நாட்டில் கொண்டாடப்படும் ஒவ்வொரு பண்டிகைகளும், நம் நாட்டு பண்பாடின் அடையாங்கள் என்பதை இவர்களெல்லாம் எப்பொழுது உணரப்போகின்றார்கள்? அதிலும் தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையானது, எவ்வித சாதி, சமய வேறுபாடுமின்றி தமிழர்களுக்கே உரித்தான பண்பாடு மற்றும் பாரம்பரியத்தின் வெளிப்பாடே அன்றி வேறென்றுமில்லை என்பதை ஒவ்வொரு தமிழரும் உணர்ந்தாக வேண்டும்.
முதல் நாள் கொண்டாடப்படும் போகிப் பண்டிகையானது வீட்டில் இருக்கும் தேவையற்றப் பொருட்களை அகற்றி சுத்தம் செய்து, தூய்மைப் படுத்துவதற்கானதாகும். இந்தத் தத்துவத்தை மனிதனின் மனத்தோடு ஒப்பிட்டுக் கூறுகிறார்கள். மனிதன் தனது மனதில் இருக்கும் கோபம், பொறாமை, ஆணவம் போன்ற தீயக் குணங்களை அகற்றி, நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதாகும். எவ்வளவு உயர்ந்த வாழ்வியல் தத்துவம் இதற்குள்ளே பொதிந்திருக்கிறது என்பதை எல்லோரும் உணர்ந்து கொண்டால் இதில், சாதி, மதத்திற்கு இடமில்லை என்பது புரியும்.
இரண்டாம் நாள் கொண்டாடப்படும் தைப்பொங்கல், நமது வாழ்விற்கு ஆதாரமாக இருக்கும் விவசாயப் பொருள்களான நெல், மஞ்சள், கரும்பு, தானிய வகைகள், கிழங்கு வகைகள் அனைத்தையும் வைத்து, விளைச்சலுக்கு காரணகர்தாக்களாக இருக்கும் சூரியன், வருணன் உட்பட ஐம்பூதங்களுக்கும் நன்றி செலுத்தும் வைபோகமாகும். இது முழுக்க முழுக்க மனிதன் எப்பொழுதும் இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும், இயற்கைக்கு நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டும் என்னும் உயரியத் தத்துவத்தைப் பிரதிபலிப்பதேயன்றி வெறொன்றுக்கும் இங்கு இடமில்லை என்பதுதான் உண்மை.
மூன்றாம் நாள் கொண்டாடப்படும் மாட்டுப் பொங்கல் என்பது விவசாயத்திற்கு அடிப்படையாக இருக்கும் உழவுத் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் காளை, எருமை மற்றும் வீட்டில் வளர்க்கும் பசுவிற்கும் மரியாதை செலுத்துவதாகும். மனிதன் தனது சக இனமான மனிதர்களுக்கு மரியாதை செலுத்துவதோடு மட்டுமல்லாது, தனது வாழ்க்கைக்கு துணையாக இருக்கும் விலங்குகளுக்கும் மரியாதைச் செலுத்த வேண்டும் என்ற மிக உயரிய லட்சியத்தை உள்ளடக்கியிருப்பதே இந்த மாட்டுப் பொங்கலாகும்.
நான்காம் நாள் கொண்டாடப்படும் காணும் பொங்கல், மனிதர்கள் தங்களுக்குள் உறவுகளை மேம்படுத்துவதற்காக, தங்களின் அக்கம் பக்கத்திலுள்ளவர்கள், உறவினர்கள் ஆகியோரைச் சந்தித்து, தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்வதாகும். இது உறவுகளுக்குள்ளே ஒரு நெருக்கமான பாலத்தை உருவாக்கிக் கொள்வதற்கே அன்றி வேறு எதற்காகவும் அல்ல என்பதுதான் உண்மை.
நான்கு நாள் கொண்டாடப்படும் பொங்கல் விழாவிற்குள் சாதி, மத, இன, குல வேற்றுமைகள் இன்றி அனைவருக்கும் பொதுவான இவ்வளவு பெரியத் தத்துவத்தை அடக்கியிருக்கும் போது, பெற்றோர்களும் ஆசிரியர்களும் தங்கள் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் இந்த உயரிய நோக்கங்களை எடுத்துக்கூறி, அவர்களுக்குப் புரிய வைத்து, அவர்களின் வாழ்க்கையிலும் இவற்றையெல்லாம் பரம்பரை பரம்பரையாக கடைபிடிக்க வலியுறுத்த வேண்டுமே தவிர, அவர்களுக்கு தவறுதலானப் புரிதலை உருவாக்கி இவற்றிலிருந்தெல்லாம் வேறுபடுத்தி வைப்பது, நம் நாட்டின் பண்பாட்டிற்கும் பாரம்பரியத்திற்கும் வேட்டு வைப்பது மட்டுமல்ல, வருங்கால இளம் சந்ததியினரின் வாழ்க்கைக்கு வைக்கும் பெரிய சவால் ஆகும்.
எனவே, அரசாங்கம் வரும்காலங்களில் மக்களின் வாழ்வியலையும், நாட்டின் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பரதிபலிக்கும் அனைத்து பண்டிகைகளையும் அனைத்து கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி தொழில் நிலையங்களிலும் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும். மட்டுமின்றி கல்வி நிறுவனங்களில் இது போன்ற பண்டிகை கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருக்கும் ஆசிரியர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது போன்ற சம்பவங்கள் எனது நண்பரின் பள்ளியில் நடப்பது மட்டுமல்ல பெரும்பாலான அரசு, தனியார் பள்ளிகளில் சிறிது சிறிதாக அரங்கேறிக் கொண்டே வருகின்றன. எனேவே அரசாங்கமும் கல்வித்துறையும் கண்ணும் கருத்துமாக இருந்து இந்த விஷயத்தை கண்காணிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே நம் முதாதையர்கள் உருவாக்கி வைத்துள்ள தமிழர்களின் உயரிய கோட்பாடுகளைக் கட்டிக்காக்க முடியும்.

பாறைகளில் காதலி பெயர் எழுதலாமா? சங்க இலக்கியம் கற்றுத் தரும் நாகரீகம்

பாறைகளில் காதலி பெயர் எழுதலாமா? சங்க இலக்கியம் கற்றுத் தரும் நாகரீகம்


காதல் நாகரிகத்தை நவீன காலத்திலுள்ள காதலர்களும் கடைபிடித்தால் காதலால் நம்நாட்டில் ஏற்படும் எத்தனை எத்தனையோ பிரச்னைகள் காணாமல் போகும்.
January 11, 2020 04:08:32 pm
முனைவர் கமல. செல்வராஜ்.
மனித வாழ்க்கையில் தொன்மைக் காலம் முதல் நவீனக்காலம் வரை காதல் என்பது மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இதனை ஒரு விளையாட்டாக அல்லது பொழுதுபோக்காகக் கொள்ளவில்லை. மிகவும் கண்ணியமாகவும் புனிதமாகவும் கருதப்பட்டது.
காதலைப் பற்றி குறிப்பிடாத இலக்கியங்களுமில்லை, எழுதாதப் படைப்பாளர்களுமில்லை என்பது நிதர்சனமான உண்மை. அந்த வகையில் முண்டாசுக் கவிஞன் பாரதி கூட காதலைப் பற்றிக் கூறும் போது;
“காதல் காதல் காதல்,
காதல் போயிற் காதல் போயிற்
சாதல் சாதல் சாதல்.” என்கிறார்.
சங்காலம் தொடங்கி நவீன காலம் வரையிலும் காதலின் நீக்கும் போக்கும் கவனிக்கத் தக்கது. அந்த வகையில் சங்ககால இலங்கியங்களில் காதலை எப்படி உளவியலோடு ஒப்பிட்டுப் படைத்துள்ளார்கள் என்பதுதான் இக்கட்டுரை.
காதலுக்கே இலக்கணம் வகுத்தப் பெருமை தமிழின் முதுபெரும் இலக்கண நூலாகியத் தொல்காப்பியத்திற்கு உள்ளது. அந்நூலில் அதன் ஆசிரியர் தொல்காப்பியர் குறிப்பிடும் போது;
“மக்கள் நுதலிய அகன்ஐந்தினையும்
சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்” என்கிறார்.
பொதுவாக நாம் சுற்றுலா தலங்களுக்குச் செல்லும் போது, அங்கே இருக்கும் கட்டடங்கள், வரலாற்றுச் சின்னங்கள், பாறைகள், பெரிய பெரிய மரங்களில் கூட சில ஆண்களின் பெயர்களும் பெண்களின் பெயர்களும் அருகருகில் எழுதப்பட்டிருக்கும். போதாக்குறைக்கு அதன் அருகில் காதலின் அடையாளத்தைக் குறிக்கும், இதயத்தின் படங்களும் வரையப்பட்டிருக்கும். அது யாருடையப் பெயர் என்று பார்த்தால் ஒரு காதலன் காதலியின் பெயராக இருக்கும்.
இதயத்தில் இதமாக வைத்திருக்க வேண்டிய காதலன் காதலியின் பெயர்களை இப்படி பொதுவான இடங்களில் எழுதி வைத்து போலித்தனமானக் காதலை வெளிப்படுத்தும் காதலர்களுக்குக் கொடுத்திருக்கும் எச்சரிக்கைதான் தொல்காப்பியரின் காதல் பற்றிய இந்த வரையறை.
ஏன் காதலிக்கும் போது காதலன், காதலிப் பெயரைக் கூறக் கூடாது? அதில் என்ன தவறு? என்னும் வினாக்கள் எழுவது நியாயமே. காதலிக்கும் காலத்தில் காதலர்களின் பெயர்கள் வெளிப்பட்டால் அந்தப் பெயர்களை வைத்தே அவர்கள், மற்றவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக்கப்படுவார்கள். இதனால், அவர்கள் செல்லும் இடமெல்லாம் மன உளச்சலுக்குள்ளாவார்கள். அதனால், அவர்களின் காதல் தடைபட்டுப் போவதற்கு அல்லது அவர்கள், தங்கள் உயிரையே மாய்த்துக் கொள்வதற்கான சூழல் உருவாகும்,
இதனால் அவர்களின் பெயரைச் சுட்டாமல் இருவருக்கும் தலைவன், தலைவி என்ற மிக உன்னதமானப் பொதுப்பெயரே சூட்டப்பட்டுள்ளது. இலக்கியத்தில் காதலுக்குக் கூட உளவியல் ரீதியிலான கண்ணியம் கட்டிக்காக்கப்பட்டுள்ளது என்பது எவ்வளவு அற்புதமானது.
கண்டதும் காதல்…….கூடியதும் பிரிவு… என்ற காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு, பண்டைய தமிழர்களின் காதல் பண்பாடு எப்படி இருந்தது என்பதற்கு இதோ இன்னும் ஓர் அற்புதமான சான்றாதாரம்.
ஒரு தாய் தன் இல்லத்திற்கு அப்பால் ஒரு புன்னை மரத்தை நட்டு, தினமும் அதற்கு நீரூற்றி அது ஒரு மரம் என்றும் பாராமல் அதோடு கொஞ்சிப் பேசி வளர்க்கின்றாள். அதனை, தனது சிறு வயது மகள் மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறாள். ஆண்டுகள் சென்றது, அந்தச் சிறு புன்னை, ஒரு பெரிய மரமாக வளர்ந்து கிளைகள் படர்த்தி பலருக்கும் நிழல் தரும் ஓர் இயற்கைக் குடைபோல் மாறிவிட்டது. அப்புன்னை எப்படி வளர்ந்து பெரிய மரமாகியதோ அதைப் போன்று அந்தத் தாயின் சிறுபிள்ளையும் வளர்ந்து மணவாட்டிப் பருவம் அடைந்து விட்டாள்.
இப்பொழுது அந்த மகள் ஓர் இளைஞனுடன் காதல் வயப்படுகிறாள். இருவரும் படர்ந்து விரிந்து நிற்கும் அந்தப் புன்னை மரத்தின் அருகில் நின்று காதல் விளையாட்டில் ஈடுபடுகின்றனர்.
திடீரென அந்தக் காதல் தலைவிக்கு ஒரு தயக்கமும் நாணமும் தானாக வந்து விட்டது. உடனே அவள் நினைத்துப் பார்க்கிறாள். “ஐயகோ! இது நம் தாய் நட்டு நீரூற்றி வளர்த்த மரம் அல்லவா? அப்படியென்றால், இது நமக்கு தமக்கை உறவன்றோ? தமக்கையின் முன்னின்று எப்படிக் காதல் விளையாட்டு விளையாடுவது?’ என்று நாணிக்கோணி அங்கிருந்து ஓடியே விடுகிறாள். இதனை,
“விளையாட்டு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய,
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப,
நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும் என்று.
அன்னை கூறினள், புன்னையது நலனே-
அம்மா! நாணுதும், நும்மொடு நகையே”
என சங்க இலக்கியமான நற்றிணை நூலில் குறிப்பிட்டிருக்கும் இந்தப் பாடலானது, நவீன காலத்தில் கண்டதும் காதல் கொண்டு, கடற்கரையிலும், ஐஸ்கிரீம் கடையிலும், சுற்றுலாத் தலங்களிலும், பலரும் பயணிக்கும் பேருந்துகளிலும் அமர்ந்து கண்ணாமூச்சி விளையாடும் கண்ணியமில்லாப் போலி காதலர்களுக்கு ஒரு சாவு மணியாகும்.
இங்கே ஒரு மரம் என்பதல்ல பொருள்; ஒரு மனம் என்பதுதான் மையம். எதை எப்படி அணுக வேண்டும் என்ற பண்பாட்டை, நாகரிகத்தையன்றோ இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
காதல் ஒரு போதும் காமத்திற்கு இச்சையாகக் கூடாது. அது அன்புக்கு மட்டுமே அடையாளமாக வேண்டும் என்ற உளவியல் உண்மை அன்றோ இங்கே வெளிப்படுகிறது. சங்ககாலத்தில் கூறப்பட்டுள்ள இந்த காதல் நாகரிகத்தை நவீன காலத்திலுள்ள காதலர்களும் கடைபிடித்தால் காதலால் நம்நாட்டில் ஏற்படும் எத்தனை எத்தனையோ பிரச்னைகள் காணாமல் போகும். கூடவே, காதலர்களுக்குச் சமுதாயத்தில் நல்ல அங்கீகாரமும் கிடைக்கும்.
(கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர். அழைக்க: 9443559841, அணுக : drkamalaru@gmail.com )